No icon

செப்டம்பர் 29

அதிதூதர்களாவோம்! இறையாட்சி செய்வோம்!

அதிசயமானஅதிதூதர்

நான் சிறுபிள்ளையாக இருந்தபொழுது பேய் பிடித்தவர்கள் எங்களது ஊரில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வந்து சிலர் வாரக்கணக்கிலும், இன்னும் சிலர் மாதக் கணக்கிலும் தங்குவர். சாதாரணமாக உண்டு உறங்கும் அவர்கள், சில நேரங்களில் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு வித்தியாசமாக அலறுவதும், கூச்சலிடுவதுமாகவும், தரையில் புரண்டு உருளுவதுமாகவும் மாறிவிடுகின்றனர். ஊர் மக்கள் அனைவரது தொடர் செபத்தினால் அவர்கள் குணமடைந்து சில நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு மகிழ்வோடு செல்வர். ஒவ்வொருமுறை நான் வீட்டிற்குச் செல்லும் பொழுதும், யாராவது ஒருவர் நம்பிக்கையோடு ஆலயத்தில் செபித்துக் கொண்டிருப்பார். நம்பிக்கையோடு அங்கு வந்து தங்குவோரை புனித மிக்கேல் அதிதூதர் குணப்படுத்துகிறார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

யார் காவல் தூதர்கள்?

மனிதக் கண்களால் பார்க்க முடியாத, தொட்டு உணரமுடியாத இந்தவகை நோயைக் குணப்படுத்தும் காவல் தூதர்கள் அல்லது அதி தூதர்கள் என அழைக்கப்படும் இவர்களை நமது தாய்த் திருஅவை செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று நினைவு கூறுகின்றது. அதிதூதர்கள் தூய்மையான ஆவியானவராக, உடலற்றவர்களாக இருப்பவர்கள் என கத்தோலிக்கத் திருஅவை நம்புகிறது (மறைக்கல்வி எண். 328). திருஅவை வரலாற்றில் புனித தாமஸ் அக்வினாஸ் அவர்கள் ஒன்பது காவல் தூதர்களின் இருப்பை அறிவித்தாலும், திருஅவை புனித மிக்கேல், புனித கபிரியேல் மற்றும் புனித இரபேல் இவர்களின் திருநாளைக் கொண்டாடுகிறது. எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளிடமிருந்து மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டு வருபவர்கள் இந்த அதிதூதர்கள் என்கிறார் புனித அகுஸ்தினார். கடவுளின் பணியாளர்களுக்கு வெவ்வேறு காலங்களில், பல்வேறு நிலைகளில் அவரவர் குணங்களுக்கேற்ப அதிதூதர்கள் உதவியுள்ளனர் என்பதை நாம் திருவிவிலியத்திலிருந்தும் திருஅவைப் பாரம்பரியத்திலிருந்தும் அறிகிறோம்.

தீமைக்கு எதிரான சிம்ம சொப்பணம் மிக்கேல்

‘இறைவனுக்கு நிகர் யார்?’ எனும் தாரக மந்திரத்திற்குச் சொந்தக்காரர் புனித மிக்கேல் அதிதூதர். ஆபத்து நேரத்தில் துணையாளராக, எதிரிகளையும் கடவுளுக்கு எதிரான தீய ஆவிகளையும் எதிர்த்துப் போராடுபவராகவும் தானியேல் (10:13, 10:21) மற்றும் திருவெளிப்பாட்டு நூலிலும் (திவெ 12:7-8) நாம் வாசிக்கிறோம். இவர் விண்ணக அரசின் இளவரசராகவும், தூதர்களுக்கெல்லாம் தலைவராகவும், திருஅவை வரலாற்றில் அறியப்படுகிறார். இராணுவ வீரர்கள், காவல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் பாதுகாவலர் அதிதூதர் மிக்கேல் என திருஅவை கற்பிக்கின்றது.

விண்ணுலகில் தீய ஆவிகளுக்கு எதிராகப் போரிட்டு வென்று நீதியை நிலைநாட்டிய புனித மிக்கேல் அதிதூதரைப் போல, இன்றைய சமுதாயத்தில், சமூக-அரசியல்-பொருளாதார ரீதியாக நடைபெறும் அநீதி செயல்பாடுகளை இன்னல்கள் மற்றும் துன்பங்களுக்கு மத்தியில் தட்டிக்கேட்கும் ஒவ்வொரு சகோதர, சகோதரியும் புனிதரின் வழி நடக்கின்றனர்.

புனித மிக்கேல் அதிதூதர் நம்பிக்கையாளர்களின் ஆன்மாவை, சிறப்பாக இறக்கும் தருவாயில் இருப்பவர்களின் ஆன்மாக்களைப் பாதுகாக்கும் பணியினைச் செய்கிறார் என்பதனை திருஅவைப் பாரம்பரியத்தில் அறிகிறோம்.

நான், எனது என்று சுயநலப் போக்கை விடுத்து, தனக்கு அருகிலிருக்கும் சகோதர, சகோதரிகளின் தேவை அறிந்து உதவி செய்வதும், முதியவர்களுக்கும், உடல் நலமற்றவர்களுக்கும், அன்பையும், அரவணைப்பையும் அளித்து அவர்களை மகிழச் செய்வதும், நம்மை புனித மிக்கேல் அதிதூதரின் வாரிசுகளாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.

நாம் அனைவரும் மகிழ்வாக நிம்மதியாக வாழ நமக்காக நமது நாட்டின் எல்லைகளில் கடும் பனியிலும், வெயிலிலும், குளிரிலும் காவல் காக்கும் இராணுவ வீரர்கள், உண்ண உறங்க நேரமில்லாமல் பல்வேறு துறைகளில் பணிபுரியும் காவலர்கள், தங்களது உயிரைத் துச்சமெனக் கருதி தீவிபத்தில் சிக்குகின்றவர்களைக் காக்கின்ற தீயணைப்புத் துறையினர் ஆகிய அனைவரும் புனித மிக்கேல் அதிதூதர்களின் நகலே எனச் சொன்னால் அது மிகையாகாது.

கடவுளின் ஒலி பெருக்கி கபிரியேல்

நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன் (லூக் 1:19), மீட்புக் காலத்தைப் பற்றி அறிவிப்பதற்காகக் கடவுளால் அனுப்பப்பட்டவர் (தானி 8:16); ஆகிய இறைவாசகங்கள் கபிரியேல் அதிதூதரின் இருப்பைத் திருவிவிலியத்தின் பின்னணியில் நமக்குக் காட்டுகின்றன. திருஅவை வரலாற்றின் படி, இவர் கடவுளின் வாக்கினை மக்களுக்கு அறிவிப்பவராகவும், ஞானம், வெளிப்பாடு மற்றும் காட்சிகளின் அதிதூதராகவும் வணங்கப்படுகிறார்.

திருவிவிலியத்தில் இரண்டாம் ஏற்பாட்டில் திருமுழுக்கு யோவானுடைய பிறப்பின் நற்செய்தியை செக்கரியாவுக்கும் (லூக் 1:13-20), கடவுள் இயேசுவாக மனுவுருவாகும் நற்செய்தியினை கன்னி மரியாவுக்கும் (லூக் 1:26-38) அறிவிப்பவராக கபிரியேல் தூதரைக் காண்கின்றோம்.

நமது சொல் மற்றவரின் வாழ்வில் இல்லாத (செக்கரியாவுக்கு குழந்தைச் செல்வத்தைப் போல) மகிழ்வைக் கொடுக்கிறதா அல்லது அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கி விடுகிறதா என்பதை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சிந்திக்க வேண்டும். நமது அன்றாட வாழ்வில் நாம் எப்படிப்பட்ட செய்தியைப் பிறருக்கு எடுத்துச் செல்கிறோம்? நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் நமக்கும் மற்றவருக்கும் ஏதோ ஒரு செய்தியை தொடர்ந்து அளித்துக்கொண்டிருக்கிறது. அவற்றை நல்ல செய்தியாக நாம் கருத முடியுமா? அவை பிறரின் வாழ்வில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றனவா? என்ற கேள்விகளுக்கு நாம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இன்னலில் உடனிருக்கும் இரபேல்

நான் இரபேல், ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர் (தோபி 12:15) என்ற இந்த வசனத்தின் மூலம் இரபேல் அதிதூதரின் இருப்பை திருவிவிலியத்தில் நாம் அறிகிறோம். கடவுள் குணமளிக்கிறார் என்பது இரபேலின் பொருளாகும். நோயினால் துன்பப்பட்டு சாவதே மேல் என முடிவு செய்யும் தோபித்தை குணப்படுத்துகிறார். கூடி வாழும் முன், அசுமதேயு என்ற அலகையின் சூழ்ச்சியால், ஒன்றன் பின் ஒன்றாக தனது ஏழு கணவர்களையும் இழந்த சோகத்தில் இறக்கத் துணிந்த சாரா எனும் பெண்ணிடமிருந்து அலகையை விரட்டி அவரைக் காக்கின்றார் (தோபி 3:17). பெத்சதா குளத்தின் தண்ணீரைக் கலக்கி முதலில் இறங்குபவரின் நோயைக் குணப்படுத்துபவராகவும் (யோவா 5:1-4) திருஅவைப் பாரம்பரியம் இவரைப் பற்றிக் கூறுகிறது.

துன்பத்தில் பிறர் உழன்ற பொழுது இவரது உதவி, உடனிருப்பு மற்றும் தடுத்தாட்கொள்ளல் அவர்களை மீட்டெடுக்கும் நிகழ்வை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். இன்றைய கொரோனா சூழலில், நம் அனைவருக்காகவும் பணியாற்றும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் வழியாகக் கடவுள் குணமளிக்கும் செயலைத் திறம்பட ஆற்றுகிறார். இந்நேரத்தில் நோயினால் பாதிக்கப்பட்டோரைக் குறித்த நமது எண்ணங்களையும் பதிலிருப்பையும் சிந்திப்போம். உடல் மற்றும் உள்ள நோயால் துன்பப்படும் மானிட சமுதாயத்திற்கு நமது பதிலிருப்பு என்னவாக இருக்கிறது? துன்பப் படுவோரோடு நாம் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியுமா? உடல் மற்றும் மனதளவில் துன்பப்படுவோரிடம் நாம் கூறுகின்ற ஆறுதலான வார்த்தைகளும், அந்நேரத்தில் அவர்களுடன் உடனிருப்பதுமே குணமளிக்கும் பணியின் ஓர்அங்கமாகும்.

வாழும் அதிதூதர்களாவோம்

இவ்வாறாக, அதிதூதர்களான இம்மூவரும் நம் அனைவரையும், நமது வாழ்விடத்தையும் காக்க ஆர்வமாய் உள்ளனர். இன்றும் நல்மனம் கொண்ட பல்வேறு மனிதர்கள் வழியாக காக்கும் பணியினை, நல்ல செய்திகளை அளிக்கும் பணியினை, குணமளிக்கும் பணியினைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றனர். ‘அதி தூதர்கள் அதீத ஆற்றல் கொண்டவர்கள்; அவர்களால் செய்ய இயலும்; நான் சராசரி மனிதர்; என்னால் இயலாது’என நாம் ஒதுங்கிச் செல்ல இயலாது; செல்லவும் கூடாது. இது எனது சமுதாயம்; நானும் இதில் ஓர் அங்கம் என்பதை அறிந்து உணர்ந்து இப்பணிகளை நாம் செய்ய வேண்டும். நாம் அவரது உருவங்களாய் இருந்து இன்றைய காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர் விரும்பும் பணிகளைச் செய்ய நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். இவ்வாறு செய்யும்பொழுது நாமும் இந்த அதிதூதர்களின் பணியில், இறைவனின் மீட்புத் திட்டத்தில் பங்கெடுப்பவர்கள் ஆகிறோம். நாமும் வாழும் அதி தூதர்களாக இருப்போம்!!

Comment