No icon

16.06.2019 மூவொரு கடவுள் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
கிறிஸ்துவில் பேரன்புக்குரிய வர்களே, ’கூட்டுறவே நாட்டுயர்வு’ என்றும் ’உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்’ என்றும் உறவின் சிறப்பை எடுத்தோதும் வரிகளை நாம் வாசித்தும் பாடியும் மகிழ்ந்திருக்கின்றோம். நம் தூய திருஅவை இன்று மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. ஒரே கடவுள் மூன்று ஆள்களாய் உள்ளார்’ என்ற பேருண்மையைப் புரிந்து கொள்வதன் வழியாக நம் வாழ்வில் கடவுளின் செயல்பாடுகள் எவ்விதங்களில் சிறப்படைகின்றன என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.
தந்தை, மகன், தூய ஆவி என்ற செயல்பாட்டுக் காரணப் பெயரைக் கொண்டிருக்கும் யாவே இறைவன், என்றும் ’இருக்கின்றவராக இருக்கும்’ பேரிறைவன், மீட்பு வரலாற்றில் ஆற்றிய வல்ல செயல்கள் பல. அவற்றின் வழியாக இம்மை வாழ்வில்
நமக்குச் செம்மை சேர்க்கும் அரும்பணி களை மூவொரு கடவுள் புரிந்து வருகிறார். படைப்பனைத்தையும் தம் நுண்ணாற்றலால் வடித்தளித்த தந்தையாம் கடவுள், ஏற்றபொழுதில் தம் மகன் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பி நம்மை அடிமை, சாவு போன்றவற்றிலிருந்து மீட்டார். இயேசு
வுக்குரிய மாட்சியை அளித்து, தம்
வலப்பக்கத்தில் அமர்த்திய அவர்
துணையாளராம் தூய ஆவியாரை
வழங்கி நமது வாழ்வை அர்த்தமுள்ள தாகவும் ஆசிக்குரியதாகவும் ஆக்கி
னார். இந்நன்னாளில் நமது குடும் பம், பங்கு ஆகியவை உறவின் தளங்களாக விளங்க இறையருளை இறைஞ்சுவோம்.
முதல் வாசக முன்னுரை: நீதிமொழிகள் 8:21-31
ஒருவரது சிறந்த செயல்பாட்டிற்கு ஞானம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஞானத்தின் தோற்றுனர் கடவுளே. கடவுள் தாம் படைத்தவை அனைத்திலும் ஞானத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதைத் தம் செல்லப்பிள்ளையாய் தம் அருகில் வைத்துக் கொண்டு பூவுலகை வடிவமைத்தார் எனக் கூறும் நீதிமொழிகள் நூலிலிருந்து முதல் வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 8: 3-4, 5-6, 7-8
பல்லவி: ஆண்டவரே உம் பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது.
இரண்டாவம் வாசக முன்னுரை: உரோமையர் 5:1-5
கடவுளுக்கு ஏற்புடையவராகும் உரிமை, நாம் இயேசுமீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. அதனால் கடவுளின் மாட்சிமையில் பங்கு பெறுவோம் என்று எதிர்நோக்கி நாம் பெருமகிழ்ச்சியடைய முடியும் என்றும் அதுவும் தூய ஆவி வழியாக நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ள கடவுளின் அன்பால் நிகழும் என்றும் விளக்கும் இரண்டாம் வாசகத்துக்குச் செவி கொடுப்போம்.
நற்செய்தி: யோவான் 16:12-15
1. நல்லுறவின் நாயகராம் இறைவா
எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் திருநிலையினர் அனைவரும் படிப்பு, பணிநிலை, வசதிவாய்ப்புகள், பணித்தளம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடு கருதி உறவில் பின்னடைவு காணாமல், எல்லாரும் உமது ஆட்சிப் பணியாளர்கள் என்ற பார்வைகொண்டு நல்லுறவின், நன்மாதிரிகளாகத் திகழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆளும் பணியை அறவழியில் ஆற்ற அழைத்த இறைவா!
மத்தியில் அமைந்துள்ள பாஜக தலைமையிலான அரசு தமிழக உரிமைகளை தங்குதடையின்றி வழங்கவும், தமிழக அரசு தமிழகத்தின் நலன்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்திற்கும் இசைவளிக்காமல் அதே சமயத்தில் விவேகத்தோடும் துணிவோடும் செயல்பட்டு மாநில முன்னேற்றத்தில் அக்கறைகாட்டும் அரசாகத் திகழவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒற்றுமை உணர்வைத் தூண்டியெழுப்பும் இறைவா!
எங்கள் பங்கு, நிறுவனங்கள், அன்பியங்கள், குடும்பங்கள் ஒவ்வொன்றும் உமது ஒருமைப்பாட்டுணர்வை நன் மாதிரியாகக் கொண்டு வாழவும் ஒருவரை ஒருவர் நிறைவு செய்பவர் என்ற மனப்பாங்கில் அன்பு, மதிப்பு, ஏற்பு, அரவணைப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் தளங்களாக விளங்கவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. கேட்பதற்கும் மேலாக வழங்கக் காத்திருக்கும் இறைவா!
பூமியை எமது பொது இல்லமாகவும், படைப்புயிர்களை சிறப்பாக ஆண்டு நடத்தி வளங்களைக் குவிக்க உதவும் கருவிகளாகவும், இயற்கைக் கோள்களை உமது மாட்சியைப் பறைசாற்றும் பல்வேறு சூழல்களாகவும் உணர்ந்து வாழும் நாங்கள் அவற்றைச் சிறப்பாகப் பாதுகாக்கவும் அதன் வழியாக போதிய மழை, கனிம வளங்கள், தூய காற்று மற்றும் வாழ்வாதாரங்களைப் பெற்று வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. குட்டித் திருஅவையாம் குடும்பங்களைக் காக்கும் இறைவா!
இன்று எம் குடும்பங்கள் சந்திக்கும் நல்லுறவற்ற சூழலால் தனிமை, நோய், மணமுறிவு, பொறுப்புகளைத் தட்டிக்கழித்தல், வறுமை, பிணி, தன்னலப்போக்கு ஆகியவை பெருகியுள்ளன. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், தங்களையே சுய பரிசோதனை செய்து, தங்களது திறமைகளை நல்ல விதத்தில் பயன்படுத்தி குடும்பம் எல்லாச் சூழலிலும் முன்னேற்றம் காண உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Comment