No icon

இந்திய மறைமாவட்டக் குருக்கள் பேரவையின் 2024-ஆம் ஆண்டிற்கான அருள்பணித் திட்ட அறிக்கை

இந்திய மறைமாவட்டக் குருக்கள் பேரவை, 20-வது தேசிய ஆலோசனைக் குழு கூட்டம் சனவரி 23-25 ஆகிய நாள்களில் ஜெய்ப்பூர் மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலையத்தில் நடைபெற்றது. ‘அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துதல்: இந்தியாவில் மறைமாவட்டக் குருக்களின் பணிப்பொறுப்பு’ என்ற தலைப்பில் அமர்வுகள் நடைபெற்றன. இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) 13 மண்டலங்களின், 51 மறைமாவட்டங்களில் இருந்து 104 குருக்கள் இந்த அமர்வில் கலந்துகொண்டு, ஆழ்ந்து சிந்தித்து, கலந்தாலோசித்து, பகுத்தாய்ந்து, செபித்து மேய்ப்புப் பணிகளுக்கான ஓர் அருள்பணித் திட்டத்தைத் தீட்டினர். அவை பின்வருமாறு:

● நமது கிறிஸ்தவ மனசாட்சிக்கு எதிராக இல்லாத, சட்டத்தால் ஆணையிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளுக்கும் உடன்படுதல். மேலும், நமது பண பரிவர்த்தனைகள் மற்றும் அது சம்பந்தமான செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வையும், நீதியையும் உறுதி செய்வது.

● எதேச்சதிகாரம், மதவெறி மற்றும் அடிப்படை வாதம் இவற்றால் எழும் ஆபத்துகளைப் பற்றி விழிப்பாக இருந்து அவற்றை எதிர்கொள்வது.

● விளிம்பு நிலையில் உள்ள, தொலைந்துபோன, கண்டுகொள்ளப்படாதவர்களைத் தேடிச் செல்வது.

● குற்றமயமாகும் அரசியலையும், பூர்வீகக் குடிமக்களுக்கே உரிமையான இயற்கை வளங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாற்றுவதையும் எதிர்த்து நிற்கும் நிலைப்பாட்டை எடுப்பது.

● சமூகத்தில் சுரண்டப்பட்ட மற்றும் பின்தங்கியவர்களுக்கான பணியில் இறைவாக்குரைக்கும் குருத்துவத்தின் மூலம், பணியாளர்-தலைமைத்துவத்தை (servant leadership) உள்வாங்குவது மற்றும் நடைமுறைப்படுத்துவது.

● நீதி, சமத்துவம், கண்ணியம், சகோதரத்துவம் மற்றும் மனிதாபிமான சமுதாயத்தை மேம்படுத்துவதற்காக நல்லெண்ணம் கொண்ட அனைத்து ஆண்கள், பெண்கள், மக்கள் இயக்கங்களுடன் ஒத்துழைப்பது.

● அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட் டுள்ள மக்களுக்கான உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவர்களை ஆயத்தப்படுத்தத் தீவிரமாக உழைப்பது.

● தகுதியுடைய வாக்காளர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவும் மற்றும் அவர்களின் வாக்குரிமையை மனச்சாட்சியுடன் பயன்படுத்தவும் ஊக்குவிப்பது....

ஞானத்தையும், வல்லமையையும் அளிக்கும் எல்லாம் வல்ல கடவுளின் மீது நம்பிக்கையும், நம் சார்பாக நமக்காகப் பரிந்து பேசும் அன்னை மரியா மீது பற்றுறுதியும் வைத்து இந்தத் தீர்மானங்களைச் செயல்படுத்த மனப்பூர்வமாக உறுதி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வை இந்திய மறைமாவட்டக் குருக்கள் பேரவைக்கான வழிகாட்டிகள் பேரருள் பணி. ஆயர் வர்கீஸ் சக்களக்கல் (புரவலர்), அருள் திரு. முனைவர் ராய் லாசர் (தலைவர்), அருள்திரு. முனைவர் சார்லஸ் லியோன் (செயலர்) ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

Comment