தெய்வீகத் தடங்கள் - 10
விடாமுயற்சிக்கு ஓர் அழைப்பு!
மிகக் கடுமையான நரம்புத்தொகுதி சேதங்கள், மோட்டார் சைக்கிள் விபத்துகளினாலேயே ஏற்படுகின்றன. கடுமையான விபத்துகளினால் மேற்கை செயலிழந்து போகும்; அது வேலையும் செய்யாது; அதற்கு உணர்வும் இருக்காது. நரம்புகளை ஒட்டுதல், நரம்புகளை மாற்றும் சிகிச்சை, தசையை மாற்றுதல் முதலிய அறுவை சிகிச்சைகள், கை மீண்டும் வேலை செய்ய உதவலாம். மீள்கட்டமைப்பு நுண்அறுவை சிகிச்சை (reconstructive microsurgery) என்று இதற்குப் பெயர். தோல், தசை, தசை நார்கள், நரம்பு, எலும்பு ஆகியவை தொடர்பான சிக்கலான சேதங்களுக்குத் தரப்படும் அறுவை சிகிச்சைக்கு இது பொதுவான பெயர்.
இந்த முறையில் அறுவை சிகிச்சை வல்லுநர் நோயாளியின் உடலிலுள்ள தசை, எலும்பு அல்லது திசுவை எடுத்து, செயலிழந்த பகுதியைச் செயல் பெறச் செய்யவும், கை அல்லது காலை சீராக்கவும் பயன்படுத்துவார். இது சிக்கல் நிறைந்த செயல்முறை. மாற்றி அமைக்கப்படும் திசுக்களில் மிக நுண்ணிய இரத்தக் குழாய்கள் மீண்டும் நுண்ணிய முறையில் ஒட்டவைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை புதிய இடத்தில் உயிரோடு செயல்பட முடியும்.
2014, பிப்ரவரி 21 முதல், 2019 ஏப்ரல் 11 வரை எனக்குப் பத்து அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு சிகிச்சைக்கும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் பிடித்தது. கடைசி அறுவை சிகிச்சை முக்கியமானது. இதற்குப் பதிமூன்று மணி நேரம் ஆயிற்று. வலது கை மணிக்கட்டு இப்போது முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. விரல்களுக்கு உணர்வு வந்தவுடன் அது விடுவிக்கப்படும். விரைவில் ஒரு சிறு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இப்போதைக்குத் தேவைப்படாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
முந்தைய அறுவை சிகிச்சைகளின்போது வலது தோள்பட்டை, மேல் கை, கீழ்க்கை ஆகியவற்றில் உலோகத் தகடுகள் வைக்கப்பட்டன. வலது முழங்காலில் கரையக்கூடிய திருகாணி வைத்துச் சரிசெய்யப்பட்டது. காலில் சுண்டுவிரல் வெட்டி எடுக்கப்பட்ட பிறகு, வலது பாதம் சரியாயிற்று. இந்தச் சிகிச்சைக்காக இடது தொடையிலிருந்து தசைகளும் தோலும் எடுக்கப்பட்டன. இரத்தக் குழாய்கள் கால் கண்டைத் தசையிலிருந்து எடுக்கப்பட்டன. இவை எல்லாம் எனது வலக்கை தேறுவதற்கு உதவின. ஆனால், வலி! நரம்புநோய் வலி எப்படி இருந்தது? ஏன் ஏற்பட்டது?
கழுத்திற்குக் கீழுள்ள நரம்பு மண்டலம் சேதமடையும்போது வலி ஏற்படுவது இயற்கை என்று கங்கா மருத்துவமனை மருத்துவர்கள் கூறினார்கள். இப்படிப்பட்ட நோய்களில் நரம்பியல் வலியாகவே அது இருக்கும். மேலும், இந்த வலி சாதாரண சிகிச்சைகளுக்குக் கட்டுப்படாது. அதாவது, வலி போகும் மருந்துகள், மயக்க மருந்துகள், ஸ்டீராய்டுகள் இங்கே வேலை செய்யாது. இந்த நரம்பியல் வலிதான் (neuropathic pain) எனக்கு ஏற்பட்டது; இன்னும் இருக்கிறது. மேலும், நான் பல வாரங்கள் ஒரே நிலையில் படுத்திருக்க வேண்டியிருந்தது. படுக்கையில் இடப் பக்கமோ, வலப்பக்கமோ புரண்டு படுக்க முடியாது. இது பெரிய நலிவு; அதோடு வலது முழங்காலிலும், வலது பாதத்திலும் ஏற்பட்ட வலி என்னை நசுக்கிப் போட்டது. பல பகல்களிலும் இரவுகளிலும் வலி தாங்க முடியாமல் விழித்தே இருப்பேன்.
வலியை மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்கள். நல்ல வலி, கெட்ட வலி, மோசமான கொடூரமான வலி. எரிச்சல் அல்லது நலிவு காரணமாக ஏற்படுவது நல்ல வலி. ‘வலி இல்லாமல் இலாபம் இல்லை’ என்ற சொற்றொடருக்கு அடிப்படையானது. இந்த வலி சிறிது நேரமே இருக்கும். வலிக்கான காரணம் போனவுடன் வலியும் போய்விடும்.
கடுமையான முதுகு வலி, புற்றுநோயால் ஏற்படும் வலி எல்லாம் கெட்ட வலி; ஆனால், மேல்கை நரம்புப் பின்னலில் ஏற்படும் வலி கொடூரமான வலியின்கீழ் வரும். மனித உடலில் ஏற்படும் வலியிலேயே இது மிக மோசமானது. இந்த வலி ஏன், எப்படிக் கொடுமையானது என்பதை விளக்குகிறேன்.
நான் அனுபவித்த வலிகள் இவை: திரும்பத் திரும்ப வரும் எரிச்சல், கொட்டுவதுபோல வலி, வீக்கம். கூர்மையாகக் குத்துவது போன்ற வலிகள், எனது கையில் எரியும் உணர்வு, மின் அதிர்ச்சி ஏற்படுவது போல உணர்வு, கிள்ளுதல், துடித்தல், அதிர்வுகளுடன் இடியும் மின்னலும் போன்ற கொந்தளிப்பு, கையை அழுத்துவது போல அல்லது கரும்புச் சாறு பிழியும் எந்திரத்தில் நசுக்கப்படுவது போன்ற வலி.
வலி நோய்க்குறிகள் மனக்கடுப்பையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தின. பகல் நேரத்தில் வலியின் அளவு ஏறக்குறைய கூடாமலும் குறையாமலும் இருக்கும். ஆனால், இரவில் ஏற்ற இறக்கம் அதிகமாகவே இருக்கும். மற்ற வலி நோய்க்குறிகளைப் போலில்லாமல், வலி கூடுவதும் குறைவதுமாக இருப்பது மன அழுத்தத்தைக் கொடுக்கும். அதோடு தற்கொலை எண்ணங்களையும் தூண்டும்.
என்னைப் போன்ற நோயாளிகளில் 90 விழுக்காட்டினர் மன அழுத்தங்களுக்கும், மனநிலை மாற்றங்களுக்கும் ஆளாகிறார்கள் என்றும், அதே எண்ணிக்கையில் தற்கொலைக்கு இடம் கொடுத்துவிடுவார்கள் என்றும் மருத்துவர்கள் என்னை எச்சரித்திருந்தார்கள்.
என்னுடைய சிந்தனையில் எதிர்மறை எண்ணங்கள் இருப்பதை நான் உணரத் தொடங்கினேன். ‘இந்தத் துயரத்திலிருந்து எப்போது விடுவிக்கப்படுவேனோ?’, ‘இப்படி அல்லல்படும் வாழ்க்கை தேவையா?’, ‘போதும், முடித்து விடுவோம்!’
வலிக்கு நான் எதிர்வினையாற்றும்போது இவ்விதமான எண்ணங்கள் வந்தன என்பதை உணர்ந்தேன். எனினும், வலி கூடிக் குறையும் தன்மை உடையது என்பதை நான் உணர்ந்தபோது இந்த எதிர்மறை எண்ணங்கள் நின்றுவிட்டன. எனவே, நேர்மறையான உறுதிப்பாடுகளால் நான் வலுவூட்டப்பட்டேன்.
‘வாழ்க்கை இந்த வலியைக் காட்டிலும் பெரிது’, ‘பொறுமை வெகுமதி தரும்’, ‘கடவுளின் கால அளவில் நான் நலமுடன் இருப்பேன்.’ இவ்வாறு எனது கண்ணோட்டங்கள், சிந்தனை அமைப்புகள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் நேர்மறையான உருவாக்கம் ஏற்பட்டது. அது என்னுடைய மன இறுக்கங்களை, அழுத்தங்களைக் குறைத்து என் உயிர் வாழ்க்கையில் நிம்மதி காண உதவின.
மற்றொன்று, இந்த வலிகள் இருப்பதே செல்கள் புதுப்பிறப்பு பெறுகின்றன என்பதற்கு அடையாளம். இதை எழுதும்போதும் வலி தொடர்கிறது, செல்கள் வளர்கின்றன.
(தொடரும்)
Comment