No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை நிறுவிய கத்தோலிக்க நலவாழ்வு அறக்கட்டளை

'நோயுற்றோரின் துன்பங்களைத் துடைக்கவும், அவர்களுக்கு நலம் வழங்கவும், கத்தோலிக்க திருஅவையில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு அமைப்புக்களுக்கு, உதவிகள் செய்யும்வண்ணம், கத்தோலிக்க நலவாழ்வு அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பை நான் உருவாக்குகிறேன்' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கைப்பட எழுதியுள்ள ஓர் ஆணையறிக்கை, அக்டோபர் 6 புதனன்று வெளியிடப்பட்டது.

உடலளவில் மிகவும் நலிவுற்றோரை கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் தன் இதயத்தில் தாங்கிவந்துள்ளது என்பதன் அடையாளமாக, இந்த அறக்கட்டளையை தான் நிறுவியுள்ளதாக, திருத்தந்தை, இந்த ஆணையறிக்கையில் எழுதியுள்ளார்.

இவ்வாண்டு செப்டம்பர் 29ம் தேதி, தலைமை வானதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளன்று, திருத்தந்தை கையொப்பமிட்டுள்ள இந்த ஆணையறிக்கையில், உலகெங்கிலுமிருந்து தனக்கு வந்துசேர்ந்த பல்வேறு விண்ணப்பங்களின் விளைவாக, கத்தோலிக்க நலவாழ்வு அறக்கட்டளையை தான் நிறுவியுள்ளதாக திருத்தந்தை கூறியுள்ளார்.

கத்தோலிக்க நலவாழ்வு அறக்கட்டளை, சட்டரீதியான அனைத்து அதிகாரங்களையும் தனிப்பட்ட முறையில் கொண்டுள்ள ஓர் அமைப்பாக, திருப்பீடத்தின் ஏனைய துறைகளைப்போல் ஒரு துறையாக செயல்படும் என்று, திருத்தந்தை அறிவித்துள்ளார். திருஅவையின் சட்டங்களுக்கும், அரசின் சட்டங்களுக்கும் உட்பட்டு, இந்த அறக்கட்டளை செயலாற்றும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஆணையறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

திருப்பீடத்தின் பாரம்பரிய சொத்துக்களை கண்காணிக்கும் APSA என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றும் ஆயர் Nunzio Galantino அவர்களை, கத்தோலிக்க நலவாழ்வு அறக்கட்டளையின் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

இவ்வாண்டு கோடை விடுமுறையின்போது, உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை ஒன்றை பெற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மருத்துவ மனையிலிருந்து ஜூலை 11ம் தேதி வழங்கிய ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில், மக்களின் நலவாழ்வுக்கென கத்தோலிக்கத் திருஅவை ஆற்றும் பணிகளை உயர்வாகப் பேசிய வேளையில், அப்பணியில் ஈடுபட்டுள்ளோர் சந்திக்கும் நிதிப்பிரச்சனைகள் குறித்தும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment