No icon

மரியா

சீர்திருத்தவாதிகளும் மரியாவும்

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மரியா பற்றிய

புதிய பார்வை

4. புனித கன்னி மரியா பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கப் படிப்பினைகள்

திருஅவை பற்றிய கோட்பாட்டு விளக்கம் எனும் ஏட்டின் எட்டாம் பிரிவாக, மரியா பற்றிய பகுதி இடம்பெற்றுள்ளது. இதற்கு, கிறிஸ்துவினுடையவும், திருஅவையினுடையவும் மறைபொருளில் இறை அன்னை தூய கன்னி மரியா (பத்தி 52-69) என்று, தலைப்பிடப்பட்டுள்ளது. முன்னுரை (பத்தி 52-53) நீங்கலாக, நான்கு பிரிவுகள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன.

முன்னுரை (பத்தி 52-54)

மரியா, தூய ஆவியின் துணையால் இறைமகனைப் பெற்றெடுத்தார் என்ற வெளிப்படுத்தப்பட்ட உண்மை, திருஅவையில் தொடர்ந்து நீடித்து வருகின்றது. எனவே, மரியா, இயேசுவைப் பெற்றெடுத்த காரணத்தால், நம்பிக்கையாளர்கள் அனைவரும் அவருக்கு முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும் என்கிறது இவ்வேடு. மேலும், மரியா தம் மகனுடைய பேறுபலன்களை முன்னிட்டுச் சிறப்பான வகையில் மீட்கப்பெற்று, நெருங்கிய, பிரிக்க முடியாத முறையில் அவரோடு இணைக்கப்பெற்றிருக்கின்றார். இருப்பினும், மீட்கப் பெறவேண்டிய மக்கள் அனைவருடனும், அவரும் ஒருவராய் உள்ளதால், கிறிஸ்துவின் பிள்ளைகள் அனைவருக்கும் அவர் தாயாக உள்ளார்.

i) நிறைவாழ்வுத் திட்டத்தில் புனித கன்னியின் பங்கு (பத்தி 55-59):கருவான முதல் நொடியிலிருந்தே தனிச் சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்த நாசரேத்துக் கன்னியைக் கிறிஸ்து மனிதர் ஆவதற்குக் கடவுள் முன்குறித்து வைத்தார் (எண் 56). மரியாவும், அதற்கு இசைவு கொடுத்தார். இவ்வாறு, நம்பிக்கையாலும், கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ்வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தார் மரியா (எண் 56). மீட்பு அலுவலில் மகனோடு தாய் கொண்டிருந்த இந்த ஒன்றிப்பு, மரியாவிடம் இயேசுகிறிஸ்து கருவாக உருவானதிலிருந்து, அவரது சாவு வரை, அதாவது, அவருடைய குழந்தைப் பருவத்திலும், பணி வாழ்விலும் மரியா எவ்வாறு அவருடன் முழுமையாக ஒத்துழைத்தார் என்பது புலப்படுகின்றது. இயேசுவின் இறப்பிற்குப் பிறகு, பெந்தகோஸ்து பெருநாள்வரை மரியா சீடர்களுடன் இருந்தார் என்பது, மரியா எவ்வாறு இயேசுவின் மீட்புத் திட்டத்தில், இயேசுவின் இறப்பிற்குப் பிறகும் உழைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. இவ்வாறு, கடவுளின் மீட்புத் திட்டத்திற்குத் தம்மையே முழுமையாக வழங்கி, திருஅவையின் முதன்மைச் சீடராகத் திகழ்ந்த மரியாவுக்கு, விண்ணக மாட்சியை அவரின் மண்ணுலக வாழ்வு நிறைவுற்றதும் கடவுள் வழங்கினார்.

ii) புனித கன்னியும், திருஅவையும் (பத்தி 60-65): இயேசு கிறிஸ்து மட்டுமே கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே உள்ள ஒரே இணைப்பாளர். இருப்பினும், மக்கள்பால் மரியா கொண்டுள்ள தாய்க்குரிய பணியால், அவர் ஆற்றுகின்ற இணைப்பாளர் எனும் பணி, கிறிஸ்துவின் இணையற்ற இணைப்பாளர் எனும் பணியைச் சற்றும் குறைவுபடுத்துவதில்லை. காரணம், மரியாவின் இப்பணி, கடவுளின் விருப்பத்திலிருந்தே உருவாகிறது. அது கிறிஸ்துவின் பணியை முற்றிலும் சார்ந்ததாகவே உள்ளது (எண் 60). எனவேதான், “கன்னி மரியா திருஅவையிலே பரிந்துரைப்பவர், துணையாக நிற்பவர், உதவி அளிப்பவர் எனப் பல சிறப்புப் பெயர்களால் போற்றப் பெறுகிறார்” (எண் 62). மீட்பர் கிறிஸ்துவின் ஒரே இணைப்பாளர் பணியில், மரியாவைப் போன்றே அருள்பணியாளர்களும், நம்பிக்கை கொண்ட மக்களும் ஒத்துழைக்க வேண்டும் எனச் சங்கம் கூறுகின்றது. மேலும், கன்னி மரியா கன்னிமைக்கும், தாய்மைக்கும் சிறந்த மாதிரியாகத் திருஅவைக்கு விளங்குகின்றார். தூய்மைமிகு கன்னி மரியாவில் திருஅவை ஏற்கனவே தூய்மையின் நிறைவை அடைந்து விட்டது. இருப்பினும், கிறிஸ்தவர்கள் மரியாவின் நற்பண்புகளைப் பின்பற்றி, பாவத்தை வென்று, தூய்மை நிலையில் முன்னேற முயல வேண்டும்.

iii) திரு அவையில்   புனித  கன்னிக்கு  வணக்கம் (பத்தி 66-67): எல்லா வானதூதர்களுக்கும், மனிதர்களுக்கும் மேலாகக் கடவுளின் அருளால் உயர்த்தப்பட்ட தூய கன்னி மரியாவைத் தொடக்கம் முதலே நம்பிக்கை கொண்டோர்கடவுளின் தாய்என அழைத்து, வணங்கி வருகின்றனர், பெருமைப்படுத்துகின்றனர். ஆனால், இவ்வணக்கம், “மனிதரானவர்க்கும், தந்தைக்கும், தூய ஆவியார்க்கும் நாம் அளிக்கும் ஆராதனையிலிருந்து உள்ளியல்பிலேயேவேறுபட்டது (எண் 66). மேலும், மரியன்னைக்கு நாம் எடுக்கும் பக்தி முயற்சிகள் யாவும், கிறிஸ்துவையே மாட்சிப்படுத்துவனவாய் உள்ளன. ஆகவே, “தவறான மிகைக் கூற்றுகளை ஒரு புறமும், மிகக் குறுகிய பார்வையை மறுபுறமும் கவனத்துடன்தவிர்த்து, திருஅவை ஆசிரியம் போற்றிவரும் மரியன்னைப் பக்தி முயற்சிகளையும், பழக்க வழக்கங்களையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் எனச் சங்கம் கூறுகின்றது (எண் 67). கீழைத் திருஅவையில் காணப்படும் மரியா வணக்கத்தைப் பாராட்டுகின்ற சங்கம், அதே வேளையில், கத்தோலிக்கரல்லாத பிற கிறிஸ்தவர்கள், திருஅவையின் உண்மைக் கோட்பாட்டைப் பற்றித் தவறாக எண்ண இடந்தரக்கூடிய எச்சொல்லையும், செயலையும் கவனத்துடன் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றது.

iv) பயணம் செய்யும் இறைமக்களுக்கு மரியா திடமான நம்பிக்கையும், ஆறுதலும் (பத்தி 68-69): மரியா உடலோடும், ஆன்மாவோடும் விண்ணக மாட்சிக்கு எடுக்கப்பட்டது. பயணம் செய்யும் திருஅவைக்கு உறுதியான எதிர்நோக்காக அமைந்துள்ளது.

கத்தோலிக்கரல்லா ஏனைய கிறித்தவர்களும், குறிப்பாகக் கீழைத்திருஅவையைச் சார்ந்தவர்களும், மரியாவுக்கு வணக்கம் செலுத்துகின்றார்கள். இது கத்தோலிக்கத் திருஅவைக்கு மகிழ்வைத் தருகின்றது. இறுதியாக, மரியா, எவ்வாறு தொடக்கத் திருஅவையில் தம் இறைவேண்டலால் உதவினாரோ, அவ்வாறே, கிறித்தவர்களுக்காக மட்டுமன்றி, கிறிஸ்துவை அறியாதவர்களுக்காகவும் தொடர்ந்து பரிந்து பேசுவார் என ஏடு நிறைபெறுகின்றது.

5. மரியா பற்றிய இரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனையில் காணப்படும் அழுத்தங்கள்

மரியா பற்றிய இரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனைகளை அலசி ஆராயும்போது, அவற்றில் ஐந்து முக்கிய அழுத்தங்கள் காணப்படுகின்றன.

i) விவிலிய மையம்: மரியா பற்றிய இரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனையில், விவிலியம் அழுத்தம் பெறுகின்றது. சங்கத்திற்கு முந்தைய காலத்து மரியா பற்றிய போதனையில், மரபில் உருவான மரியா பற்றிய படிப்பினைகள்தான் அதிகம் அழுத்தம் பெற்றன. ஆனால், சங்கத்தின் போதனையில் பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று முறையும், புதிய ஏற்பாட்டிலிருந்து பதினான்கு முறையும், மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன. இது, மரியாவின் போதனையில் விவிலியம் எவ்வாறு மைய இடத்தைப் பெற்றது என்பதை விளக்குகின்றது.

ii) கிறிஸ்து மையம்: இரண்டாம் வத்திக்கான் சங்கம், மரியியலைக் கிறிஸ்தியலின் ஒரு பகுதியாகவே விளக்கியது. அது மரியா பற்றிய படிப்பினைகள் அனைத்தையும் மீட்பின் வரலாற்றுடன் இணைத்தே பார்த்தது. அதாவது, கடவுளின் மீட்புத்திட்டத்தில் மரியாவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு - குறிப்பாக, மீட்புத்திட்டத்திற்கு மரியாவைக் கடவுள் முன்குறித்துத் தெரிவுசெய்தல் - அழுத்தம் கொடுத்தது. இவ்வாறாக, மரியாவிற்குத் தன்னிலையிலேயே எவ்விதச் சிறப்பும் இல்லை. மாறாக, கிறிஸ்து வழியாகவே அவருக்கு எல்லாச் சிறப்புகளும், பெருமையும், திருஅவையில் வழங்கப்பட்டன என்றது சங்கம்.

iii) திருஅவை மையம்: மரியாவை மறைபொருளாம் திருஅவையின் உறுப்பினராகச் சங்கம் எடுத்தியம்பியது. இதன்மூலம் மரியாவும், திருஅவையுடன் இணைந்து, அவர் தமது மீட்பை இயேசுவிடமிருந்து பெறுவதாகக் காணவேண்டும். மரியாவைத் திருஅவையிலிருந்து நாம் தனித்துப் பார்க்க முடியாது. இவ்வாறாக, மரியா, தன்னிலையிலேயே சிறப்பு மிக்கவர் (privilege - centred) என்ற பார்வையை சங்கம் நீக்கி, அவர் திருஅவையின் உறுப்பினர்களில் ஒருவர் (sharing - oriented) என்ற பார்வையை வழங்கியது. அதாவது, மரியாவை இயேசுவுக்கும், மானிடருக்கும் இடைப்பட்ட ஒருவராகக் காணக் கூடாது. மாறாக, அவரைத் திருஅவையின் உறுப்பினர்களில் முதன்மையானவராகக் (Pre-eminent) காண வேண்டும் என்றது. காரணம், அவர் சீடத்துவ வாழ்வுக்கும், கடவுளின் வார்த்தையை நம்பிக்கையுடன் ஏற்று வாழ்வதற்கு மாதிரியாய் உள்ளார் என்றது சங்கம்.

iv) கிறித்தவ ஒன்றிப்பு அழுத்தம்: கிறித்தவ ஒன்றிப்புக்கு அழுத்தம் தரும் வகையில், கீழைத்திருஅவையினர் மரியாவுக்கு வழங்கும் வணக்கத்தைச் சங்கம் பெருமகிழ்வுடன் பாராட்டியது தவிர, திருஅவையின் நீண்டகால மரபில் மரியாவுக்கு வழங்கப்பட்ட பட்டங்களாகியஇணை மீட்பர், ‘அருளை வழங்குபவர் போன்ற பட்டங்களைச் சங்கம் தவிர்த்தது. பரிந்து பேசுபவர் (Advocate), உதவியாளர் (Helper), கொடையாளர் (Benefactress), இடைநிலையாளர் (Mediator) ஆகிய நான்கு பட்டங்களை மட்டுமே சங்கம் மரியாவுக்கு வழங்கியது. இருப்பினும், மரியாவின் இப்பணிகள் ஒரே இடைநிலையாளராம் இயேசுவின் செயலைக் குறைத்து மதிப்பிடுவன எனக் காணக் கூடாது என்றது சங்கம். இவ்வாறு, சங்கம் கிறித்தவ ஒன்றிப்புக்கு அழுத்தம் கொடுத்தாலும், திருஅவை எனும் ஏட்டைத் திருத்தந்தை 6 ஆம் பால் அவர்கள் திருஅவைக்கு வழங்கியபோது, சங்கம் வரையறை செய்யாத பட்டமாகிய மரியா, திருஅவையின் தாய் என்று கூறியதை, கிறித்தவ ஒன்றிப்புக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் வரவேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

v) மேய்ப்புப்பணியில் மரியா வணக்கம்: கடவுளின் தாயாகிய மரியாவுக்கு வழங்கப்பட்ட பலவகையான வணக்கம் / பக்தி முயற்சிகளைச் சங்கம் ஏற்றுக்கொண்டது. இவை அனைத்தும் பல்வேறு சூழல்களில், பல்வேறு காலக்கட்டங்களில் இறைநம்பிக்கையாளர்களின் நம்பிக்கையிலிருந்து ஊற்றெடுத்தவை என்றது சங்கம். இருப்பினும், மரியாவின் திருவுருவங்களைப் பயன்படுத்துவதில் இறைநம்பிக்கையாளர்கள் மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றது.

மும்பை மறைமாவட்டத்தின் முன்னாள் துணை ஆயர் ஆக்னலோ கிராசியஸ் என்பவர், பின்வரும் உவமை மூலம் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மரியா பற்றிய பார்வையை விளக்குகின்றார்: “ஒரு பழமையான திருத்தலத்தில் மக்களால் விரும்பி, வணங்கப்படும் மரியாவின் திருவுருவம் இருந்தது. திருத்தலத்திற்கு வந்த நம்பிக்கையாளர்கள், விலையுயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு, மரியாவின் திருவுருவத்தை அலங்காரம் செய்தார்கள். ஒரு கட்டத்தில் மரியாவின் திருவுருவமே தெரியாத அளவில் ஆபரணங்கள் அதை மூடிவிட்டன. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின்பு, அந்தத் திருத்தலத்திற்குப் பொறுப்பானவர், மரியாவின் திருவுருவத்தை மூடியிருந்த அனைத்து ஆபரணங்களையும் எடுத்து, அவற்றை ஏழைகளுக்குக் கொடுத்தார். மரியாவின் திருவுருவத்தை மீண்டும் அதன் தொடக்க நிலைக்குக் கொணர்ந்தார்.” ஏறத்தாழ சங்கம் செய்த செயலும் அதுதான். அதாவது, மரியாவை மீண்டும் அவரின் தொடக்கநிலைக்குக் கொணரும் முயற்சியே இது. அதாவது, கிறிஸ்துவினுடையவும், திருஅவையினுடையவும் மறைபொருளில் மரியா ஆற்றிய பங்கை மையப்படுத்தி, விளக்குவதே மரியா பற்றிய சரியான போதனையாக இருக்க முடியும் எனச் சங்கம் கூறியது. இவ்வாறு, மரியா பற்றிய போதனையில் சங்கம் ஒரு புதிய பாதையில் பயணித்தது எனலாம்.

6. மரியா பற்றிய போதனையில் சங்கத்தின் குறைபாடுகள்

மரியா பற்றிய போதனையில், சங்கம் புதிய பாதையில் பயணிக்க அடித்தளம் இடப்பட்டாலும், இறையியலாளர்கள் அதில் காணப்படும் சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுகின்றனர்:

(1) நவீன உலகில் இன்றைய பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிற்கு மரியா பற்றிய இப்பகுதியில்  எந்தக் கவனமும் கொடுக்கப்படவில்லை. இது வெறுமனே மரியா பற்றிய ஓர் இறையியல் தொகுப்பாக மட்டுமே அமைந்துள்ளது.

(2) திருஅவைத் தந்தையர்கள் கூறிய மரியா-ஏவாள் ஒப்பீடு, பெண்களை ஏவாளின் சாயலாக, பாவத்தின் அடையாளமாக நீண்டகாலம் சுட்டிக்காட்டியது. அதே மரியா-ஏவாள் ஒப்பீடு சங்கப்போதனையிலும் இடம் பெற்றுள்ளது.

(3) மரியா வணக்கம் பற்றி எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று, சுட்டிக்காட்டிய சங்கம், மரியா வணக்கம் எத்திசையில் பயணிக்க வேண்டும் என நேர்மறையான வழிகாட்டுதல் எதையும் கூறவில்லை.

(4) சங்கத்திற்கு முந்தைய படிப்பினைகளுடன் ஒப்பிடும்போது, சங்கத்தின் படிப்பினைகளில் விவிலிய மேற்கோள்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன என்பது தெரிகிறது. இருப்பினும், விவிலியம் சுட்டிக்காட்டும்வரலாற்றுமரியாவை வெளிக்கொணரச் சங்கம் தவறிவிட்டது. மாறாக, மரியா பற்றிய மரபுப் படிப்பினைகளை விளக்கவே விவிலிய மேற்கோள்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

(5) திருஅவைத் தந்தையர்களின் படிப்பினைகளில் மரியா - திருஅவை ஒப்பீடு காணப்படுகின்றது. சங்கம் மரியாவை, திருஅவையின் முதன்மை உறுப்பினர் என்று கூறினாலும், அதைப் பற்றி இன்னும் விரிவாக விவாதிக்கத் தவறிவிட்டது.

இவ்வாறாக, சங்கம் மரியா பற்றிய படிப்பினைகளில் ஒரு புதிய பாதைக்கு அடித்தளம் இட்டாலும், அது பயணிக்க வேண்டிய பாதையை இன்னும் ஆழமாகவும், விரிவாகவும் விளக்கத் தவறிவிட்டது என்பதுதான் உண்மை. எனவேதான், சங்கம் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவுற்ற இவ்வேளையிலும்கூட, சங்கத்தின் மரியா பற்றிய போதனைகள் திருஅவையில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது நோக்கத்தக்கது.

(தொடரும்)

Comment