No icon

வீரமாமுனிவர் வடித்த வளனார் -3

வீரமாமுனிவர் வடித்த வளனார் -3

(தெவிட்டா தேம்பாவணியிலிருந்து வளனாரின் வாழ்வியல்)

-அருள்சகோ. ம. விவின் ரோட்ரிக்ஸ் கா.ச., கார்மெல் இறையியல் கல்லூரி, திருச்சி

 ஒருவரை புரிந்துக்கொள்ள அவரின் நாட்டையும் நகரையும் அதன் புவியியல் அமைப்பையும் வளமையையும் ஆகிய பின்னணியை தெரிந்துகொள்வது இன்றைய மானுடவியல் பார்வையாகும். எனவே, இந்த தொடரில் வீரமா நாட்டுப்படலத்திலும் நகரப் படலத்திலும் குறிப்பிடும் வளங்கள் எவ்வாறு புனித வளனாரின் வாழ்வோடு ஒத்துப்போகின்றது என்பதை அறிவோம். யூதேயா நாட்டின் வளத்தையும் எருசலேம் நகர வளத்தையும் கொண்டு புனித யோசேப்பின் பெருமைகளைக் கற்றுக்கொள்ளலாம்.

வளமை என்னும் மையச்சிந்தனை தேம்பாவணியில் தொடர்ந்து வந்துக்கொண்டேயிருக்கின்றது. வளனாரை ஈன்ற நாடும் வளமையானதே என்றும் எருசலேம் நகரின் வளமையை எடுத்தியம்பும் வீரமா, வளமையின் உருவாம் வளனாரை மறைமுகமாக போற்றுகிறார். நாட்டின் கல்லும் மண்ணும் நகரின் சொல்லும் வன்மையும் இந்த சான்றோனுக்கு சான்றாய் நிற்கின்றன.

நாட்டுப்படலத்தில், யூதேயா நாட்டின் மழை, ஆறு, உழவு, சோலை, மக்கள் மற்றும் பலவகை நலன்களைப் பற்றி கூறுகிறார் வீரமா. மேலும் நகரப் படலத்தில், எருசலேமின் பெருமை, ஆலயச் சிறப்பு, பொழுதுபோக்கு மற்றும் வாழ்க்கை வளம் ஆகியவை பற்றியும் கூறுகிறார்.

மழை வளம்

மேகங்களின் மின்னலும் இடியும் பகைவரது மார்பில் செலுத்திய போரில் சீறிவரும் வேல் போன்றிருக்கும். மேலும், மேகங்கள் நீர் தரும் தன்மையை உடையதாய், வள்ளல்களின் சிறந்த கருணையை உணர்த்துகிறது. மேகங்கள் மழையை அளவில்லாமல் பொழிந்து குளிர்விக்கும் தன்மையுடையதாய் உள்ளது. இந்த மழை தரும் மேகமாய் வளனார் இருக்கின்றார் என்று இன்று நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது.

படை எனச் செருப் பகை தரப் படர்ந்தன அல்லால்,

கடை எனச் செறி கருணையோடு உஞற்றிய வள்ளர்

கொடை என, செழுங் குன்றொடு வயின் தொறும் குளிர

மிடை எனச் சொரி வியன் முகில் வரைவு இல பொழிவ. (ஆற்று வளம், 4, நாட்டுப் படலம்)

வளனாரின் புகழைச் சொல்ல யூதேயாவின் வளங்களை எல்லாம், எருசலேமின் பெருமைகளை எல்லாம் சிறப்பு செய்கிறார் வீரமா.

மேகம் வளமையின் அடையாளம், யோசேப்பும் வளங்களை வளரச் செய்பவர்.

மேகம் தூய்மையின் அடையாளம், யோசேப்பும் கன்னிமைக் குன்றா தூய்மையின் அடையாளம்.

மேகம் வரங்களின் அடையாளம், யோசேப்பும் கேட்டதை பெறாமல் போகாத தன்மையுடையோராய் விளங்குபவர்.

சோலை வளம்

யூதேயா நாட்டு சோலை வளத்தை இவ்வாறு கூறுகிறார்:

ஓலைகள் கிடந்த நீள் கமுகொடும் பனை,

பாலைகள், மா, மகிள், பலவு, சுள்ளிகள்,

கோலைகள், சந்தனம், குங்குமம் பல

சோலைகள் கிடந்தன: தொகுப்ப வண்ணமோ (சோலை வளம், 37, நாட்டுப் படலம்)

ஓலைகள் கொண்ட நெடிய பனைகளும் பாலை மரங்களும் மாமரங்களும் இலந்தை மற்றும் சந்தன மரங்களும் குங்கும மரங்களும் யூதேயாவில் இருந்தன என வருணனை செய்கிறார் வீரமா.

மக்கள் நலம்

வீரமாமுனிவர்மக்கள் நலம்எனும் செய்யுளில்

மாசு இகற்கு வழங்கிய அம்பு இலார்,

மாசு இகற்கு வழங்கிய அன்பினார்

தேசிகத்து இணைசீர் வரைத் தோளினார்,

தேசிகத்து இணைசீர் வரைத்து ஓதும் ஆர்? (77, நாட்டுப் படலம்)

யூதேயா நாட்டு வீரரையும் இளையோரையும் வர்ணிக்கும் வண்ணமாக, சில சிறப்பியல்புகளை வீரமா தருகிறார்.

1.) பகையை போக்கும் தன்மையுடையவர்கள்

2.) மேகத்திற்கு ஒத்த தூய அன்பு உடையோர்.

3.) பொன் மலைக்கு ஒப்பான தோள் வலிமை மிக்கவர்கள்.

யோசேப்பின் வாழ்வில் இந்த சிறப்புகள் மூன்றையும் நாம் காண முடிகிறது. கன்னி மரியாவின் கணவராக, இயேசுவின் வளர்ப்பு தந்தையாக, தூய அன்பை பொழிந்தார் யோசேப்பு. ஏரோதுவின் சூழ்ச்சியிலும் ஆபத்துகளிலும் தாயையும் சேயையும் பாதுகாக்கும் தோள் வலிமை அவரிடம் இருந்தது.

மூன்று பார்வைகள்

முதல் காண்டத்தின் இரண்டாவது படலமாகியநகரப் படலத்தில்மூன்று பார்வைகளை நான் உங்களின் புரிதலுக்கு தருகிறேன்.

1. சூசையை முனிவராக பார்க்கும் பார்வை

2. எருசலேம் நகர வாயிலை சூசையின் பதிலிருப்பிற்கு ஒப்பீடு செய்தல்

3. அரச பின்னணி பார்வை

1. ஓவல் இற்ற எழில் பூமாதே உவந்த நாள், செறிந்த கற்றை

தூவலின் பகல் செய் பைம் பொன்சுடர் முடி சூழ்ந்தது என்ன,

ஆவலின் கிளர் நன்று உட் கொண்டு அடிகள் தம் மனத்தைக் காக்கும்

காவலின், கது விடாத கனக மா மதிளின் தோற்றம். (மதிலின் தோற்றம், நகரப் படலம் - 11)

எருசலேம் மதிலின் தோற்றத்தை துறவிகளின் தீமைக்கு இடம் கொடாத மனத்தோடு ஒப்பிடுகிறார் வீரமா. இந்த எருசலேம் மதிலும் யோசேப்பின் சான்றாண்மைக்கு சாட்சியம் பகர்கின்றது. தீமைக்கு இடம் கொடாத பாதுகாப்பு அரணாக யோசேப்பு விளங்குகிறார். யோசேப்பை முனிவர் என அழைப்பதற்கு இதை சிறந்த ஒரு காரணியாக கொள்ளலாம். “காவலின், கது விடாத கனக மா மதிலாகயோசேப்பு இன்றும் நமக்கு காவலாய் இருக்கின்றார் என்பது நம் துணிவு.

2. கார் அணி பசும் பொன் குன்றின் காட்சி போல் மதிளைச் சூழ்ந்து,

சீர் அணி அனைத்தும் சேர்த்த செழு நகர் திறந்த வாயில்,

பேர் அணி எவையும் ஈட்டி, பின் அவை உவப்பின் காட்ட,

பார் அணிப் பேழை யாரும் பயன்படத் திறந்த போன்றே. (நகர் வாயில், 12, நகரப் படலம்)

எருசலேம் நகரின் வாயில் செழுமையான நகரின் அணிகலன்களையும் அழகையும் சுட்டிக் காட்டும் தன்மையுடையது. தன் நகைப் பெட்டகத்தை யாவருக்கும் திறந்து காட்டி பெருமையாக நிற்கும். இந்த அழகிய உருவகத்தை யோசேப்பிற்கு உருவகப்படுத்த விரும்புகிறேன். யோசேப்பு ஒரு திறந்த வாயிலாக மீட்புத் திட்டத்திற்கு தன் வாழ்வை திறந்து வைத்தார். அடுத்து செழுமையான இறைவன் தங்கிய நகராம் இயேசுவின் தாய் மரியாவை உலகிற்கு காட்டும் வீரராய் விளங்குகிறார் நம் யோசேப்பு.

3. நளிர் பூஇடை மது நேர், முக நவியே இடை விழி நேர்,

ஒளிர் பூண் இடை மணி நேர், உடல் உருவே கிடை உயிர் நேர்,

குளிர் நாடு இடை புனல் நேர், அற வழியே இடை குரு நேர்

மிளிர் ஊர் இடை அரசு ஆகையில், மிடை கோ இயல் பகர்வோம்.

(நகரும் அரசும், 70, நகரப் படலம்)

யோசேப்பு அரச மரபை சார்ந்தவர். தாவீதின் குலக்கொழுந்து என்று நிறுவுவதற்காக அரசனின் புகழை வளன் சனித்த படலத்தில் வீரமா விளக்குகிறார்.

(அடுத்த தொடர் கட்டுரையில் அரசன் தாவீதின் பெருமையையும் எவ்வாறு அது யோசேப்போடு தொடர்பு உள்ளது என்பதையும் யோசேப்பின் பிறப்பை பற்றியும் காண்போம்.)

தீமைக்கு இடம் தராத சூசைமுனியே!

மேகமாய் வாரும், பாதுகாத்துக் கொள்ளும்.

வலிமைமிகு மதிலாய் இருந்து அரணாய் வாரும்! இறைத் திட்டத்தை நிறைவேற்ற என் இதய வாயில்களை திறக்க துணைபுரியும்.

நாடும் நகரும் சாட்சியம் பகர்ந்தது போல்

எங்கள் வாழ்வும் வளமும், சொல்லும் செயலும் சாட்சியம் பகர

வளர்த்திடுவாய் மாவளனே!

Comment