No icon

புதிய ஆயருடன் எனது பயணம்...

குழித்துறை மறைமாவட்டம் கொடுத்து வைத்த மறைமாவட்டம்! இதுதான் விடுமுறைக்காக ஒரு மாதம் இந்தியா வந்த சில நாள்களுக்குள்ளேயே என் வகுப்புத் தோழர், நல்ல நண்பர் ஆயராகத் தேர்வு செய்யப்பட்ட செய்தி வந்தபோது, என் எண்ணத்தில் மின்னல் போல தோன்றி மறைந்த உணர்வு.

ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்களோடு மெய்யியலில், இறையியலில், அருள்பணித் திருநிலைப் பாட்டுக்குப்பின் தொட்டுத் தொடர்ந்த உறவில், நட்பில் நான் பார்த்த, என்னைப் பாதித்த எனக்குள் நல்லுணர்வு ஊட்டிய சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது சுகமான அனுபவம்.

“‘நம் வாழ்வுவார இதழ் பத்திரிகையிலிருந்து ஆயர் உங்களை அணுகச் சொன்னார்என்று கேட்ட போது, ‘கரும்பு தின்னக் காசா?’ என்று மனம் சொன்னது. பல ஆண்டுகளுக்குப் பின் தமிழில் எழுத அறிவும்கூட ஆனந்தக் குதியாட்டம் போட்டது. இங்கே என் வார்த்தைகளில் வெளிப்படும் புதிய ஆயரின் ஆளுமை, என் அனுபவம் மட்டுமே என்று குறுக்கிவிட யாரையும் அனுமதித்துவிடக் கூடாது என்பதற்காக, என் வகுப்புத் தோழர்கள் சிலர், அவரோடு பழகியவர்கள் சிலர் என்று தொலைபேசி அழைப்பில் சேகரித்த ஆயரின் ஆளுமைப் பரிமாணங்களையும் சேர்த்தே இந்தச் சிறிய பகிர்வை அடர்த்தி செய்திருக்கிறேன்.

ஆயரின் ஆளுமையின் அடித்தளம்-அடி உரம்

குழித்துறையின் புதிய ஆயரின் ஆளுமை என்ற வடிவத்தைப் புரிந்துகொள்ள, புதைந்து கிடக்கிற, மறைந்து கிடக்கிற அடித்தளம் எது? நாம் பார்க்கின்ற ஆளுமை வடிவத்தை வளர்த்தெடுத்த அடி உரம் எது? என்பது அவசியமான கேள்வி. என் அனுபவத்தில், ஆயரோடு பழகிய தோழர்கள், நண்பர்கள், பணியினைச் சுவைத்த மக்கள் - இவர்களின் பார்வையில்சட்டென வந்து விழுகின்ற பதில் நேர்மை, எளிமை என்பதாகத்தான் இருக்கும். நேர்மை, செயலில் மட்டுமல்ல, சிந்தனையில் கூட அது சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை ஆயரிடம் எப்போதுமே இருந்திருக்கிறது. அது இன்னமும் ஆழப்பட்டிருக்கிறது. இதை உறுதி செய்வது ஆயர் அறிவிப்புக்குப் பின் சில வகுப்புத் தோழர்களோடு ஆயரை வாழ்த்தச் சென்ற சந்திப்பில் ஏற்பட்ட அனுபவம்.

எங்களோடு மதியப் பொழுதைச் செலவழிக்கத் தன்னைச் சந்திக்க வருபவர்கள் அடுத்த நாள் வந்தால் போதும் என்று சொன்னதை நட்புக்கான மரியாதை என்று நினைத்தேன். தவறு என்று சந்தித்தபோது அவருடன் கொண்ட உரையாடல், கலந்துரையாடல், வந்து விழுந்த கேள்விகள் புரிய வைத்தன. அந்த உரையாடலின் உள்ளடக்கம் உயர்வு, உச்சம், பதவி, பொறுப்பு என்பதைக் கடந்து தன் முன் முகம் காட்டுகிற பணியை எதைக் கொண்டு எடுத்துச் செல்வது என்பது பற்றியதாகவே இருந்தது. தன் பணியைத் தெளிவாக, வார்த்தைகள் கொஞ்சமாய், ஆனால், உள்ளீடு பல ஆண்டுக்கான பணியின் பாதையைத் தெளிவாய் விளக்குவதாய் அமைய வேண்டும் என்பதே அவரது ஆதங்கமாய் வெளிப்பட்டது. இது அவரது சிந்தனையை மட்டு மல்ல, உயிரையும் ஆக்கிரமித்திருந்தது என்பதை வெகு விரைவில் கண்டுகொள்ள முடிந்தது.

இந்த நேரம் நட்புக்கு மரியாதை தர ஒதுக்கப்பட்ட நேரமல்ல; தன்னைச் செதுக்கிக்கொள்ளத் தன்னோடு பயணித்தவர்களின் சந்திப்பைப் பயன்படுத்திக்கொள்ள ஆயர் ஒதுக்கிய நேரம் என்பது தெளிவாகப் புரிந்தது. வகுப்புத் தோழராய் எல்லாரையும் மதிப்பது, ஏற்றுக்கொள்வது, குழுப் பகைமை கொஞ்சம் தலைதூக்கிப் பார்க்கிறபோது அதனைக் கடந்து நின்று இணைக்கின்ற, இணக்கமான சூழலைப் பேணுகிற வகுப்புத் தோழராய் ஆயர் இருந்ததை இன்றைக்கும் நினைக்கிறேன். படிப்பதற்காக உருவான குழுக்கள் போட்டி குழுக்களாய் மாறுகின்ற சூழல் தோன்றும்போதெல்லாம், குழுக்களின் குறுகிய பார்வையைக் கடந்து நின்ற முதிர்ச்சி இன்று பல மடங்கு வளர்ந்து, ஓங்கி, உயர்ந்து நிற்பதை அவரது சொல்லிலும், செயலிலும் பார்த்து வியந்து போகிறேன்.

சிந்தனையில் நேர்மை நிறைந்துவிட்டால் எளிமை எதார்த்தமாகி விடுவது இயல்புதான். ஒரு மனிதரின் உயர்வு தொட்டு விட்ட உயரம் சார்ந்தது மட்டுமல்ல; எந்த அடித்தளத்தில் ஊன்றப்பட்டு வளர்ந்து நிற்கிறோம் என்பதில்தான் என்பதை ஆழமாக நம்புகிறவன் நான். வகுப்புத் தோழராய் வளர்ந்தபோது நான் பார்த்த எளிமை, புதிய ஆயராய் அறிவிக்கப்பட்ட பின் அதிகமாய் வெளிப்பட்டது கண்டு ஆனந்தமடைந்தேன்.

உடுக்கிற உடையில், வெளிப்படுத்துகிற தோற்றத்தில் மட்டுமே எளிமையை அடக்கி விடுகின்ற முயற்சியிலே எனக்கு உடன்பாடு கிடையாது. எளிமை என்பது பார்ப்பவர்களை நோக்குகின்ற விதத்தில், அவர்களை, அவர்கள் வாழ்வை அணுகுகின்ற முறையில், அவர்களை அழைக்கின்ற சொல்லில், உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் விதத்தில், சிக்கல்களை அவர்களோடு சீர்தூக்கிப் பார்த்துத் தீர்வுகளை முன்வைக்கிற முறையில் வெளிப்பட வேண்டிய ஒன்றாகவே கருதுவேன். புதிய ஆயரோடு செலவிட்ட சில மணி நேரங்கள், அத்தகையவர் பணியேற்கத் தயாராகிவிட்டார் என்ற நம்பிக்கை மழையிலே என்னை நனைத்துப் போட்டது.

சிந்தனைத் தெளிவு, இன்று, நாளை என்று நின்றுவிடாமல், நமக்குப் பின் என்ற நீண்ட நெடிய தூரத்திற்குள் நுழைந்து பார்த்து நுட்பமாகத் திட்டமிடும் திறன்... இவை நம் ஆயருக்கு இயல்பாய் மாறியிருக்கிறது என்பதை என் வகுப்புத் தோழர்கள் அத்தனை பேரும் அறுதியிட்டுக் கூறுவார்கள். சிந்தனைத் தெளிவு, நீண்ட நெடிய காலத்துக்குள் உற்றுநோக்கி உண்டாக்குகிற செயல்திட்டம்... இவை மட்டும் போதுமா? போதாது என்பதற்கு நிறைய வாழ்கின்ற ஆதாரங்களும், மறைந்துபோன மனிதர்களின் வாழ்வும் சாட்சி சொல்லும்.

தளர்ந்துவிடாமல், சோர்ந்து போனாலும் விட்டு விடாமல் தொட்டுவிட்ட செயலை முன்னெடுக்கின்ற முயற்சி (constancy) அவசியம். இது புதிய ஆயரின் இதயத்தில் நிறைந்திருக்கிறது என்பதை ஆயர் தனக்கு உருவாக்கிக் கொண்ட இலச்சினையில் காண முடியும். இந்த இலச்சினையைக் கருத்தரித்த முயற்சி எனக்குத் தெரியாவிட்டாலும், பெற்றெடுக்கிற வலியைச் சில மணி நேரம் பக்கத்தில் இருந்து பார்த்தேன்.

மிகுந்த வலி தாங்கிப் பெற்றெடுத்திருக்கிறீர்கள். உங்கள் வலியை மட்டுமல்ல, பல பேரின் வலியைப் போக்குகிற இலச்சியத்தைக் கருத்தாங்கி, இலச்சினையைப் பெற்றெடுத்திருக்கிறீர்கள்புதிய எதிர்பார்ப்புகளோடு, புதிய ஏக்கங்களோடு இருக்கிற குழித்துறை மறைமாவட்டத்தின் வலியைக் குறைக்கும் போக்கும் பாதையைக் கோடிட்டுக் காட்டுகிற இலச்சினையைத் தந்திருக்கிறீர்கள். இது நீங்கள் உருவாக்கியது அல்ல; பெற்றெடுத்த உங்கள் உயிரிலிருந்து பிறந்த ஒன்று. புதிய ஆயர் அவர்களே, உங்கள் உள்ளக் கிடக்கைக்கு, உங்கள் உயிர் உருக்கி வடிவம் தந்திருக்கிற முயற்சிக்குத் தலை வணங்குகிறேன்.

எதையும் நிறைவாய் முடிக்க வேண்டும்; செயலின் முழுமை ஒவ்வொரு நிலையிலும் வெளிப்பட வேண்டும் என்பது படிக்கின்ற காலத்திலிருந்து நம் ஆயர் அவர்களிடம் வகுப்புத் தோழர்கள் அனைவரும் நாளும் கண்டறிந்த உண்மை. உருவாக்கிய ஒவ்வொன்றிலும், படைத்த அனைத்திலும் நிறைவை, முழுமையைக் கடவுள் கண்டதாகத் தொடக்க நூல் பதிவு செய்து வைத்திருக்கிறது. படைப்பின் தொடக்கத்தில் கடவுளின் செயலில் வெளிப்பட்ட முழு நிறைவை, படைப்பாற்றல் ஒவ்வொன்றிலும் வெளிப்படுத்த வேண்டுமென்று மானிடருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அழைப்பு இறை அழைப்பு, தொடர் அழைப்பு. இதனைப் பயிற்சிக் காலத்திலிருந்து இன்று வரை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவரைக் குழித்துறை பெற்றுக் கொண்டிருப்பது பெருமை. தமிழ்நாடு திரு அவைத் தலைமை இப்படியொருவரைத் தன் மணி மகுடத்தை அலங்கரிக்கப் பெற்றிருப்பது நாம் பெற்றுள்ள வரம்!

பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை பெற்றுள்ள, அந்த ஆளுமையை நேர்மை, எளிமை என்ற அடித்தளத்தில் அசைக்க முடியாத கட்டடமாய் கட்டியெழுப்ப இருக்கின்ற என் வகுப்புத் தோழரும், இனிய நண்பருமான புதிய ஆயருக்கு வகுப்புத் தோழர்கள் - இருக்கின்றவர்கள் மற்றும் இறைவனடி சேர்ந்துவிட்டவர்கள் சார்பாக வாழ்த்து மாலையைத் தோள்களில் சார்த்துகின்றேன். இறைவேண்டலுடன் கூடிய வாழ்த்துகளை உரித்தாக்குகின்ற வேளையில், உங்கள் பயணத்தில் எந்த வகையிலெல்லாம் தாங்குகின்ற தோள்களாக, சுமக்கின்ற கைகளாக இருக்க முடியுமோ அவ்வகையிலெல்லாம் உடனிருப்போம், உடன் பயணிப்போம் என்று உறுதி தருகிறோம்.

உங்கள் பணி சிறக்கட்டும்! தமிழ்நாடு திரு அவை உம்மைப் பெற்றதில் பெருமை கொள்ளும். அந்தத் திரு அவைக்குப் பெருமைக்கு மேல் பெருமை சேர்க்க உங்களை வாழ்த்துகிறேன்.

Comment