No icon

St.Joseph and The Church

புனித யோசேப்பு பக்தி வரலாறு

கத்தோலிக்கத் திருஅவையானது மார்ச் 19 ஆம்தேதி கன்னி மரியாவின் கணவரான புனித யோசேப்பு திருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது.
தவக்காலத்தில் சிறப்பிக்கப்படும் இரு பெருவிழாக் களில் ஒன்றாக இத்திருநாள் அமைந்துள்ளது. மற்றொன்று புனித கன்னி மரியாவுக்கு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிக்கப்பட்ட பெருவிழா. இதுவே புனித யோசேப்புக்கு திருஅவை வழங்கும் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
கி.பி. முதல் நூற்றாண்டில் மத்தேயு, லூக்கா ஆகியோர் எழுதிய நற்செய்தி நூல்கள் இயேசுவின் குழந்தைப் பருவத்தில் யோசேப்பின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துரைக்கின்றன. ஆனால் 2 ஆம் நூற்றாண்டில் மரியாவின் கன்னிமைக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக யோசேப் பைக் குறித்து கற்பனைக் கதைகள் உருவாயின. மரியாவுக்கு முன்பே யோசேப்பு மணந்திருந்த முதல் மனைவிக்கு பிறந்தவர்களே நற்செய்திகள் கூறுகின்ற இயேசுவின் சகோதர, சகோதரிகள் என்ற தவறான விளக்கம் அளிக்கப்பட்டது.
3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பாலான கிறிஸ்தவர்கள், யோசேப்பு முதல் மனைவியை இழந்து மிகவும் முதிர்ந்த வயதிலேயே மரியாவைத் திருமணம் செய்து கொண்டார் என நம்பினர். அதே நேரம், எகிப்தில் கிறிஸ்தவம் விரைவாகப் பரவியதற்கு திருக்குடும்பம் அங்கு சென்றதே காரணம் என கருதிய அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் மத்தியில் புனித யோசேப்பு மீதான பக்தி தோன்றி வளர்ந்தது. “புனித யோசேப்பு தலைமையில் திருக்குடும்பம் எகிப்தில் நுழைந்தபோது, இங்கிருந்த பேய்களின் கோவில்கள் இடிந்தன” என அலெக்சாந்திரியாவின் கிளமெந்த் (-215) குறிப்பிடுவது கவனத்திற்குரியது.
4 ஆம் நூற்றாண்டில் யோசேப்பு குறித்த கற்பனைக் கதைகளுக்கு முடிவுகட்ட திருஅவைத் தந்தையர்கள் முயன்றனர். மரியா யோசேப்பின் இரண்டாவது மனைவி என்ற தவறான கருத்தை மறுத்த புனித ஜெரோம் (347-420), “மரியாவின் பொருட்டு யோசேப்பும் கன்னிமையுடன் இருந் தார். யோசேப்புக்குப் பல மனைவியர் இருந்தனர், அவர்களுக்குப் பிறந்தவர்களே ஆண்டவரின் சகோதரர்கள் என்ற சிலரது கண்டுபிடிப்பு, போக்கிரித்தனத்தில் இருந்து ஊற்றெடுத்து வருகிறது” என்று கண்டிப்பதைக் காண்கிறோம். யோசேப்பு இறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு, ஜூலை 20ந்தேதி அவருக்கு விழா
கொண்டாடும் வழக்கம் எகிப்து நாட்டில் தோன்றியது. கொன்ஸ்தாந்திநோபிள் பேராயரான புனித யோவான் கிறிசோஸ்தொம் (-407), “திருக் குடும்பத்தின் தலைவர் என்ற மிக மேலான பொறுப்பைப் பெற்றிருந்த யோசேப்பு, மிகுந்த தாழ்ச்சியும் தன்னடக்கமும் நிறைந்தவராக வாழ்ந்தார்” என்று புகழ்ந்துரைக்கிறார். ஹிப்போ ஆயரான புனித அகுஸ்தீன் (-430), “மரியாவின் கன்னிமையை வன்முறையால் பறிக்காத, வன்முறையாளர்களிடம் இருந்து பாதுகாக்கின்ற நேர்மையாளர் யோசேப்புக்கு அவர் மனைவி யாக்கப் பெற்றார்” என்று மரியாவின் வாழ்வில் யோசேப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்து கிறார்.

6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவியான புனித லெயோனார்து (-559), “வானதூதர்கள் மற்றும் விண்ணோருக்கு அரசியாக இருக்கின்ற இறையன்னை மரியாவைத் திருமணம் செய்த புனித யோசேப்பும் விண்ணோர் அனைவருக்கும் அரசராக இருக்கிறார்” என்று சுட்டிக்காட்டுகிறார்.


7ஆம் நூற்றாண்டில் செவில்லே ஆயராக இருந்த புனித இசிதோர் (-636), “இறையன்னை மரியாவுக்குப் பிறகு, அனைத்து புனிதர்களுக்கும் மேலானவராக புனித யோசேப்பு திகழ்கிறார்” என்று அவரது மேன்மையை எடுத்துரைக்கிறார்.“மரியாவின் கணவரானதால் யோசேப்பு மிகவும் மேலான மகத்துவம் பெற்றுவிட்டார். மரியா எந்த இடத்தில் கடவுளால் வைக்கப்பட்டாரோ, அதற்கு நிகரான கணவராக யோசேப்பு இருக்கிறார். அவருக்கு தந்தைக் குரிய அன்பு, ஆளுமை ஆகிய வற்றையும், அவருக்கே உரிய காப்பாளர் பணியையும் கடவுள்
அளித்திருந்தார். புனித யோசேப் பின் பெயரே, அவரது மேன்மை மற்றும் தூய செயல்பாடுகளைப் பறைசாற்றுகிறது” என்று தமஸ்கு
புனித யோவான் (-754) கூறு கிறார்.கி.பி.800ஆம் ஆண்டில் தான் மேற்கத்திய திருஅவையின் புனிதர்கள் பட்டியலில் ஆண்ட வரின் வளர்ப்புத்தந்தை யோசேப் பின் பெயர் முதன்முதலாக இடம் பிடித்தது.
 

9 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் மிலான் நகருக்கு அருகில் கட்டப்பட்ட ‘சாந்தா மரியா’ ஆலயத்தில் வரையப் பட்ட சுவரோவியமே புனித
யோசேப்பின் முதல் ஓவியமாக கருதப்படுகிறது. உறங்கிக் கொண்டிருக்கும் யோசேப்புக்கு வானதூதர் செய்தி வழங்குவது போன்ற அந்தக் காட்சி வரையப் பட்ட பிறகே, மற்ற ஆலயங்களில் புனித யோசேப்பின் திருவுரு வங்கள் இடம்பெறத் தொடங் கின என்பது வரலாறு. புனித யோசேப்புக்கு மார்ச் 19ந்தேதி திருவிழா கொண்டாடும் வழக்கம் 10 ஆம் நூற்றாண்டில்தான் மேற்கத்தியத் திருஅவையில் உருவானது.
“புனித யோசேப்பே, உமது பாதுகாவல் மிகவும் மேலானது, வல்லமை மிக்கது” என்று தொடங்கும் பழமையான பரிந்துரை செபம் 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு துறவியால் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. “இயேசு, அன்னை மரியாவுக்கு உகந்த மகனாய் புனித யோவானை இருக்கச் செய்தது போன்றே, இயேசுவுக்கு ஏற்புடையத் தந்தையாய் புனித
யோசேப்பு இருக்குமாறு செய் தார்” என புனித பீட்டர் தமியான் (-1072) விளக்கம் அளிக்கிறார். 
“நமது மீட்பரின் தந்தை என்று கருதப்படும் தகுதிபெற்ற புனித யோசேப்பின் மகத் துவத்தை விவரிப்பது எப்படி? ஒரு நாட்டின் பஞ்சத்தை சமாளிக்கப் பழைய ஏற்பாட்டு யோசேப்பின் பொறுப்பில் கோதுமைக் களஞ்சியம் ஒப் படைக்கப்பட்டது. உலக மீட்புக்காக இறங்கி வந்த விண்ணக அப்பமாகிய இயேசு, புதிய ஏற்
பாட்டு யோசேப்பின் பாதுகாவ லில் இருந்தார்” என்று நமது புனிதரின் பெருமையை கிளேர்வாக்ஸ் புனித பெர்நார்து (-1153) எடுத்துரைக்கிறார்.
13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் இறையி யலாளரான புனித தாமஸ் அக்குயினாஸ் (1225-1274), “கன்னியின் வயிற்றில் கருவாகத் தோன்றிய இறைமகனுக்கு ஆன்
மிகத் தொட்டிலாக, யோசேப்பு- மரியா திருமணம் தேவைப் பட்டது. மரியாவுக்குத் தவறான விதத்தில் குழந்தை பிறந்தது என்ற பேச்சு எழாமல் இருக்க செய்யப்பட்ட தந்திரம் இது” என்று போதிக்கிறார். ஆண்டவர் முன்னிலையில் அன்னை மரியாவுக்கு அடுத்த இடத்தில் செல்வாக்கு பெற்ற புனிதராக யோசேப்பை நோக்கும் மனநிலை அக்கால கிறிஸ்தவர்களிடம் பரவத் தொடங்கியது.
14 ஆம் நூற்றாண்டில், புனித யோசேப்பு மீதான பக்தி மேற்கத்திய நாடுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்தது. 1414ல் கொன்ஸ்தான்ஸ் நகரில் கூடிய பொதுச்சங்கத்தில், இறையியலா ளரான ஜெர்சோன் (1363-1429) புனித யோசேப்பு குறித்தகருத்தியல்களை மரியன்னை யின் வாழ்வோடு ஒப்பிட்டு வழங்கினார். “யோசேப்பும் தாயின் வயிற்றில் இருந்தபோதே தொடக்கப் பாவத்தில் இருந்து புனிதமாக்கப் பெற்றார், கற்பில் சிறந்தவராக வாழ்ந்தார், இறப்புக்குப் பிறகு உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்பு அடைந்தார்” என்று அவர் எடுத்துரைத்தார்.


இத்தாலியின் சியன்னா புனித பெர்னார்தினோ (-1444),
“திருக்குடும்பம் முழுவதும் - இயேசு, மரியா, யோசேப்பு - மண்ணகத்தில் இணைந்து வாழ்ந்தது போன்றே, விண்ணகத்திலும் சேர்ந்து ஆட்சி செய்வார் கள்” என்று குறிப்பிடுகிறார். அக்காலத்தில் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் புனித யோசேப்பு மீதான பக்தி தழைத்து வளர்ந் தது. அதன் விளைவாக 1479 ஆம் ஆண்டு திருத்தந்தை 4ஆம் சிக்ஸ்துஸ் (-1484), புனித யோசேப்பு விழாவை மார்ச் 19 ஆம்தேதி கொண்டா டும் வகையில் ரோமின் திருவழி
பாட்டு நாள்காட்டியில் இணைத்தார்.


1540ஆம் ஆண்டு ரோம் நகரில் புனித யோசேப்புக்கு முதல் ஆலயம் கட்டும் வேலையை சில தச்சர்கள் இணைந்து தொடங் கினர். அக்காலத்தில் வாழ்ந்த மறைவல்லுநரான அவிலா புனித தெரசா (-1582), “நமக்கு அனைத்து தேவைகளிலும் கடவுளிடம் உதவி பெற்றுத்தரும் சுதந்திரத்தை புனித யோசேப்புபெற்றிருக்கிறார். அவரது பாது காவலை மன்றாடுகிறவர்கள் எவரும் அதை அடையாமல்இருந்ததில்லை” என்று உறுதி யுடன் கூறுகிறார்.


1546 ல் ‘புனித யோசேப்பு - கன்னி மரியா திருமண விழா’வை பிரான்சிஸ்கன் சபை யினர் கொண்டாட, திருத்தந்தை 3ம் பவுல் அனுமதி வழங்கினார். 1550ல் போருக்குச் சென்ற பேரரசர் சார்லசுக்கு, புனித யோசேப்பின் பழமையான பரிந் துரை செபத்தை திருத்தந்தை 3ஆம் ஜூலியஸ் (-1555) அனுப்பி வைத்தார். 1582ல் சீனாவில் நற்செய்தி அறிவிக்கச் சென்ற சேசு சபை குருவான மாத்யூஸ் ரிக்சியு, அந்நாட்டை புனித யோசேப்புக்கு அர்ப்பணித் தார். 1597ஆம் ஆண்டு புனித யோசேப்பின் முதல் மன்றாட்டு மாலை உரோமில் வெளியானது.


17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் (-1622), “ஆண்டவர் இயேசு மற்றும் அன்னை மரியாவிடம் நமக்காக பரிந்துபேசுப வராக புனித யோசேப்பு திகழ்கிறார்” என கூறுகிறார். 1621ல்திருத்தந்தை 15 ஆம் கிர கோரி, புனித யோசேப்பு விழாவை (மார்ச் 19) கடன் திருநாளாக அறிவித்தார். அதே ஆண்டிலேயே, கார்மேல் சபையினரின் பாதுகாவலராக புனித யோசேப்பு ஏற்கப்பட்டார். பிரான் சிஸ்கன் சபை துறவியான மரியா தெ அக்ரெதா (-1665), புனித யோசேப்பின் வாழ்வைக் காட்சியாகக் கண்டு தமது ‘கடவுளின் மறைவான நகர்’ நூலில் பதிவு செய்துள்ளார்.


1689ல் உயிர்ப்பு பெரு விழாவைத் தொடர்ந்து வரும் 3ஆம் ஞாயிறன்று, புனித யோசேப்பின் பாதுகாவல் விழா வைக் கொண்டாட கார்மேல் சபையினர் அனுமதி பெற்றனர். அக்காலத்திலேயே புனித யோசேப்பின் புதன்கிழமை பக்தி முயற்சி தோன்றி வளர்ந்தது. 1714ல் திருத்தந்தை 11ம் கிளமெந்த், மார்ச் 19ந்தேதி விழாவுக்கான சிறப்புத் திருப்பலி மற்றும் திருப்புகழ்மாலை செபத்தை ஏற்படுத்தினார். 1726 ல் திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட், ‘புனித யோசேப்பு - கன்னி மரியா திருமண விழா’ வை திருஅவை முழுவதும் ஜனவரி 23ந்தேதி சிறப்பிக்க அனுமதி வழங்கினார்.


18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த வீரமா முனிவர் (-1747), புனித யோசேப்பைத் தலைவராகக் கொண்டு ‘தேம்பாவணி’ காப்பியத்தைப் படைத்ததோடு, அவருக்கு ‘வளனார்’ என்ற அற்புதமான தமிழ் பெயரையும் சூட்டி மகிழ்ந்தார். “மண்ணகத்தில் முப்பது ஆண்டளவாக தமது பெற்றோருக்கு பணிந்து நடந்த ஆண்டவர் இயேசு, தற்போது விண்ணகத்தில் தம்மிடம் யோசேப்பு கேட்கும் அனைத்து வரங்களையும் பொழிந்து வருகிறார்” என நமது புனிதரின் வல்லமையான பரிந்துரை குறித்து புனித அல்போன்சுஸ் லிகோரி (-1787) எடுத்துரைக்கிறார்.


19ஆம் நூற்றாண்டு, புனித யோசேப்பு பக்தியின் பொற்காலமாக அறியப்படுகிறது. அவரை ‘புனித ஜோசேப்பர்’ என மரியாதையாக அழைக்கும் வழக்கத்தில் இருந்து, ‘சூசையப்பர்’ என்ற மருவல் பெயர் அக்காலத்திலேயே தமிழில் தோன்றியது. 1847ல் திருத்தந்தை அருளாளர் 9 ஆம் பயஸ், ‘புனித யோசேப்பின் பாதுகாவல்’ விழாவைத் திருஅவை முழுவதற்கும் விரிவுபடுத்தினார். 1850ல், ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் மத்தியில் புனித யோசேப்பின் செபமாலை பக்தி அறிமுகமானது. திருஅவை ஆயர்களின் கோரிக்கையை ஏற்று ‘புனித யோசேப்பு உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலர்’ என 1870ல் அறிவித்த 9ஆம் பயஸ், அதற்கான விழாவையும் ஏற்படுத்தினார்.


1880ல் புனித யோசேப்பு உத்தரியத்தை பயன்படுத்த இத்தாலியின் வெரோனா மறைமாவட்டம் திருவழிபாட்டு பேராயத்திடம் அனுமதி பெற்றது. 1889 ஆம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ, ஒரு சுற்றுமடல் வழியாக மார்ச் மாதத்தில் புனித யோசேப்புக்கு சிறப்பு வணக்கம் செலுத்தும் வழக்கத்திற்கு அங்கீகாரம் அளித்தார். புனித யோசேப்பு பக்தியோடு இணைந்த பல்வேறு விருப்ப விழாக்களுக்கும் 13ஆம் லியோ அனுமதி வழங்கினார். புனித யோசேப்பு உத்தரியத்தை அனைத்துக் கிறிஸ்தவர்களும் அணிய 1893ல் திருவழிபாட்டு பேராயம் அனுமதி வழங்கியது.


20ஆம் நூற்றாண்டில் சோசலிச, கம்யூனிசக் கொள்கைகளுக்கு எதிரான பாதுகாவலராக புனித யோசேப்பு முன்னிறுத்தப் பெற்றார். திருத்தந்தையரான 15ஆ ம் பெனடிக்ட், 11 ஆம் பயஸ், 12 ஆம் பயஸ் ஆகியோர் கம்யூனிசத்தின் பிடியில் சிக்காமல் தப்பிக்க புனித யோசேப்பின் பாதுகாவலை வேண்டுமாறு கிறிஸ்தவர்களை அறிவுறுத்தினர். கம்யூனிசத் தொழிலாளர் நாளான மே 1ந்தேதியை, திருத்தந்தை 12ம் பயஸ் ‘தொழிலாளரான புனித யோசேப்பு’ விழாவாக 1955ஆம் ஆண்டு அறிவித்தார். 1950களில் ஸ்பெயின், கனடா, இத்தாலி ஆகிய நாடுகளில் ‘யோசேப்பியல்’ என்ற புதிய இறையியல் துறை தோன்றியது.


1958 மார்ச் மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மேரி எப்ரேம் (1933-79) என்ற அருட்சகோதரிக்குக் காட்சியளித்த புனித யோசேப்பு, “இயேசுவோடும் மரியாவோடும் எனது வாழ்வை நினைவுகூரும் வகையில், முதல் புதன்கிழமைகளில் மகிழ்ச்சிநிறை மறையுண்மைகளை தியானித்துச் செபமாலை செபியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். அந்தக் காட்சிக்கு பிறகு, புனித யோசேப்புக்கான முதல் புதன்கிழமை பக்திமுயற்சி திருஅவை முழுவதும் முக்கியத்துவம் பெற்றது.


1962ல் திருத்தந்தை புனித 23 ஆம் யோவான், புனித யோசேப்பின் பெயரை திருப்பலியின் முதல் நற்கருணை மன்றாட்டில் இணைத்தார். 1989ஆம் ஆண்டு ‘மீட்பரின் காப்பாளர்’ என்ற திருத்தூது அறிவுரையை வெளியிட்ட திருத்தந்தை 2 ஆம் யோவான் பவுல், “திருஅவையை ஆபத்துகளில் இருந்து காப்பதற்கு மட்டுமின்றி, நற்செய்தி அறிவிப்புக்கு மேற்கொள்ளப்படும் அச்சம் நிறைந்த முயற்சிகளிலும் புனித யோசேப்பின் பாதுகாவலை மன்றாட வேண்டும்” என்று கூறுகிறார்.


2013 மார்ச் 19 ஆம் தேதி திருஅவையின் தலைவராகப் பொறுப் பேற்ற தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ், தமது ஆட்சி முத்திரையில் புனித யோசேப்பைக் குறிக்கும் லில்லி மலரை இடம்பெறச் செய்தார். அதே ஆண்டிலேயே, அனைத்து நற்கருணை மன்றாட்டுகளிலும் புனித யோசேப்பின் பெயரை அவர் இணைத்தார். உறங்கும் புனித யோசேப்பு பக்தி உலகின் பல இடங்களுக்கும் பரவுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸின் அனுபவமே காரணம் என்பது உண்மை.

. நமது வாழ்வும் கடவுளுக்கு உகந்ததாக அமைய புனித யோசேப்பு உதவி செய்வாராக! 

Comment