No icon

மன்றாடி மகிழ்ந்திடுவோம் - 41 அன்னா - 02.05.2021

அன்னா - 

Fr. ஜேம்ஸ் பீட்டர், கிறிஸ்துவின் சேனை
மாத இதழின் ஆசிரியர்

எல்கானாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாம் மனைவி பெனின்னாவுக்கு 10 பிள்ளைகள். முதல் மனைவி அன்னாவுக்கோ குழந்தை பேறு இல்லை.
எத்தனையோ மருந்துகள் எடுத்தும், காத்திருந்தும் பயனில்லை. மனிதர் கைவிடும்போது கடவுள்தானே துணை.
அன்னா, இயல்பாகவே தெய்வ பயமுள்ளவள். கடவுளோடு உறவாடுவதில் இன்பம் காண்பவள்.
எருசலேம் தேவாலயத்திற்கு வந்திருந்தபொழுது, மணிக்கணக்காக மன்றாடினாள். அவள் மன்றாடுவதை, அங்கிருந்த குரு ஏலி பார்த்துக் கொண்டிருந்தார். அன்னாவின் உதடுகள் அசைந்தன. ஆனால், சத்தம் எதுவும் வெளிப்படவில்லை. ஆகவே, ஏலிக்கு, அன்னாவைக் குறித்து ஐயம் எழுந்தது. குடித்துவிட்டு புலம்பிக் கொண்டிருக்கிறாளோ என்று நினைத்து, எவ்வளவு காலம் நீ குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து என்றார்.
அதற்கு அன்னா, சொன்ன மறுமொழி, "எவ்வளவு நற்குணமுள்ளவள், சாந்தமுள்ளவள், முதிர்ச்சியுள்ளவள் என்பதை வெளிப்படுத்துகிறது." இல்லை, என் தலைவரே, நான் உள்ளம் நொந்த ஒரு பெண். திராட்சை இரசத்தினாலோ, வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். உம் அடியாளை ஒரு கீழ்த்தரப் பெண்ணாகக் கருத வேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் பேசிக்கொண்டிருந்தேன்” என்று கூறினார் (1சாமு 1:9-18).
குரு ஏலி, தனக்கில்லாத இறை செப அனுபவம் அன்னாவிடம்,  இருந்ததைக் கண்டு, “மன நிறைவோடு செல், இஸ்ராயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுதலைக் கேட்டருள்வார்” என்று பதிலளித்தார். அன்னாவின் முகம் மலர்ந்தது. இதன் பின் அவள் முகம் வாடியிருக்கவில்லை.
அன்னாவின் செப மகிமையை ஏலி எப்படி கண்டு கொண்டார்.
“தூய ஆவியார், நமது வலுவற்ற நிலையில் நமக்கு துணை நிற்கிறார். ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார்தாமே சொல் வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள், தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காக பரிந்து பேசுகிறார்.
அதுமட்டுமல்ல, அதே ஆவியார், மன்றாடுபவரின் நன்மைக்காகவே அனைத்திலும் ஒத்துழைக்கிறார் (உரோ 8:26-28).
அன்னாளின் உள்ளம் எவ்வளவாய் உடைந்திருந்தது என்றால், அக்கினியின் ஆவியார் அவள் உள்ளத்துள் நிறைந்து தூப நறுமணப் புகையாய் வெளிப்பட்டார். ஆகவே, அன்னா பேசிய வார்த்தைகள் கேட்கவில்லை. அவளுக்குள்ளிருந்த ஆவியாரே அசைவாடி இசைப்பாடினார்.
அன்னா, ஆண்டவரை எவ்வளவாய் நேசித்தாள் என்றால், அவரது அன்பில் நனைந்து, பரவச நிலையில் மகிழ்ந்திருந்தாள்.
இந்த உணர்ச்சிவசப்படுதலில் அறிவும் இருந்தது; உணர்வும் இருந்தது.
இன்றைய ஆவிக்கூட்டங்களில், உணர்ச்சி பெருவெள்ளம் இருக்கிறது. பாடல், இசை முழக்கத்தின் வேகத்தைப் பொறுத்து, ஆட்டம், பாட்டம், உருளுதல், சாய்தல் என்று பல காட்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இவைகளெல்லாம், தூய ஆவியாரின் ஆளுகையால் வெளிப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
சுய உணர்விழந்த நிலைதான், தூய ஆவியாரின் அருள்பொழிவு என்றும் சொல்லிவிட முடியாது.
இசைக்கலைஞர்களின் இசை கேட்டும் ரசிகர்கள் ஆட்டம் போடுகிறார்கள். நடிகரின் நடிப்புத் திறனைப் பார்த்து கண்ணீர் உருக்கிறார்கள்; அரசியல் தலைவரின் சூடான பேச்சில், தொண்டன் மயங்கி விடுகிறான்.
எனவே, மேலோட்டமான பரவசங்களை நம்பி ஏமாந்து போகக்கூடாது. ஆனால், உணர்ச்சிவசப்படுவதை கொச்சைப்படுத்தவும் முடியாது.
அன்னாவிடம் ஆவிக்குரிய அனுபவமும் இருந்தது. ஆவிக்குரிய கனிவாழ்வும் இருந்தது. தான் வாக்களித்தபடியே, தன் மகனை, இறைப்பணிக்காக ஆலயத்தில் ஒப்படைத்தாள்.
ஆகவே, புனித பவுல் கொலோசெயருக்கு எழுதிய வாக்கை நினைவுகூறுவோம். “நீங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்று, கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடைய வேண்டும். நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து, அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்து கொள்ளவேண்டும். நீங்கள் பயன்தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப் பற்றிய அறிவில் வளர வேண்டும் (கொலோ 1:9-100).

Comment