No icon

மேதகு ஆயர் செ. சூசைமாணிக்கம்

இளைஞர்கள் தங்களது அழைப்பினைத் தெளிந்து தேர்ந்து கொள்ள வழிகாட்டுவோம!

இறைவனின் இப்பொழுதாக விளங்கும் இளைஞர்களைக் குறித்தும் அருகி வரும் இறையழைத்தலைக் குறித்தும் சிந்தித்துச் செயல்பட 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 3 முதல் 28 முடிய உரோமையில் ஆயர் மன்றமானது நடைபெற்றது.  அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் 2019 ஏப்ரல் 2 அன்று ‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்னும் திருத்தூது ஊக்கவுரையினை நம் திருத்தந்தை வழங்கியுள்ளார்.  அதன் கருத்துக்களை இளைஞர்களிடம் கொண்டு செல்லவும், இளைஞர்களை ஆற்றல்படுத்தி, மாற்றுச் சமூகமான இறையாட்சியின் முகவர்களாக அவர்களை உருவாக்கவும் தமிழகத் திரு அவை இளைஞர் ஆண்டினைக் கொண்டாடி மகிழ்கின்றது.


    நமது நாடு இன்று மதவாதிகளிடம் சிக்கிச் சீரழிந்து வருகின்றது. பெரும்குழும வணிக நிறுவனங்களின் இலாபத்திற்காக எளிய மக்கள் சுரண்டப்படுகின்றார்கள்; இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.  மக்களின் இருப்பே கேள்விக்குறி ஆகிவிட்டது.  இவ்வேளையில், இளைஞர் இயேசு தமது இறையாட்சிப் பணியினைத் தொடர, எண்ணத்தில், எழுத்தில், உடலில், உள்ளத்தில், உணர்வில், செயல்படும் திறனில் ஆற்றல் உடைய இன்றைய இளைஞர்களை அழைக்கின்றார்.


    இளைஞர்கள் தங்களது அழைப்பைத் தெளிந்து தேர்ந்து கொள்ளவும், ஆற்றல்படுத்திக் கொள்ளவும் சிறந்த முன்மாதிரியாக இயேசு விளங்குகிறார்.  முப்பது வயது இளைஞரான இயேசு தமது பணிவாழ்வின் தொடக்கத்திலேயே இறையாட்சியை வளர்த்தெடுக்க அழைப்பு விடுத்தார் (மாற் 1:14-15).  தமது பணியின் நோக்கம், இலக்கு மக்கள் ஆகியன பற்றித் தொழுகைக் கூடத்தில் அறிக்கையிட்டார் (லூக் 4:16-21). நயீன் ஊரில் வாழ்ந்த ஏழைக் கைம்பெண்ணின் இறந்த மகனைப் பார்த்து, “இளைஞனே, எழுந்திரு” (லூக் 7:11-17) என்று கூறி அவருக்கு வாழ்வு அளித்தார். எருசலேம் கோயிலை வியாபாரக் கூடமாக மாற்றியிருந்த வியாபாரிகளைச் சாட்டையால் விரட்டியடித்தார் (யோவா 2:13-22). சமுதாயத்தின்மீது கொண்டிருந்த அன்பு, அக்கறை ஆகியன அவர் இவ்வாறு செயல்படுவதற்கான ஆற்றலை வழங்கின.


தமது பணியினைத் தொடர, சீடர்களைப் பெயர் சொல்லி அழைத்தார். அவர்களோடு இருந்து ஆற்றல்படுத்தினார். பயிற்சி அளித்து இறையாட்சிப் பணியாளர்களாக அவர்களை உருவாக்கி, ஆற்றலோடு பணி செய்திட அவர்களை அனுப்பி வைத்தார். அவர் இன்றைய இளைஞர்களோடும் உடனிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். இறையழைப்பிற்குத் துணிவுடன் ‘ஆம்’ எனப் பதில்மொழி நல்கிய நாசரேத்து இளம்பெண் மரியா, இளைஞர்கள் தங்களது அழைப்பினைத் தெளிந்து தேர்ந்து கொள்ள இறைவனிடம் பரிந்து பேசுகிறார்.  அவர்களது இளமையைப் புதுப்பித்து ஒளிர்விக்கிறார்.


நம் நல்லெண்ணங்களால் நம்பிக்கை அளிக்கும் சொற்களால், பரிவுச் செயல்களால் இளைஞர்களை ஈர்ப்போம்.  அவர்களோடு பயணிப்போம்.  அவர்கள் தங்களது அழைப்பினைத் தெளிந்து தேர்ந்து கொள்ள வழிகாட்டுவோம். அவர்கள் இறை ஆற்றலோடு பயணிக்க துணைபுரிவோம்.

இல்லங்களில் ஆலயம் -VOCATION SUNDAY- 03.05.2020 - நம் வாழ்வு


என்றும் கிறிஸ்துவின் அன்புடன்

மேதகு ஆயர் செ. சூசைமாணிக்கம்
சிவகங்கை ஆயர்
தலைவர், 
தமிழக இறையழைத்தல், குருத்துவப் பயிற்சிகள், குருக்கள், துறவியர் பணிக்குழு


 

Comment