No icon

தேவசகாயம்

தமிழ் மண் ஈன்ற மறைச்சாட்சி

உதயகிரியில் கோட்டை கட்டுதல்
வேணாட்டு மன்னர் ஆணைப்படி போர் முறைகளையும், ஆயுதங்களையும் ஐரோப்பிய நாடுகளின் முறையில் தயார் செய்ய டிலனாய் இடம் தேர்வு செய்தார். தக்கலை நகரத்தினுள் அமைந்த புலயூர்குறிச்சி உதயகிரி மலையை அதற்காக மன்னர் விட்டுக் கொடுத்தார். 85 ஏக்கர் பரப்பளவும் 200 அடி உயரமும், 15 அடி அகலமும் உள்ள கோட்டைச் சுவர்களையும் சுண்ணாம்பு, பதனீர் கலவையால் கட்டினார்கள். 1744 ஆம் வருடம் இக்கோட்டையின் பணி முடிவுற்றது. இக்கோட்டையைக் கட்டிய பணியாளர்களுக்குக் கூலி கொடுப்பது கட்டுமான பொருட்கள் வழங்கும் பொறுப்பும் நீலகண்ட பிள்ளையின் மேற்பார்வையில் நடைபெற்றன. இக்கோட்டையின் உள்ளேயே இரும்பு உருக்கி, பீரங்கி குண்டுகளும், துப்பாக்கிகளும் செய்யப்பட்டன. அதற்காகப் பயன்படுத்திய ஆலை அடுப்புகள் இப்போதும் அழியாத நிலையில் உதயகிரி கோட்டையில் காணப்படுகின்றன. இதைப்போன்று பத்மனாபபுரம் அரண்மனையின் வடக்கிலும், மேற்கிலுமாக இரு சிறிய குன்றுகளின் மேல் வெடிமருந்து தயாரிக்கும் ஒரு கோட்டையும் இறந்தவர்களின் ஈமக் கிரியை நடக்கும் ஒரு கோட்டையும் அமைக்கப்பட்டது. பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து தெற்கே உதயகிரி கோட்டைக்குச் செல்ல ஒரு நேர்வழி சாலையும் அமைக்கப்பட்டது. டிலனாய் தன் குடும்பத்தாருடன் உதயகிரி கோட்டையின் மேற்கு ஓரத்தில் இருக்கும் கட்டடத்தில் தங்கினார். இம்மாளிகையின் அமைப்பைக் கவனிக்கும்போது தடையின்றி டிலனாய் வெளியே தொடர்பு கொள்ளவும் கோட்டையின் உள்ளே செல்லவும் வசதியாக வெளிநாட்டுப் பாணியில் கட்டப்பட்டிருப்பதை அறியலாம். இம்மாளிகைக்கு தனியாக ஒதுக்கப்பட்ட 18 ஏக்கர் நிலத்தின் இடத்திலேயே டிலனாய் குடும்பத்திற்காக புனித திரேசாள் ஆலயமும் அமைக்கப்பட்ட இக்கோவிலின் சுவர்கள் மட்டும் இப்போது உள்ளது. இதுவும் இடியும் தருவாயில் உள்ளது.


டிலனாயின் சேவை இவருக்கு தேவை என்பதாலும் மனநிறைவோடு இருந்தால்தான் தன் முழுக்கவனத்தையும் தன் பணியில் செலுத்துவார் என்ற கண்ணோட்டத்திலும் மன்னர் இவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வந்தார். டிலனாயும் தன் சொந்த நாட்டை நேசிப்பதுபோல் தன் அறிவுக்கு எட்டிய நல்ல செயல்களைச் செய்தார். இதனால் இவர் மன்னரால் மிகவும் மதிக்கப்பட்டார். ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் மட்டும் தலையிட அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நீலகண்டபிள்ளை காலப்போக்கில் டிலனாயின் குடும்ப நண்பரானார். ஒருநாள் தனக்கு நட்டாலம் மருதங்குளக்கரை குடும்பத்தில் ஏற்பட்ட துன்பங்களையும், இழப்புகளையும் நண்பர் டிலனாயிடம் கூற நேர்ந்தது. கன்று காளைகள் நலிந்து மடிந்தன. விவசாயப் பொருட்கள் நஷ்டப்பட்டு களஞ்சியங்கள் காலியாயின. குடும்ப உறுப்பினர்கள் பலர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். இது குலதெய்வத்தின் கோபம் என்று குடும்பத்தினர் எண்ணி அதற்கான பரிகாரச் சடங்குகளைச் செய்தனர். இதில் பயன்  ஏற்படாததைக் கண்டு உற்றார் உறவினர் உள்ளம் வருந்தினர். நீலகண்டபிள்ளையும் முகமலர்ச்சியின்றி பெரும் கவலையுடன் சோர்ந்து போனார்.


பலநாட்களாக நீலகண்டன் உதயகிரி கோட்டைக்குள் பணி புரியும்போது வழக்கத்திற்கு மாறாக மிகுந்த கவலையோடு சோர்ந்து காணப்பட்டார். கோட்டையின் தளகர்த்தரான டிலனாய் இதை கவனித்தார். நண்பன் நீலகண்டனிடம் “நீங்கள் கவலை கொண்டிருப்பதன் காரணமென்ன?” என்று கேட்டார். நீலகண்டன் தனது குடும்பத்தில் ஏற்பட்டுவரும் துன்பதுயர நிகழ்ச்சிகளை கவலை தோய்ந்த முகத்தோடு கூறினார்.

குடும்ப கவலை
ஆம், ஆடு, மாடுகள் மடிந்ததனால் நிலவருமானம் தேய்ந்தது. நோய் நொடிகளில் நொந்துபோயின. அல்லல்கள் சூழ்ந்தன. வேண்டாத தெய்வமில்லை. வழிபடாத கோவில் இல்லை. காளியின் கோபம் தீர பூஜை வழிபாடுகள் நடத்தியும் யாதொரு மாற்றமும் இல்லை என்றார். நண்பனின் நலிவு கண்ட டிலனாய், நீலனுக்கு புரியும்படியாக பல விளக்கங்களை எடுத்துரைத்து அமைதிப்படுத்தினார். அன்பனே, அழிந்துபோகும் பூவுலகச் சுகங்களுக்காகத் தாங்கள் இத்தனை துயர் கொள்வதேன்? தூக்கத்தின் கனவு போன்றும் நீரின் மேல் குமிழி போன்றதும் தான் இவ்வுலக வாழ்க்கை. இவ்வுலகம் முழுவதையும் நீங்கள் தனதாக்கிக் கொண்டாலும் உங்கள் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்? என்று தூய சவேரியாரின் மனமாற்றத்தை எடுத்துக்காட்டாய் கூறினார். இதைக்கேட்டு மனம் நெகிழ்ந்தார் நீலகண்டன். ஆன்மாவின் வாழ்விற்காகத்தான் கடவுள் உடலைத் தருகிறார். இவ்வுலகச் சுக செல்வங்களுக்காக நீங்கள் ஏன் கவலை அடைய வேண்டும்? கடவுள் அன்பானவர். எல்லா படைப்புகளையும் காப்பாற்றுகிறார். அவரின்றி அணுவும் அசையாது என்றுகூறி யோபுவின் வரலாரையும், பரிசுத்த திருவிவிலியத்தைப் பற்றியும் விளக்கினார்.

விவிலிய விளக்கம்
சகோதரா, ஒவ்வொருவரின் உளப்பூர்வமான வாழ்வின் அடித்தளத்தில் இருந்துதான் இன்பமும், துன்பமும் உருவாகின்றன. இன்ப துன்பங்களை அனுபவிக்கும்போது நாம் கடவுளை மறப்பதனால் தோன்றும் இடைவெளியில்தான் மனம் புண்படுகிறது. கடவுளைப் புரிந்துகொண்டு அவரோடு சேர்ந்து வாழ்பவனுக்கு இன்பமும், துன்பமும் ஒன்றேதான். உயர்வு தாழ்வு அகன்றுவிடுகிறது. இந்தச் சமநிலையில் இன்பத்தை வெறுத்து, துன்பத்தை தனதாக்கிக் கொள்கிறான். உலக இன்பத்தில் கடைசி முடிவு எப்போதும் துன்பமாகவே பரிணமிக்கும் என விவிலிய வரிகளுக்கு விளக்கமும் தந்தார்.
கடவுள் ஒருபோதும் மனிதனைச் சோதிப்பதில்லை. என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன். அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன். ஆண்டவர் அளித்தார் ஆண்டவர் எடுத்துக் கொண்டார் (யோபு 121) என்ற இறைவார்த்தையையும், இன்றைய உலக வாழ்க்கையையும் விளக்கிக் கூறலானார். தந்தையான கடவுள் தன் பிள்ளைகளான மனிதனை அன்பு செய்கிறார். அவரது அன்பு இன்பத்திலும், துன்பத்திலும் ஒன்றே. இறையருள் ஒன்றினால் தான் மனிதகுலம் அமைதிபெறும். இந்த சமாதானம் நிறைவானது. முடிவில்லாதது. இந்த அமைதியான நிலையில்தான் நிறைவான மகிழ்ச்சியை ஆன்மா அனுபவிக்கிறது. துன்பங்களை இன்பமாக மாற்றி ஆபத்துக்களை அகற்றும் சக்தியும் அதற்கு உண்டு என்றும் உலகில் நாம் இழந்துபோவது ஒன்றுமில்லை. எல்லாம் கடவுள் தந்தார் எல்லாம் அவருக்கே சொந்தம் என்று புரிந்துகொள்ள வேண்டும். அப்போது கடவுளின் அன்பு நமக்குக் கிடைக்கும் என்று வேத புத்தகத்திலுள்ள உண்மைகளை அவருக்குப் புரிய வைத்ததோடு யோபு வாழ்க்கையை விளக்கிக் கூறி அனைத்திற்கும் முழு விளக்கம் தந்தார். அத்துடன் திருவிவிலியம் ஒன்றைப் பரிசாகவும் தந்தார். அதை முழுமையாக படித்த நீலகண்ட திருமறையை தழுவ ஆர்வம் கொண்டார். 


     கடவுள் தன் பிள்ளைகளாகிய மனிதர்களுக்கு வெளிப்படுத்தின நல்ல செய்திகளை நீலகண்டன் புரிந்து கொண்டார். அதை போதிக்கும் அப்போஸ்தலப் பணி கொண்ட கூட்டத்திற்கு, "திருச்சபை" என்று பெயர். அதன் தலைவர் "இயேசு" என்பதை நன்றாகப் படித்து தெரிந்து கொண்டார். அன்றைய சேரநாட்டு அடிமைகளான தாழ்த்தப்பட்ட மனிதர்களும் கடவுளின் பிள்ளைகளே என்பதை நீலகண்டன் உறுதியாக நம்பினார். இதற்கு டிலனாய் காரணமாக இருந்தார்.


கிறிஸ்துவின் வாழ்வை தனதாக்கி வாழ ஆர்வம் கொண்டார். மனிதனை உருவாக்கி வழிநடத்துவதும் கடவுளின் பராமரிப்பு என்பது அவரது இதயத்தில் ஆழப்பதிந்தது. அவரால் புரிந்துகொள்ள இயலாதவற்றை டிலனாயிடமும், பத்மனாபபுரத்தில் வாழ்ந்திருந்த இயேசுசபை அருட்தந்தை பீற்றர் பெரைரோஸ், அடிகளிடமும் கேட்டு அறிந்து கொண்டார்.                                                                                                 
 (தொடரும்)

Comment