No icon

பொதுக்காலம் 26 ஆம் ஞாயிறு

  பொதுக்காலம் 26 ஆம் ஞாயிறு (எண் 11:25-29. யாக் 5:1-6, மாற் 9:38-43,45,47-48)

                                                                                                                                                                       

திருப்பலி முன்னுரை

நம் ஆண்டவருக்கு எதிரானவர் யார்? ஆண்டவருக்குச் சார்பானவர் யார்? என்பதைப் பற்றி இன்றைய நற்செய்தி எடுத்தியம்புகிறது. என் பெயரை பயன்படுத்தி அற்புதங்கள், அதிசயங்கள் செய்பவரை தடுக்க வேண்டாம். ஏனெனில், அவர் நம்மோடு இருக்கிறார். நமக்கு எதிராக செல்ல மாட்டார் என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார். ஆனால், இயேசுவின் வாழ்வில் அவரோடு இருந்தவர்கள்தான் அவருக்கு எதிராக நடந்துகொண்டனர் என்பதை நாம் அறிகிறோம்.  “இது என் உடல், என் இரத்தம்” உண்ணுங்கள் என்று சொன்னதும், இயேசுவின் சீடர்கள் தான் முதலில் முணுமுணுத்து அவரைவிட்டுப் போனார்கள். முப்பது வெள்ளிக்காசுக்காக முத்தமிட்டு ஒரு சீடர் அவரைக் காட்டி கொடுத்தார். இன்னொரு சீடரோ அவரை எனக்குத் தெரியாது என்று மறுதலிக்கிறார். ஒலிவ மலையில் கெத்சமேனியில் மற்ற சீடர்கள் உயிருக்குப் பயந்து ஓடிப்போகின்றனர். அப்படியென்றால்  நற்செய்தி ஒளியில் நம்மோடு இருப்பவர், நமக்கு எதிராக சொல்லமாட்டார் என்பதன் உண்மையான பொருள் என்ன? அன்பார்ந்த இறைமக்களே! அதன; உண்மையான பொருள் என்னவெனில்  நம்பிக்கையில், சிந்தனையில், பார்வையில், செயலில் ஆண்டவர் இயேசுவைப் போல இருப்பதுதான். ஆம். நாம் இயேசுவாக இருந்தால் ஒருபோதும் இயேசுவுக்கு எதிரானவர்களாக இருக்கமாட்டோம்; செயல்படமாட்டோம். ஆகவே இன்றைய திருப்பலியில் ஆண்டவர் இயேசுவோடு இருப்பதற்காகவும் அவரைப்போலவே வாழ்வதற்காகவும் இன்றைய திருப்பலியில் வரம் கேட்போம். என்பதை உணர்ந்திட பங்குபெறுவோம் இத்திருப்பலியில்

முதல் வாசக முன்னுரை

எகிப்தின் அடிமை பிடியிலிருந்து கடவுள் இஸ்ரயேல் மக்களை மீட்டு வருகிறார். மோசே ஒருவரால் மட்டுமே அவர்களின் இப்பெரிய பளுவை சுமக்க முடியவில்லை. எனவே, கடவுள் மோசேவோடு இணைந்து மக்களை வழிநடத்தவும், இறைவாக்குரைக்கவும் எழுபது பேரை தேர்ந்தெடுக்கிறார் என்று கூறும் இம்முதல் வாசகத்தை கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் யாக்கோபு தனது திருமடலில் செல்வந்தர்களை எச்சரிக்கிறார். வேலை செய்யும் வேலையாட்களுக்கு சரியான கூலி தராமல், அதை பதுக்கி செல்வந்தர்களாக வாழ்கிறீர்கள். ஆனால், நீங்கள் சேர்த்த செல்வம் மக்கி போகிறது, துருப்பிடித்து போகிறது. எனவே, கொல்லப்படும் நாளுக்காக உங்கள் செல்வங்களை சேர்த்து வைக்காதீர்கள் என்று எச்சரிக்கும் இவ்விரண்டாம் வாசகத்தை கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. எங்கள் விண்ணகத் தந்தையே! உம் திருஅவையை வழிநடத்தும் உம் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர்  அனைவரும் சொல்லிலும், செயலிலும் உம் திருமகனைப்போல இருக்கவும், இறைவார்த்தையை தம் வாழ்வால் அறிவிக்க தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து வாழ்ந்திடவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எங்கள் பரம தந்தையே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள், நாட்டு மக்கள் அனைவருக்கும் தலைவர்கள், அவர்களுக்கு பணிபுரிய தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து ஏழை, எளிய மக்களின் நலனில் அதிகம் ஆர்வம் கொண்டு உழைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் அன்புத்தந்தையே! நாங்கள் வைத்திருக்கும் செல்வங்களை எங்கள் சக மனிதர்களிடையே பகிர்ந்து வாழ்ந்து, விண்ணக வீட்டிலே அழிந்து போகாத, துருபிடித்து போகாத செல்வத்தை பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்கள் வானகத்தந்தையே! எம் பங்கில் உள்ள முதியவர்கள், நோயாளிகளை ஆசீர்வதியும். வாழ்வு தரும் வார்த்தை உம்மிடமே உள்ளன என்பதில் ஆழமாக நம்பிக்கை வைத்து உம்மை நாடி வரும் இவர்களுக்கு நீரே குணமளித்து, வாழ்வுதர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எங்கள் பரம்பொருளே! கல்வி பயிலும் மாணவர்களை நிறைவாக ஆசீர்வதியும். இப்பெருந்தொற்று காலத்திலே நிறைவான கல்வியை பெறுவதற்கான கால சூழ்நிலையை நீர் அமைத்து தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Comment