No icon

மன்றாடி மகிழ்ந்திடுவோம்

மன்றாடி மகிழ்ந்திடுவோம்

                                                                                                                                                                                                                                                                                                                                                                                       அருள்பணி. ஜேம்ஸ் பீட்டர்,

                                                                                                                                                                                                                                                                                                                                                                                      கிறிஸ்துவின் சேனை

                                                                                                                                                                                                                                                                                                                                                                                      மாத இதழின் ஆசிரியர்

                                                                                                                                                                                                                                                                                                                                                                                      WhatsApp No.. 9842043457

தாவீது

ஆண்டவரே நீர் என்னுடையவர்

( திபா 23:1 )

ஆண்டவரே என் ஆயன் எனக்கேதும் குறையில்லை என்ற 23 ஆம் திருப்பாடலை மிகச் சிறந்த பாடகர் தன் இசைக்கருவியுடன் மிகச் சிறப்பாகப் பாடினார். மக்களின் கரவொலி பலநிமிடங்கள் நீடித்தது.

அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு எளிய போதகரும் அதே பாடலைப் பாடும்படி அழைக்கப் பட்டார். எளிமையான குரல்தான். ஆனால், அரங்கமே அழுது கொண்டிருந்தது.

முதலில் பாடிய பாடகர் சொன்னார், நான் மூளையிலிருந்து பாடினேன். போதகரோ, தன் இதயத்திலிருந்து பாடினார். உண்மைதானே?

திருப்பாடல்களில் பெரிய தத்துவங்களைக் காண முடியாது. ஆனால், தாவீதின் உடைந்த இதயத்திலிருந்து எழும் பெருமூச்சுகளை நம்மால் உணர முடிகிறது.

சாலமோன் மிகச் சிறந்த “ஞானி.  அவரது நீதிமொழிகள் எல்லாம் அறிவார்ந்தவை. திருப்பாடல்களைப் போல் உள்ளத்தை உருக்குபவை அல்ல.

23 ஆம் திருப்பாடலில் ஆறு வசனங்கள் தான் உள்ளன. ஆனால், என், எனக்கு, என்னை, என்னிடம் என்று 16 முறை வருகிறது.

என் அப்பா, என் அம்மா என்று உரிமை கொண்டாடுவதுபோல், தாவீது, ஆண்டவரோடு அவ்வளவு நெருக்கத்தை வைத்திருந்தார். “ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன் என்கிறார் (திபா 16:8).

தாவீது, வெறும் கோலுடன் வருவதைக் கண்ட கோலியாத்துக்கு இகழ்ச்சியாக இருந்தது. ஆனால், என் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்ற தாவீதின் நம்பிக்கை கமுக்கம் அவனுக்குத் தெரியாதல்லவா!.

சிங்கக் குகையில் வீசப்பட்ட தானியேலைக் காண அரசர் வந்தார். “தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா? என்று உரக்கக் கேட்டான்! (தானி 6:20)

அதற்கு தானியேலின் பதிலைப் பாருங்கள்: “என் கடவுள், தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்ய வில்லை; ஏனெனில், அவர் திருமுன் நான் மாசற்றவன் (தானி 6:22).

உன் கடவுள் என்று அரசர் சொல்வதும்; என் கடவுள் என்று தானியேல் சொல்வதையும் காணும்பொழுது, தானியேல் எவ்வளவுக்கு கடவுளோடு உரிமை கொண்டிருந்தார் என்பதை அரசரும் அறிந்திருந்தார்.

இதன் பொருட்டு  நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்; எனினும் வெட்கமுறுவதில்லை. ஏனெனில், நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரைக் காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு. (2திமொ 1:12) என்கிறார் புனித பவுல்.

ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பேதுருவையும், யோவானையும் அந்த அழகு வாயிலில் அமர்ந்திருந்த பிச்சை எடுக்கும் சகோதரர் பார்த்தார்.

பேதுரு அவரிடம், “வெள்ளியும், பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும் என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார் (திபா 3:6).

இயேசுவோடு, தன்னோடு மட்டுமல்ல, தனக்குள் இருக்கும் அனுபவத்தை பேதுருவில் காண்கிறோம்.

அரசன் ஆசா, ஆண்டவருக்கு உகந்தவராக வாழ்ந்தார், ஆட்சி புரிந்தார். “ஆண்டவரே! வலியோனை எதிர்க்கும் வலிமையற்றவனைக் காப்பவர் உம்மையன்றி எவருமிலர்! எங்களுக்குத் துணையாக வாரும்! ஆண்டவரே, நீரே எங்கள் கடவுள்! எம்மனிதனும் உம்மை மேற்கொள்ள விடாதீர் என்று மன்றாடினார். ஆசா, பத்து இலட்சம் வீரர்களும், 300 தேர்களும் கொண்டு தன்னை எதிர்த்து வந்த எத்தியோப்பியனை தன்னிடமுள்ள 2 இலட்ச வீரர்களைக் கொண்டு முறியடித்தார் (2 குறி. 14:8,11)

ஆனால், ஆசா, பெருமை கொண்டவனாக, ஆண்டவரை விட்டு விலகிச் சென்ற போதே சில ஆயிரம் வீரர்களால் தோற்றுப் போனான்.

ஆண்டவர்மேல் நம்பிக்கை கொண்டிருந்ததால், பெரிய படையை ஆண்டவர் அவன் கையில் ஒப்படைத்தார். ஆனால், ஆசா மதியீனமாய் நடந்து கொண்டதால், ஆண்டவரின் துணையை இழந்து போனான் (2 குறி 16 : 7-10)

தாவீதைப் போல், என் ஆண்டவர் என்னோடு எனக்குள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் மகிழ்ந்திடுவோம்; வெற்றிகளைப் பெற்றிடுவோம்.

Comment