No icon

வியாகுல மரியன்னையின் புனித கபிரியேல் யூபிலி ஆண்டு - 21.03.2021

வியாகுல மரியன்னையின் புனித கபிரியேல் அவர்கள், திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டின் நினைவாகச் சிறப்பிக்கப்படும் யூபிலி ஆண்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

1862 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி, இத்தாலியின் கிரான் சாஸ்ஸோ தீவில், தனது 24வது வயதில் இறைபதம் சேர்ந்த வியாகுல மரியன்னையின் புனித கபிரியேல் அவர்கள், கிறிஸ்தவத்திற்கு மிகச்சிறப்பான முறையில் சான்றாக விளங்கியவர்மற்றும், அவரின் வாழ்வு, உலகளாவியத் திருஅவைக்கு, குறிப்பாக, புதிய தலைமுறைகளுக்கு, சிறந்ததோர் எடுத்துக்காட்டு என்றும்திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

வியாகுல மரியன்னையின் புனித கபிரியேல் யூபிலி ஆண்டின் துவக்கமாக, அப்புனிதரின் திருத்தலத்தில், புனிதக் கதவுகள் திறக்கப்படும் நிகழ்வில் பங்குகொள்ளும், இத்தாலியின் அப்ருஸ்ஸோ மற்றும் மோலிசே மறைமாவட்ட கிறிஸ்தவக் குழுமங்கள், திருப்பாடுகளின் துறவு சபையினர், மற்றும், அனைவரோடும், தான் ஆன்மிக முறையில் ஒன்றித்திருப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இளையோரின் பாதுகாவலராகிய இந்த புனிதரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள், இப்புனிதரிடம் விளங்கிய எடுத்துக்காட்டான வாழ்வால் அனைவரும் புத்துயிர்பெற உதவும் என்று, தான் நம்புவதாகவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

புனித கபிரியேல், தான் வாழ்ந்த காலத்தில், உயிர்த்துடிப்புள்ள இளைஞராக, உலக இன்பங்களை உதறித்தள்ளிவிட்டு, கிறிஸ்துவில் அடைக்கலம் புகுந்தவர் என்றும், தன்னைப்போல் இன்றைய இளையோரும், கடவுளைத் தேடுவதிலும், ஒருவர் ஒருவருக்கு, குறிப்பாக, நலிந்த சகோதரர், சகோதரிகளுக்கு ஆர்வத்துடன் உதவுவதிலும் வளருமாறு அழைப்புவிடுக்கின்றார் என்றும், திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

1838 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி பிறந்த புனித கபிரியேல், 1856ஆம் ஆண்டில் திருப்பாடுகள் துறவு சபையில் சேர்ந்தார். வியாகுல அன்னைமீது மிகுந்த பக்திகொண்டிருந்த இவர், காசநோயால் தாக்கப்பட்டு, தனது 24வது வயதில் இறைபதம் சேர்ந்தார். 1920ஆம் ஆண்டில், திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட் அவர்கள், இவரை புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 

Comment