No icon

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை :

உண்மையான விடுதலை கிறிஸ்துவின் சிலுவையிலிருந்து

அக்டோபர் 06 புதன், கர்த்தூசியன் துறவு சபையை ஆரம்பித்த புனித புரூனோ திருநாள். இப்புதன் காலையில், உரோம் நகரில் மழை தூரிக்கொண்டிருந்தாலும், இந்நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறைக்கல்வியுரையைக் கேட்டு, அவரது ஆசீரைப் பெறுவதற்காக வந்திருந்த திருப்பயணிகள், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தை நிறைத்திருந்தனர். இப்புதன் உள்ளூர் நேரம் காலை 9.15 மணியளவில் அந்த அரங்கத்திற்குச் சென்று, அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லி, திருத்தந்தை தன் மறைக்கல்வியுரையைத் தொடங்கினார். கிறிஸ்து நமக்கு விடுதலையளித்துள்ளார் என்று, புனித பவுல் கலாத்தியருக்கு எழுதியுள்ள திருமடல், 4ம் பிரிவிலிருந்து  ஒரு பகுதி, பல்வேறு மொழிகளில் முதலில் வாசிக்கப்பட்டது. ஆனால், காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள் (கலா.4:4-5; 5:1).

அதற்குப்பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்தவ விடுதலைபற்றிய அழியாத வார்த்தைகளை புனித பவுல் கலாத்தியருக்கு எழுதியுள்ளார், அந்த தலைப்புகுறித்து இன்று சிந்திப்போம் என்று, இத்தாலிய மொழியில் முதலில் தன் மறைக்கல்வியைத் துவக்கினார். ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட இந்த மறைக்கல்வியின் சுருக்கம் இதோ...

புதன் மறைக்கல்வியுரை

திருத்தூதர் புனித பவுலுக்கு, விடுதலை என்பது, ஒரு கொடையாகும். அது, கிறிஸ்துவில் நாம் அடையும் புதிய வாழ்வின் கனியாகும். திருமுழுக்கு வழியாக, பாவத்திற்கு கட்டுண்டு இருந்த நிலையிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம். மேலும்,  நற்செய்திக்கு கீழ்ப்படிந்து நடப்பதில், மனத்தாராளமாக வழங்கும் ஒரு வாழ்வையும் பெற்றுள்ளோம். “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால்... உண்மையை அறிந்தவர்களாய் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” (யோவா.8:31-32) என்று இயேசு நம்மிடம் கூறுகிறார். எனவே, கிறிஸ்தவ விடுதலை வாழ்வு, கடவுள் அருளின் விலைமதிக்கப்படமுடியாத கொடையிலும், கிறிஸ்துவின் உண்மையிலும் வேரூன்றப்பட்டுள்ளது. கிறிஸ்து, தன் பாடுகள் மரணம் மற்றும், உயிர்ப்பின் வழியாக, கடவுளன்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறார். மேலும், மற்றவருக்குத் தொண்டுபுரிவதில், மரணத்தை ஏற்கும் அளவிற்கும்கூட, நம்மையே முழுமையாகக் கையளிப்பதற்கும், அவர் கற்றுத்தருகிறார். இதுவே, கிறிஸ்தவ விடுதலை வாழ்வின் உச்சநிலையாகும். கிறிஸ்து கொணரும் உண்மை என்னவென்றால், நம்மைப் பற்றிய உண்மையாகும். கிறிஸ்தவ விடுதலையை நோக்கிய நம் பயணம், எளிதானதல்ல, ஆயினும், அப்பயணம், சிலுவையில் அறையுண்ட ஆண்டவரது அன்பால் வழிநடத்தப்படுகின்றது, மற்றும், பேணிப்பாதுகாக்கப்படுகின்றது. அவரது விடுதலையளிக்கும் உண்மையால், கடவுளின் மீட்பளிக்கும் திட்டத்தோடு ஒத்திணங்கிச் செல்வதில் அறுதியான நிறைவையும் நாம் காண்போம்.

இவ்வாறு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திலிருந்து கிடைக்கும் உண்மையான கிறிஸ்தவ விடுதலை பற்றி, இப்புதன் மறைகல்வியுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ப்ரெஞ்ச் மொழியில் திருப்பயணிகளை வாழ்த்தியபின், அந்நாட்டில் திருஅவையின் அருள்பணியாளர்கள், மற்றும், துறவிகள் சிலரால், பாலியல் ரீதியாக துன்பங்களை அனுபவித்த அனைவருக்காகவும் செபித்தார். அவர்களோடு தன் ஒருமைப்பாட்டுணர்வையும் திருத்தந்தை வெளிப்படுத்தினார். பின்னர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த திருப்பயணிகள் எல்லாரையும் வாழ்த்தி தன் அப்போஸ்தலிக்க திருத்தந்தை பிரான்சிஸ் ஆசீரையும் அளித்தார்.

Comment