No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

பல்கலைக்கழகத்தில் சூழலியல் பாடத்திட்டத்தை உருவாக்க திருத்தந்தையின் மடல்

படைப்பு என்ற கொடையைப் பேணிக்காக்கும் கல்வியைப் புகட்டும் பொறுப்பு திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது பல்கலைக்கழகத்தின் கடமை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய ஒரு மடலில் கூறியுள்ளார்.

"சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் நம் பொதுவான இல்லத்தின் பராமரிப்பு மற்றும் படைப்பின் பாதுகாப்பு" என்ற பெயரில், இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் துவக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தைக் குறித்து, இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் அவர்களுக்கு திருத்தந்தை இம்மடலை எழுதியுள்ளார்.

சுற்றுச்சூழலைக் குறித்த சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால், சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல்; மனித சமுதாயத்திற்கும் அழிவுகளைக் கொணரும் போக்குகள் நம்மிடையே பெருகியுள்ளன  என்று திருத்தந்தை இம்மடலில் தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளார். தூக்கியெறியும் கலாச்சாரம் உலகில் வளர்ந்துள்ளதன் விளைவாக, வறுமை, ஏற்றத்தாழ்வுகள், கட்டாயப் புலம்பெயர்வு, பசி, பட்டினி என்ற அனைத்து கொடுமைகளும் வளர்ந்துள்ளன என்று, திருத்தந்தை இம்மடலில் கூறியுள்ளார்.

படைப்பின் பாதுகாப்பைக் குறித்த பாடங்கள் கத்தோலிக்கத் திருஅவையின் பாரம்பரியத்தில், துவக்கத்திலிருந்தே வழங்கப்பட்டுள்ளன என்று இம்மடலில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் சமுதாயக் கோட்பாடுகளை, வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் முக்கிய கடமை என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

படைப்பைக் குறித்த நம் சிந்தனைகளை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள கான்ஸ்தாந்திநோபிளை தலைமைப்பீடமாகக் கொண்டுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை கத்தோலிக்கத் திருஅவைக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதலுக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என்பதையும் திருத்தந்தை இம்மடலில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். படைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, தனி மனிதரின் ஆர்வமும், சட்டத் திட்டங்களும் மட்டும் உதவி செய்யப்போவதில்லை என்று கூறியத் திருத்தந்தை, படைப்பின் பாதுகாப்பு என்ற கலாச்சாரத்தை வளர்க்க இளம்வயதிலிருந்தே தகுந்த தயாரிப்புகள் தேவை என்று கூறியுள்ளார்.

சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த கல்வி, திருஅவையின் கல்வித் திட்டத்தில் ஓர் அங்கமாக இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காக, "சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல், நம் பொதுவான இல்லத்தின் பராமரிப்பு மற்றும் படைப்பின் பாதுகாப்பு" என்ற பாடத்திட்டத்தை இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நிறுவ, தான் முடிவு செய்ததாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் கூறியுள்ளார்.

இறையியல், மெய்யியல், சட்டங்கள், பொருளாதாரம், சமுதாயம், கலாச்சாரம், சூழலியல், சுற்றுச்சூழல், நன்னெறி, அறிவியல் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து, கல்வி நடைபெறவேண்டும் என்ற கனவுடன் இந்தப் பாடத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது என்பதை திருத்தந்தை இம்மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பயிலும் மாணவர்கள், அவர்களை வழிநடத்தும் பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து, பணிவுடனும், தீவிர ஆர்வத்துடனும் இந்தப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவர் என்று தான் நம்புவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடலின் இறுதியில் அழைப்பு விடுத்துள்ளார்.

Comment