No icon

வத்திக்கானின் பொருளாதார, மற்றும் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை - 11.04.2021

 வத்திக்கானின் பொருளாதார, மற்றும் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை

வத்திக்கான் நீதித்துறையின் 92வது நீதி ஆண்டை துவக்கிவைத்த நிகழ்வில் பங்குபெற்ற இத்தாலிய பிரதமர் மரியோ டிராஹி அவர்களுக்கு, தன் வாழ்த்துகளை வெளியிட்டு, வத்திக்கான் நீதித்துறையினருக்கு, தன் துவக்க உரையை திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

பெரிய திருவிழாக் காலங்களில் ஊர்பி எத் ஓர்பி என்ற, ஊருக்கும் உலகுக்குமான செய்தி வழங்கப்படும் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் மேல் மாடியில், பெருந்தொற்று காரணமாக இந்த கூட்டம் இடம்பெறுவது, அதன் திறந்த நிலையையும், உண்மைக்கு ஆதரவாகச் செயல்பட இயேசுவால் அர்ப்பணிக்கப்பட்ட பணியையும் நினைவூட்டுவதாக உள்ளன என்றார்.

மக்களுடன் நெருக்கம், இரக்கம், கனிவு ஆகிய இறைவனுக்கே உரிய பண்புகளுடன் உண்மைக்கு ஊக்கமளிப்பதாக, தாழ்ச்சியோடும், தன்னிலை  மறுப்போடும் செயல்படும் திருஅவை, வரலாற்றுக்குள் நுழைந்து, மக்கள் தங்களிடையே ஒப்புரவைப்பெற, வார்த்தையாம் இறைவன், மற்றும் அருளடையாளங்களின் உதவியுடன், தன் வாழ்வின் எடுத்துக்காட்டுதல் வழியாக, அவர்களை விசுவாசம், விடுதலை, மற்றும், கிறிஸ்துவின் அமைதியை நோக்கி இட்டுச்செல்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

வத்திக்கான் நீதித்துறை விதிமுறைகளில் அண்மையில் புகுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், அதன் குற்றவியல் சட்டங்களில் குறிப்பாக, நீதித்துறை தொடர்புடைய குற்றங்களிலும், ஏனைய நாடுகளின் குற்றவியல் விசாரணை புலனாய்வு அமைப்புகளோடும், வத்திக்கான் காவல்துறையோடும் நெருங்கிய தொடர்பை உருவாக்கவும் உதவியுள்ளன என்பதை குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது மட்டுமல்ல, அனைத்துலக நீதி அமைப்புக்களை கண்காணிக்கும் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு இயந்தவகையில், ஒத்துழைப்புடன் செயல்படும் விதிமுறைகளைக் கண்டுகொண்டு செயல்படுத்தும் அவசரத் தேவையுள்ளது என்றார்.

இதுவரை இத்தகைய விவகாரங்களில் வத்திக்கான் எடுத்துவந்துள்ள நடவடிக்கைகள், வருங்கால நடவடிக்கைகள், மற்றும் ஒத்துழைப்பு குறித்த புதிய நம்பிக்கைகளைத் தருவதாக உள்ளன என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் பொருளாதார, மற்றும், நீதித்துறையில் வெளிப்டைத்தன்மையுடனும், திருஅவையின் துவக்க கால குறிக்கோள்களுடனும், அனைத்துலக அளவில் ஒரு நல்ல எடுத்துக்காட்டுடனும் செயல்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

திருஅவை முழுவதும், பொருளாதார, மற்றும், நீதித் தொடர்புடைய துறையில் இருப்போர் அனைவரும், கடந்த காலத் தவறுகளுக்கு மனம் வருந்துவதோடு, நிகழ்கால, மற்றும் வருங்காலத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகச் செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் அனைத்து அங்கத்தினர்களும் சரிநிகர் தன்மையுடையவர்களென்பதை மனதில் கொண்டவர்களாக, நம்முடைய விசுவாசத்திற்கும், வாழ்வு நடவடிக்கைகளுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Comment