No icon

பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு-திருப்பலி முன்னுரை

அருள்பணி. P. ஜான் பால்

பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு

(எசா 35:4-7, யாக் 2:1-5, மாற் 7:31-37)

திருப்பலி முன்னுரை

“தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவர் நாவைக் தொட்டார்” (மாற் 7:33).

காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே என்று, ஆண்டவர் இயேசுவின் புதுமைகளை கண்ட மக்கள் வியப்பால் ஆழ்ந்தார்கள். காரணம், எசாயா இறைவாக்கினர்: இறைவன் வருவார், அவர் வருகிறபொழுது பார்வையற்றோர் பார்ப்பர், வாய்பேசாதோர் பேசுவர், காதுகேளாதோர் கேட்பர் என்று இம்மக்களுக்கு எடுத்துரைத்திருக்கிறார். எனவே, இதோ எசாயா இறைவாக்கினரின் சொல்லுக்கு ஏற்ப இந்த இயேசு அதிசயங்கள், அற்புதங்கள் செய்கிறாரே இவர்தான் இறைமகனோ என்று வியப்பில் இருக்கிறார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ இதைவிட மேலான அற்புதத்தை செய்கிறார். குறைபாடுகளோடு பிறக்கும் மனிதன் பாவி, அவன் தீண்டதகாதவன், அவனை தொடுபவனும் தீண்டதகாதவனாக மாறுகிறான் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வந்த அந்த மக்களின் கண்கள் முன்பாகவே இயேசு குறைபாடுகள் கொண்ட அந்த மனிதனை தொடுகிறார். இதுதான் புதுமை இன்று நாம் குறைபாடுகள் கொண்ட மனிதர்களை வெறுக்கிறோமா? அல்லது நேசிக்கிறோமா? சிந்திப்போம்... மேலும் இத்திருப்பலியில் நம் ஆசிரியர்களுக்காகவும் சிறப்பாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படியாத இஸ்ரயேல் மக்கள் அண்டை நாடான அசீரியாவின் படையைக் கண்டு கலங்கி போய் இருக்கும் வேளையில், எசாயா இறைவாக்கினர் அம்மக்களை கண்டு, "அஞ்சாதீர்கள் திடன் கொள்ளுங்கள் ஆண்டவரே நமக்காக பழிதீர்க்க வருகிறார்." அவரே நம் உடல் உள்ளக்குறைபாடுகளை நலமாக்குவார் என்று கூறுவதை இந்த முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

உலகின் பார்வையில் சிலர் நம் கண்களுக்கு ஏழைகளாய் தெரியலாம். ஆனால், ஆண்டவரின் பார்வையில் அவர்களும் வாக்களிக்கப்பட்ட அரசின் உரிமையாளர்கள். எனவே, ஏழைகளை காண்கின்ற போது அவர்களை ஏளனம் செய்யாமல் மதித்து அன்பு செய்ய வேண்டும் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தை கேட்போம்.

 மன்றாட்டுக்கள்

1. எங்கள் வானகத் தந்தையே! உம் திருஅவை வழிநடத்தும் பணியாளர்கள் தங்கள் வாழ்வால் உம் மந்தைகளின் இதயங்களை தொட்டு, அனைவரும் ஒன்று சேர்வதற்கு எதிராக இருக்கின்ற குறைபாடுகளைக் களைந்து, ஒரே குடும்பமாய் உம்மை நோக்கி வந்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எங்கள் வானகத் தந்தையே! நாட்டை ஆளும் தலைவர்கள் வேற்றுமைகளை பாராட்டாமல், எல்லா மக்களையும் நாட்டின் குடிமக்களாக கருதி, பாராபட்சம் பாராமல் நல்லாட்சி தந்து மக்களை பாதுகாக்க வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் அன்புத்தந்தையே! உலக ஆசைகளில் மனதை இழந்து போர்புரிந்து, மனித உயிர்களை துச்சமென மதித்து வாழும் எங்களின் மனங்களை மாற்றி, நீரே எங்களின் செல்வம், எங்களின் அடைக்கலம் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்கள் பரமதந்தையே ஆசிரியர்கள் தினத்தை கொண்டாடும் இந்நாளில், எங்கள் வாழ்வு மலர தங்கள் வாழ்வை கரைத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களையும், அவர்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்து மென்மேலும் எல்லா நிலைகளிலும் அவர்கள் வளம்காண வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்பின் இறைவா! உலக நாடுகளிடையே அமைதியும் நல்லிணக்கமும் நிலவிட மன்றாடுகிறோம்.  குறிப்பாக,  ஆப்கானிஸ்தான் நாட்டிற்காக மன்றாடுகிறோம். தலிபான்களின் பிடியில் சிக்குண்டுள்ள இந்நாட்டில் போரும் பூசலும் மறைந்து அமைதி நிலவவும், துப்பாக்கி மற்றும் பீரங்கிகள் மௌனிக்கவும் மனித உரிமைகளும் பெண்களின் மாண்பும் காக்கப்படவும் பயங்கரவாதத்தின் பாதையின் இந்நாடு மீண்டும் திரும்பாதிருக்கவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Comment