No icon

தமிழ் மண் ஈன்ற முதல் புனிதர், மறைசாட்சி தேவசகாயம்

தமிழ் மண் ஈன்ற முதல் புனிதர், மறைசாட்சி தேவசகாயம்

சுற்றிவந்த பவனி முடிந்ததும், முதலில் அங்குள்ள வழக்கப்படி அவர் மரண தண்டனையை நிறைவேற்றும் சேவகர்களின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் படைவீரர்களிடம் கையளிக்கப்பட்டார். மேலும், மரண தண்டனையை நிறைவேற்றும் சேவகனின் வீட்டில் ஒருசில  நாட்கள் மட்டுமே கண்காணிப்பில் வைக்கப்பட்டபின் இரண்டு முறை வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டார். இங்கு வெட்ட வெளியில் விடப்பட்டு, சுட்டெரிக்கும் வெயிலுக்கும், கனமழைக்கும், கடும் குளிரான வாடைக்காற்றுக்கும் ஆளாக்கப்பட்டு, மேலும் சில சமயங்களில் சேற்றில் பெரும்பாலும் மூழ்கடிக்கப்பட்டு, தாங்கொண்ணாத துன்பங்களை அனுபவித்தார்.

இரக்கத்தால் உந்தப்பட்டு, படைவீரர்களே பருவக்காலங்களின் பாதிப்புகளிலிருந்து சிறிதளவாவது பாதுகாப்பு அவர் அடைவதற்காக, ஓலைகளால் வேயப்பட்ட குடிசை ஒன்றை அங்கே கட்டிக்கொடுக்கும் வரை இந்தத் துன்பம் நீடித்தது. ஏழு மாதங்களாக மரத்தடியில் கிடந்தார். அந்த மரத்தையே கால்களால் சுற்றி அணைத்த நிலையில், கால்கள் விலங்கிடப்பட்டு, அதே விலங்குகளால் அவர் மரத்தோடு, அதே வேளையில் எவ்வாறு பிணைக்கப்பட்டிருந்தார் என்றால் அந்த இடத்தை விட்டு விலகவோ, எழுந்து நிற்கவோ பக்கவாட்டில் சாயவோ முடியாமல் இருந்தது. ஆனால், இத்துணை பெரிய அளவிலான துன்பங்கள் மத்தியிலும் அவருக்கு இருந்த ஒரே மனத்துயர் தமது மரணம் தள்ளிப்போகின்றது என்பதே. அவருக்கு இருந்த ஒரே பயம் மறைசாட்சி முடியை இழந்துவிடக்கூடாது என்பதே.

விலங்குகளிலிருந்து விடுவிக்கப்பட்ட எந்த அளவுக்கு அவர் கேட்கவோ, விரும்பவோ இல்லை என்றால் காய்ச்சலால் அவதியுற்ற அவரை, காவலர்கள் விலங்குகளிலிருந்து விடுவிக்க விரும்பிய அவ்வேளையில் அதற்கு அவர் உடன்படவில்லை. மேலும், அதே காவலர்களில் ஒருவர் தப்பிச் செல்ல நல்லதொரு வாய்ப்பைத் தாமாகவே கொடுத்தபோது, அதை ஏற்க உறுதியாக மறுத்துவிட்டார். விலங்கிடப்பட்ட நிலையில் அவர் மறைசாட்சியம் பெறுவதற்குரிய, ஒருவரின் தகுதியான வாழ்வு வாழ்ந்தார். ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் சில வேலைகளை விண்ணக உண்மைகளைத் தியானிப்பதில் அவர் செலவிட்டார். மேலும், அடிக்கடி பகல் வேளையில் அவர் கடவுளை நோக்கி மனதைத் திருப்பி, செபங்களைச் சுருக்கமாகச் சொல்லி வந்தார். அடிக்கடி தெளிவான குரலில் அவர் பக்தி நூல்களை, பெரும்பாலும் புனிதர்களின் வரலாறுகளை வாசித்தார்.

இந்த வாசிப்பு அருகில் உள்ளவர்களுக்குக் கூட பயன் அளிப்பதாக அமைந்திருந்தது. எல்லாக் கிறிஸ்தவர்களும் திருச்சபை கற்பிக்கின்ற ஒருசந்தியோடு கூடுதலாக, சிறப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் அவர் ஒருசந்தி அனுசரித்து வந்தார். சனிக்கிழமைகளில் இறைவனின் அன்னைக்கும், இந்தப் புகழ்ச்சிக் காணிக்கையை அவர் செலுத்தி வந்தார். இவ்விரு நாட்களும் ஒன்றோடொன்று சந்திக்கும்பொழுதில், அதாவது ஒன்றை ஒன்று பிரிக்கும் நடு இரவில் அவர் கிறிஸ்துவுக்காக ஏற்ற மகிமையான, மரணம் ஒரு கொடை என்று ஏன் நான் கருதக் கூடாது? இந்த மறைசாட்சியத்தின் மகிமை எந்தக் குறிப்பிட்ட நாளுக்கு (வெள்ளிக்கிழமையா, சனிக்கிழமையா) உரியது என்று எளிதாக முடிவுசெய்ய இயலாத விதத்தில் அமைந்தது.

குருக்களுக்கு, சிறப்பாகத் தம்முடைய வேதபோதகக் குருவுக்கு எப்போதும் கீழ்ப்படிபவராக அவர் விளங்கினார். இவரிடம் இயன்ற பொழுதெல்லாம் ஆள் வழியாகவோ, கடிதங்கள் வழியாகவோ கலந்தாலோசித்து வந்தார். அவருடைய கட்டளைகளையும்,

ஆலோசனைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி வந்தார். மூன்று முறை மட்டும் நள்ளிரவில் குரு அவரை அணுகமுடிந்தது. அத்தருணங்களில் அதிக மகிழ்ச்சி அடைந்தது யார்? குருவா? கைதியா? எனும் ஐயம் நிலவியது. உயிர் வாழும் ஒரு மறைசாட்சியை நேரில் காண்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால் குருவுக்கு மகிழ்ச்சி. தேவசகாயத்திற்கோ, சாதாரண பாவங்களை உருக்கமாக அறிக்கையிடுவதாலும், இறுதியாக மிகப் புனிதமான நற்கருணையால் ஊட்டம் பெறவும், ஆற்றல் பெறவும் வாய்ப்புக் கிடைத்திருந்தாலும் மகிழ்ச்சி. கைது செய்யப்படுவதற்கு முன் அடிக்கடி அவர் நற்கருணையை அருந்திவந்தது போல், வாய்ப்பு இருந்திருந்தால் பலமுறை அருந்திருப்பார்.

அவரை (தேவசகாயத்தை) அணுகுவது குருவுக்கு மிகவும் அரிதாக இருக்க, மற்றவர்களுக்கோ எளிதாக இருந்தது. எல்லாருக்கும் பயனுள்ளவராக இருக்க, அனைவரையும் அவர் உள்ளன்போடு வரவேற்றார். இறைச் சட்டங்களைக் கடைப்பிடிக்கவும், விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இவர்களில் விசுவாசத்தை மறுதலித்த பலரை மனம்வருந்தத் தூண்டினார். அதிக அளவில் அச்சத்தால் தயங்கிய சிலருக்குத் தைரியம் ஊட்டி, திருச்சபைக்குச் செல்லவும், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று வெளிப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

கிறிஸ்தவரல்லாதவர்களுக்கு அவர் கிறிஸ்துவை வாதங்களால் அறிவித்தது மட்டுமன்றி, பெருமளவில் செயல்களாலும் அதாவது பொறுமை, உறுதி மற்றும் எல்லா நற்செயல்களின் பற்பல உதாரணங்களோடு கிறிஸ்தவ மதத்தின் உண்மையையும், புனிதத்தன்மையையும் அறிக்கையிட்டவர்களும் தாங்களே மனமுவந்து திருமுழுக்குப்பெறும் ஆவலை வெளிப்படுத்தி குருக்களிடம் அறிகுறி காட்டியவர்களும் இல்லாமலில்லை.

இத்தகைய வாழ்க்கை முறையும், அதோடு முக்கியமாக அவரிலும் அவர் வழியாகவும் இறைவன் ஆங்காங்கே ஆற்றி வந்ததாகக் கூறப்பட்ட பல புதுமைகள் பற்றிய செய்தியும், எந்த அளவுக்கு அவர்மட்டில் மதிப்பை ஏற்படுத்தியிருந்ததென்றால், அந்தக் காலத்தில் எல்லாருடைய நாவிலும் தேவசகாயம் என்ற பெயரைத்தவிர வேறு எந்தப் பெயரும் புகழோடு ஒலிக்கவில்லை. அவரைப் பார்க்கவும், அவர் கூறுவதைக் கேட்கவும் எல்லா இடங்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாக கிறிஸ்தவர்களைவிட, கிறிஸ்தவரல்லாதவர்கள் திரண்டு வந்தார்கள். அவரை அணுகி வந்தவர்களைக் காவலர்கள் தடுக்கவில்லை. உண்மையில் இந்தக் காவலர்களையும் அவரை மதித்தவர்களின் எண்ணிக்கையில் கடைசி இடத்தில் இருப்பதாகக் கருதக்கூடாது.

ஆனால், இறுதியாக மற்றவர்களுக்குப்பின் ஒரு புதிய காவலர் தலைவன் நியமிக்கப்பட்டார். நடந்ததைப் பொறுக்கமாட்டாதவராய் இவர், யாரும் கைதியோடு பேசுவதையும், அவர் கூறுவதைக் கேட்பதையும் தடை செய்தார். அவர் தடைசெய்தது வீணாகி விட்டது என்று அறிந்து, காரியத்தை அரசனிடம் எடுத்துச் சென்றார். அரசனிடமிருந்து அவரை இரகசியமாகக் கொல்லுவதைக் கவனிக்க வேண்டுமென்று உடனே ஆணை பெற்றார்.

1752 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் நாளுக்கும் 15 ஆம் நாளுக்கும் இடைப்பட்ட நள்ளிரவுக்குச் சிறிது முன்னர் காவலர் தலைவனிடம் அழைத்துச் செல்லப்படுவதுபோல சில காவலர்களால் தேவசகாயம் துயில் எழுப்பப்பட்டார். அவர்களுக்கு அவர் தாம் எங்கு? எதற்காக அழைக்கப்படுகிறார் என அவருக்குத் தெரியும். எனவே, அவர்கள் நடிக்க வேண்டியதில்லை என்று பதிலுரைத்தார். கடவுள் துணைநிற்க அவர்கள் புறப்பட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. உடனே அவர் நடக்க ஆரம்பித்தார். ஆனால், கால் விலங்குகள் அவர் நடந்து செல்வதைத் தடுத்ததால் அவர் அண்மையிலிருந்த மலையின் அடிவாரத்திற்கு காவலர்களுடைய கையால் தூக்கிச் செல்லப்பட்டார். அங்கே சிறிது தூரம் தாமதிக்க விண்ணப்பித்து, முழந்தாளிட்டு ஏறக்குறைய கால்மணி நேரமாக அவர் தம்மையே கடவுளுக்குக் கையளித்தார்.

பின்னர் அவர் தமது கடமை போதுமான அளவு நிறைவேறிற்று என்று காவலரிடம் கூறி, மரணத்தை அச்சமின்றி எதிர்நோக்கினார். உடனே ஐந்து ஈயக் குண்டுகளால் காவலர்களால் சுடப்பட்டு, தாம் அடிக்கடி கூறும் சொற்களை “இயேசுவே, என்னை இரட்சியும்” என்று இறுதியாகக் கூறி அவர் தமது மகிழ்ச்சி நிறைந்த ஆவியை இறைவனிடம் ஒப்படைத்தார்.

இது நிகழ்ந்தது நாற்பது நாட்கள் மட்டுமே குறைய, மூன்று ஆண்டுகள் அவர் விலங்கிட்டவராய் வாழ்ந்தபின், அவர் வாழ்ந்த நாற்பதாம் ஆண்டில், அவரது கிறிஸ்தவ வாழ்வின் ஏழாம் ஆண்டில், அகற்றப்பட்ட அவருடைய விலங்குகளைப் பணம் கொடுத்து, இயேசு சபைக் குருக்கள் விலைக்கு வாங்கினார்கள். கொடிய மிருகங்களால் கடித்தும், குதறும்படியாக அவரது உடல் காட்டுக்குள்ளே தூக்கி எறியப்பட்டது. இயேசு சபை குருக்கள் எவ்வளவோ முயன்றும் அவரது உடலை எடுத்துச் செல்ல இயலவில்லை. ஏனெனில், அவர்களால்கூட அந்த இடத்தை அணுக முடியவில்லை. அதுபோல எந்த ஒரு கிறிஸ்தவரும் அவ்வாறு செய்யத்துணியவில்லை. மன்னரின் கோபத்திற்கு அனைவரும் அஞ்சினர்.

அவ்வாறே அருகில் தங்கியிருந்து காவல் காத்தக் காவலர்களின் கண்காணிப்புக்கு அனைவரும் அஞ்சினார்கள். ஏனென்றால், இங்கு கொலைத் தண்டனை பெற்றவர்களின் உடலைப் புதைப்பது என்பது தடை செய்யப்பட்ட ஒன்று. மேலும் அவர்களுடைய உடலை மிருகங்களிடமிருந்து எந்தவிதத்திலும் பாதுகாப்பது என்பது தடைசெய்யப்பட்ட ஒன்று. இறுதியில் ஐந்தாம் நாளுக்குப்பின் ஏற்கனவே சதையற்ற எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், எலும்புகளை விட்டுப்பிரிந்து கிடந்த நிலையில் - அழுகிய நிலையில், இருந்தாலும் உண்மையிலேயே முழுமையான நாக்கு கண்டு எடுக்கப்பட்டது. அது தனியாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. கவனமாகப் பொறுக்கி எடுக்கப்பட்ட எலும்புகள் கோட்டாறு புனித பிரான்சிஸ் சேவியரின் புகழ்பெற்ற ஆலயத்தின் நிலத்தடியில் புதைக்கப்பட்டன. அதன்மேல் வருங்காலச் சந்ததிக்கு இங்கே புதைக்கப்பட்ட திரவியத்தைப்பற்றி அறிவிக்கும் வண்ணம் ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளது.

தேவசகாயம் பிள்ளை அவர்களின் மறைசாட்சியத்திற்குப்பின் வேத கலாபனை என்னும் புயல் அடங்கியதாகக் கருதப்பட்டிருக்கலாம். ஏனென்றால், ஓர் அல்லது இன்னோர் அமைச்சரால் அவ்வப்போது ஏதாவது குழப்பம் ஏற்பட்டிருந்தாலும், அது அரசருடைய அனுமதியின்றி, விசுவாச வெறுப்பினால் விளைந்தது என்பதைவிட, அதிக அளவில் பண ஆசையால் ஏற்பட்டது என்று தோன்றுகிறது. ஆனால், மீண்டும் ஜுலை மாதம் ஒரு வேதகலாபனை ஏற்பட்டது. அப்போது திரும்பவும் பலர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஏழுபேர் விலங்குகளால் கட்டுண்டு சிறையில் வைக்கப்பட்டனர். இந்த ஏழுபேருக்கும் என்ன கதி நேரிடும் என்று தெரியவில்லை. எப்படி ஆனாலும் அவர்கள் இரத்தம் சிந்தும் அளவுக்கு எதிர்த்து நிற்கவும், அனைத்திற்கும் மேலாக விசுவாசத்தையும், ஆன்மாவையும் உயர்வாகக் கருதவும் உறுதியாக இருப்பார்கள். எப்படி ஆனாலும், இந்த நேரத்திலும் லாசருடைய முன்மாதிரியால் தூண்டப்பெற்று அந்நியோக்குவுக்கு எதிராகப் போரிட்டு, வெல்ல முடியாத வீரர்களாய் இந்த எழுவரும் வெற்றிவாகை சூடுவார்கள்... இவ்வாறு கொச்சி ஆயரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இதில் மறைசாட்சியின் நாக்கு கண்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இது பற்றிய விபரம் தற்போது யாருக்கும் தெரியவில்லை). (தொடரும்)

Comment