No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

கர்தினால் எஸ்டீவெஸ் அவர்களின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

திருவழிபாட்டு பேராயத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் ஜார்ஜ் மெடினா எஸ்டீவெஸ் அவர்கள், சிலே நாட்டில், அக்டோபர் 3 ஆம் தேதி ஞாயிறன்று, தன் 94வது வயதில் இறையடி சேர்ந்தார். இறைவனுக்கும், உலகளாவிய திருஅவைக்கும், பல ஆண்டுகள் பிரமாணிக்கமாக பணியாற்றிய கர்தினால் ஜார்ஜ் மெடினா எஸ்டீவெஸ் அவர்களுக்கு, இறைவன் நிறையமைதியையும், மகிமையின் மகுடத்தையும் வழங்குவாராக என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இரங்கல் தந்தியில் கூறியுள்ளார்.

சிலே நாட்டின் திருப்பீடத்தூதராகப் பணியாற்றும் பேராயர் ஆல்பெர்ட்டோ ஆர்டிகா மார்டின் அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இந்த தந்திச் செய்தியில், கர்தினால் எஸ்டீவெஸ் அவர்களின் பிரிவால் துயருறும் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர் பணியாற்றிய வால்பெரோசோ உயர் மறைமாவட்டத்தின் மக்கள் அனைவருக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களை கர்தினால்கள் அவை திருத்தந்தையாக தெரிவு செய்ததும், அச்செய்தியை, புனித பேதுரு பெருங்கோவில் மேல் மாடத்திலிருந்து அறிவித்த பெருமை, கர்தினால் எஸ்டீவெஸ் அவர்களை சேரும்.

1926 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி சிலே நாட்டில் பிறந்த எஸ்டீவெஸ் அவர்கள், 1954 ஆம் ஆண்டு தன் 28வது வயதில் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார். 1962 ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை புனித 23 ஆம் யோவான் அவர்கள், அருள்பணி எஸ்டீவெஸ் அவர்களை, 2 ஆம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவராக நியமித்ததைத் தொடர்ந்து, இவரது பணிகள் வத்திக்கானில் துவங்கின.

2 ஆம் வத்திக்கான் சங்கத்தைத் தொடர்ந்து, அடுத்த 30 ஆண்டுகள், வத்திக்கானில் உள்ள பல்வேறு பிரிவுகளில் இவர் பணியாற்றிவந்தார். 1984 ஆம் ஆண்டு, தன் 58வது வயதில் ஆயராக நியமனம் பெற்ற எஸ்டீவெஸ் அவர்களை, திருத்தந்தை புனித 2 ஆம் யோவான் பவுல் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில், ஆயராக அருள்பொழிவு செய்தார். 1996 ஆம் ஆண்டு திருவழிபாட்டு பேராயத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்டீவெஸ் அவர்கள், 1998 ஆம் ஆண்டு இப்பேராயத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதே ஆண்டு, திருத்தந்தை 2 ஆம் யோவான் பவுல் அவர்கள் இவரை கர்தினாலாக உயர்த்தினார்.

முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களைத் தெரிவு செய்த கர்தினால்கள் அவையில் பங்கேற்ற கர்தினால் எஸ்டீவெஸ் அவர்கள், அத்திருத்தந்தையை புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்தோருக்கு அறிமுகம் செய்து வைத்ததோடு, அவர் திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்ற திருப்பலியில், அவருக்கு பாலியம் என்ற தோள்பட்டையையும் அணிவித்தார். அக்டோபர் 3, ஞாயிற்றுக்கிழமை, தன் 94வது வயதில் இறையடி சேர்ந்த கர்தினால் எஸ்டீவெஸ் அவர்களின் மறைவையடுத்து, கத்தோலிக்கத் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 215 ஆக குறைந்துள்ளது. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 121 ஆகும்.

Comment