
இறைவேண்டலின் பரிமாணங்கள் - 7
தனி இறை வேண்டல்!
செபமே நம் அருள் வாழ்வின் முதல் அடையாளம். ஒருவர் கிறிஸ்தவர் என்பதை எப்படிக் கண்டுகொள்ளலாம்? அவரது பெயரைக் கொண்டா? அவரது கழுத்தில் தொங்கும் சிலுவையைக் கொண்டா?
ஒருவர் நாள்தோறும் செபிக்கிறார் என்பதே, அவர் கிறிஸ்தவர் என்பதற்கான அடையாளம். திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் நாள்தோறும் செபிக்க வேண்டும். விவரம் தெரிந்த குழந்தைகள் முதல், சாவின் வாயிலில் நிற்கும் முதியவர் வரை அனைவரும் அன்றாடம் செபிக்க வேண்டும். செபிக்கத் தெரியாதவர், செபிக்க விரும்பாதவர் என்ற இரு வகையினரும் கிறிஸ்தவர் என்று அழைக்கப்படத் தகுதியற்றவர்.
இந்த அன்றாட இறைவேண்டலில் தனி செபம், குழும செபம், திரு அவையின் செபம் என மூன்று வகையான இறைவேண்டல்கள் இருக்கின்றன. இவை மூன்றையும் செய்பவர்கள்தான் முழுமையான செப ஆளுமைகள். காரணம், மூன்று வகைகளிலும் நிறைகள் இருப்பதுபோல், குறைகளும் இருக்கின்றன. மூன்றும் இணையும்போதுதான், குறைகள் நிறைவாகி, சமநிலையான இறை வேண்டலாக மாறுகிறது. எனவே, மூன்றில் ஒன்று குறைந்தாலும், அது முழுமையற்றதாக மாறிவிடும்.
பெரும்பாலான கத்தோலிக்கர்கள் திரு அவையாக இறைவேண்டல் செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நாள்தோறும் திருப்பலி மற்றும் இதர வழிபாடுகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள் அல்லது ஞாயிறு மட்டுமாவது கோவிலுக்குச் சென்று திருப்பலியில் பங்கேற்பதைத் தவறாமல் செய்கிறார்கள். ஆனால், இவர்களில் பலரும் தனியாக இறை வேண்டல் செய்யும் இனிய அனுபவத்தைப் பெறாதவர்கள் என்பது வருத்தத்திற்குரியது.
தனி செபம், குழும செபம், திரு அவையாகச் செபம் என்னும் மூன்றிலும் அடிப்படையானது தனி இறைவேண்டலே. தனியாக இறைவேண்டல் செய்பவர்களே இதர இருவகையான இறை வேண்டல்களையும் பொருளுள்ள முறையில் செய்ய முடியும் என்பதை அனுபவித்தால்தான் அறிந்துகொள்ள முடியும்.
திருவிவிலியம் தனி இறைவேண்டலைச் சிறப்பாகக் காட்டுகிறது. ஆண்டவர் இயேசுவே இதற்குத் தன்னிகரற்ற எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். இறைவேண்டல் பற்றிய இயேசுவின் போதனையில் தனி வேண்டல் பற்றி இயேசு இப்படிக் கூறுகிறார்: “நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்” (மத் 6:6).
அதற்கான காரணத்தையும் முன்னரே கூறிவிடுகிறார் இயேசு. “நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும், வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 6:5).
ஆம், தனி வேண்டலில் நமக்கு வெளிவேடம் கிடையாது. தனி வேண்டலில்தான் கடவுளின் முன் நாம் ‘நிர்வாணமாக’ நிற்கிறோம். எந்த வெளி வேடமும் தேவையில்லாமல் நாம் நாமாகவே இறைவனின் முன்னிலையில் அமர்வதே தனி வேண்டல். இதுவே தனி வேண்டலின் தனிச்சிறப்பு.
எனவேதான், இயேசு தம் செப வாழ்வில் தனி வேண்டலுக்கு அழுத்தம் கொடுத்தார். அவர் தனியாக இறைவேண்டல் செய்வதை நற்செய்தி நூல்கள் நன்கு பதிவு செய்திருக்கின்றன. “இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்” (மாற் 1:35) என்பது இயேசுவின் செப வாழ்வு பற்றிய நெகிழ்ச்சியான ஓர் ஆவணம்.
விடியற்காலைக் கருக்கலிலேயே இறைவனிடம் வேண்டுவது இயேசுவின் அருள்வாழ்வு மதிப்பீட்டுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. நாளின் முதல் பொழுதை அவர் இறைவேண்டலில் தந்தையுடன் தனித்திருப்பதில் செலவிட்டார் என்பது நமக்கெல்லாம் மிகச்சிறந்த பாடம்.
நமது வாழ்வு எவ்வளவு பணி அழுத்தம் மிகுந்ததாக இருந்தாலும், காலையின் முதல் சில மணித்துளிகளை இறைவேண்டலில் செலவழிப்பது எவ்வளவு பெரிய பேறு! இயேசுவை நாம் பின் பற்றுவோமாக.
எப்பொழுதெல்லாம் இயேசு வல்ல செயல்கள் செய்து, மக்களின் பாராட்டு மழையில் நனைந்தாரோ, அப்பொழுதெல்லாம் அவர் தனி வேண்டலில் ஈடுபட்டார். அப்பங்களைப் பலுக்கி, மக்களுக்கு உணவளித்த நிகழ்வுக்குப் பின், “மக்களை அனுப்பி விட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்” (மத் 14:23) என்பது மற்றொரு சிறப்பான பதிவு. இங்கேதான் அவர் தம்முடைய புகழும், வெற்றியும் தந்தை இறைவனிடமிருந்தே வந்தன என்பதைத் தமக்குள்ளே உறுதிப்படுத்திக் கொண்டார். லூக்காவும் தனது பங்கிற்கு “அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்” (லூக் 5:16) என்று எழுதியுள்ளார்.
எனவே, நாமும் நாள்தோறும் தனி வேண்டலில் நேரம் செலவழிப்போம். ஆனாலும், தனி வேண்டலிலும் ஒரு குறையுள்ளது. இறைவேண்டலுக்குத் தேவையான சமூகத்தன்மை இங்குக் குறைபடுகிறது. பிறரைப் பற்றி அக்கறை கொள்ளத் தவறும் ஆபத்தும் அடங்கியுள்ளது. கோவிலுக்குச் சென்று சமூகமாக வழிபடாமல், தனி வேண்டலிலேயே நிறைவு கண்டுவிடும் அபாயமும் சிலருக்கு நேர்ந்து விடுகிறது. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
(தொடரும்)
Comment