No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

மெக்சிகோ 200வது விடுதலை நாளுக்கு திருத்தந்தை வாழ்த்துச் செய்தி

மெக்சிகோ நாடு விடுதலையடைந்ததன் 200 ஆம் ஆண்டு நிறைவடையும் வேளையில், அந்நாட்டில் வாழ்வோர், தங்கள் பாரம்பரிய வேர்களை ஆழப்படுத்துவதோடு, நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும், மகிழ்வோடும், நம்பிக்கையோடும் கட்டியெழுப்பவும் வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு ஆயர்களுக்கு அனுப்பிய ஒரு மடலில் கூறியுள்ளார்.

இஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து மெக்சிகோ நாடு முழுமையாக விடுதலையடைந்ததன் 200 ஆம் ஆண்டு, செப்டம்பர் 27 திங்களன்று நிறைவு பெற்றதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் ரோஜாலியோ காப்ரேரா லோபஸ் அவர்களுக்கு வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பாரம்பரிய வேர்களை ஆழப்படுத்தும் வேளையில், கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளை சரிசெய்து, அதன் வழியே கடந்த கால காயங்களையும் குணமாக்க இது தகுந்த தருணம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் நற்செய்திப்பணிக்கு தடையாக, திருஅவை செயல்பட்ட தருணங்களுக்கு, திருஅவையின் தலைவர் என்ற முறையில் மன்னிப்பு வேண்டுவதாகக் கூறியுள்ளார்.

பாரம்பரிய வேர்களை ஆழப்படுத்தும் அதே வேளையில், எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப தேவையான நம்பிக்கையையும், மகிழ்வையும் மக்களுக்கு வழங்க, தலத்திருஅவை கடமைப்பட்டுள்ளது என்று, திருத்தந்தை தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மெக்சிகோ நாட்டின் பாதுகாவலரான குவாதலூப்பே அன்னை மரியா தோன்றியதன் 500 ஆம் ஆண்டு நிறைவு, 2031 ஆம் ஆண்டு நிகழவிருப்பதை தன் மடலில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அன்னையின் பரிந்துரையை வேண்டி, தன் மடலை நிறைவு செய்துள்ளார்.

Comment