வரலாறு

ஆண்டவரின் சமாதானமும், மகிழ்ச்சியும், நிறைவாழ்வும்  தமிழகத் திருச்சபையின் தனிப்பெரும் வார இதழான ‘நம்வாழ்வு’  இணையதள வாசகர்கள் உங்கள் ஒவ்வொருவரோடும் என்றும் இருப்பதாக! 

தமிழக ஆயர் பேரவை, தமிழக கத்தோலிக்க திருச்சபையின் தேவையினைக் கருதி, 1976 ஆம் ஆண்டு ‘நம்வாழ்வு’ என்ற இவ்வார இதழை பேரார்வத்துடன் தொடங்கியது. கடந்த 42 ஆண்டுகாலமாக தமிழக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கென்று நடத்தப்படுகிற ஒரே வார இதழான நம்வாழ்வை, ஆல் போல் தழைத்து அருகு போல் வேர்விட்டு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதுப்பொலிவுப் பெற்று இப்பொழுது இணைய வலை தளத்திலும் இடம்பெறுவது இதன் வளர்ச்சிக்கு இன்னொரு எடுத்துக்காட்டாகும். 
உலகம் முழுவதும் விரவி வாழும் தமிழன்பர்கள் அனைவரும் திருச்சபையையும் அதன் போதனையையும் செயல்பாட்டையும் தங்கள் சாளரங்கள் வழியாக பார்த்துப் பயன்பெற இந்த இணையதளம் நிச்சயம் உதவும்.
    கிறிஸ்தவர்களின் ஐனநாயக குரலாக, ஆயர்களின் வலிமையான பேனாவாக, சிறுபான்மை மக்களின் போர்வாளாக உள்ள ‘நம்வாழ்வு’ வார இதழ், வலிமையான ஜனநாயக சக்தியாக தமிழ்க் கிறிஸ்தவர்கள் உருவெடுக்க, மிகுந்த பொறுப்புணர்வுடன் எழுத்துக்கள் வழியாக எல்லோரையும் ஒருங்கிணைக்கும ஜனநாயகப் பணியினை செவ்வனே மேற்கொள்கிறது. நமக்கென்று உள்ள இந்த ஒரே ஊடகத்தை வலுவுள்ளதாக்கிட, உங்களுடைய மேலான ஆதரவும், தாராளமான ஒத்துழைப்பும், பங்களிப்பும்  மிகவும் தேவையாயிருக்கிறது
    நம்வாழ்வு வார இதழில் இடம்பெறுகின்ற அரசியல் விழிப்புணர்வு கட்டுரைகள், சமூக பகுப்பாய்வுக் கட்டுரைகள், தமிழக-இந்திய-ஆசிய – உலகளாவிய திருச்சபைச் செய்திகள், சிறுவர் பக்கம், இளைஞர் பக்கம், சிறுகதைகள், புனித பவுல் ஆண்டிற்கான கட்டுரைகள், ஞாயிறு மறையுரை சிந்தனைகள், புனிதர் பக்கம், செப உதவி, தகவல்பலகை .. என பக்கத்திற்குப் பக்கம் அறுசுவை படைப்புகள் இடம் பெறுகின்றன.    இவை நிச்சயம் வளமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் மனித மாண்புக்கும்  களம் அமைத்துக்கொடுக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
    இந்த இணைய வலை தள முயற்சியை மேற்கொண்டு, இக்கால  தலைமுறையினருக்கும் நம்வாழ்வை அறிமுகம் செய்து வைத்துள்ள  நம்வாழ்வின் ஆசிரியர் குழுவை ஆகியோரை மனதாரப் பாரட்டுகிறேன்.
    உலகமெங்கும் வாழும் தமிழர்களையும், கிறிஸ்தவர்களையும் ஒருங்கிணைக்கும் நம்வாழ்வின் இம்முயற்சியும், அரசியல்-சமுதாய-ஆன்மீகப் பணியும் வெற்றிப்பெறவும் நாளடைவில் நம்வாழ்வு நாளிதழாக மலர்ந்திடவும்  வாழ்த்துகிறேன். 
கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நமக்கென்று உள்ள ஒரே அச்சு ஊடகமான நம்வாழ்வு, தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 8 லட்சம் கத்தோலிக்க குடும்பங்களில், இது வெறும் 15000 குடும்பங்களை மட்டுமே (அதாவது 48 லட்சம் கத்தோலிக்கர்களில் வெறும் ஒரே ஒரு லட்சம் வாசகர்களை மட்டுமே) வாரந்தோறும் சென்றடைகிறது. ஆகையால் நம் வாழ்வுக்கு புதிய சந்தாதாரர்களை சேர்த்து உதவுங்கள்: நற்செய்திப் பணியை ஊக்குவிக்க ‘ நம் வாழ்வு’ புரவலர் திட்டத்திற்கு தாரளமாக நன்கொடை வழங்கி தாங்கிப் பிடியுங்கள். 
    வாசகர்களாகிய உங்களுக்கு உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சமாதானமும், மகிழ்ச்சியும், நிறைவாழ்வும் கிடைக்கப்பெறுவதாக!
ஒருங்கிணைவோம்!  இயக்கமாகுவோம்! எழுச்சிப் பெறுவோம்!     
மேதகு ஆயர் ஜார்ஜ் அந்தோனிசாமி
தலைவர், 
நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கம், சென்னை.
 
 

.

தலைவர்

ஆசிரியர்

துணை ஆசிரியர்கள்

உடன் பணியாளர்கள்

உடன் முகவர்கள்