No icon

குரோவேசியா நிலநடுக்கம் - திருத்தந்தையின் விண்ணப்பம்

குரோவேசியா நிலநடுக்கம் - திருத்தந்தையின் விண்ணப்பம்
டிசம்பர் 29, செவ்வாயன்று குரோவேசியா நாட்டில் ஏற்பட்ட சக்திமிகுந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டார்.

டிசம்பர் 30 ஆம் தேதி புதனன்று தான் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், இந்த விண்ணப்பத்தை வெளியிட்ட திருத்தந்தை, குரோவேசியா நாட்டில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்காக தான் சிறப்பான இறைவேண்டலை மேற்கொள்வதாகக் கூறினார்.

அனைத்துலக சமுதாயத்தின் உதவிகளுடன் அந்நாட்டு அதிகாரிகள் மக்களுக்குத் தேவையான உதவிகளை ஆற்றவும், நிலநடுக்கத்தால் தங்கள் உறவுகளையும் இல்லங்களையும் இழ்ந்திருப்போருக்கு நம்பிக்கையைக் கொணரவும் தான் செபிப்பதாக திருத்தந்தை கூறினார்..

டிசம்பர் 30 புதனன்று திருத்தந்தை வழங்கிய புதன் மறைக்கல்வி உரையின் ஒரு கருத்தையும், இந்த உரையின் இறுதியில், குரோவேசியா நாட்டிற்காக அவர் விடுத்த விண்ணப்பத்தையும் இரு டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டுள்ளார்.

குரோவேசியா நாட்டின் தலைநகர் ஷாகிரேப்புக்கு அருகே 50 கி.மீ. தூரத்தில் உள்ள பேத்ரின்யா என்ற ஊரில், செவ்வாய் பகல் 12.19 மணிக்கு ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தால், குரோவேசியா, போஸ்னியா-ஹெர்சகொவினா, ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, ரொமேனியா ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன என்று செய்திகள் கூறுகின்றன.

பேத்ரின்யா நகரிலுள்ள கட்டடங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இடிந்து விழுந்திருப்பதாகவும், அந்த இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நகர மேயர் கூறியுள்ளார்.

இதுவரை ஏழுபேரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ள வேளையில், நிலநடுக்கம் உருவாக்கிய இடிபாடுகளுக்கிடையே இன்னும் பலரை தேடிவருவதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.

குரோவேசியா நாட்டில் பணியாற்றிவரும் காரித்தாஸ் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, இத்தாலிய காரித்தாஸின் உதவியுடன் முதலுதவிகளையும், மீட்புப் பணிகளையும் ஆற்றிவருவதாக, வத்திக்கான் செய்தி கூறுகிறது.
 

Comment