No icon

காலத்தின் அருமை தெரிந்தவர்!

1978, ஜூன் முதல் 1980 மே வரை இரண்டு ஆண்டுகள் சரல் பங்கில் துணை பங்குப் பணியாளனாக நான் பணியாற்றிய காலக்கட்டத்தில், மண விளை, சரல் பங்கின் கிளைப் பங்காக இருந்தது.          அந்தக் கிளைப் பங்கில் பிறந்தவர்தான் நமது ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ். வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்க்கப்பட்டார். ஆல்பர்ட்டும், அனைவருடைய பாசத்திற்கும் உரியவராக இருந்து வந்தார். சிறந்த  பீடச்சிறுவனாக ஊர் மக்களுக்கு அறிமுகமாகி இருந்தார். மிகத் துடுக்காகவும், சுறுசுறுப்பாகவும் இருந்ததோடு, பீடப் பொருள்களைக் கண்ணியமாக, கவனமாகக் கையாள்வார்.

தோழர்கள் மத்தியில் குறும்பாகவும், அதே நேரத்தில் விளையாடும்போது யாராவது ஏமாற்றினால் அவர்களைக் கண்டிப்பதிலும், அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்வது   வரையிலும்  விடாமல் போராடுவதும் அவரில் காணப்பட்ட சிறப்புப் பண்புகளாகும்.

சரலில், அருள்சகோதரிகளால் நடத்தப்படும் உயர்நிலைப் பள்ளியில் அவர் எட்டாம் வகுப்பு பயிலும்போது அந்த வகுப்பில் மறைக்கல்வி பாடம் கற்பித்து வந்தேன். மறைக்கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். அமைதியான குணம் உடையவராக இருந்தாலும், கேள்விகள் கேட்டு, விளக்கங்களைப் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துவார். அருள்பணியாளர் ஆகவேண்டும் என்று விரும்பிய அவர் எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றதும் பெற்றோர் ஒப்புதலுடன், அருள்பணியாளர்கள்  நல்லாசீருடன் புனித ஞானப்பிரகாசியார் குருமடத்தில் சேர்ந்து படிக்கலானார்.

1996-1999-ஆம் ஆண்டுகளில் மதுரை, கருமாத்தூரில் அமைந்துள்ள கிறிஸ்து இல்லம் எனும் குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் மாணவர்களுக்கு ஆன்மிக ஆலோசகராக நான் அமர்த்தப்பட்டபோது, அருள்பணியாளர் ஆல்பர்ட் அங்கு குருமாணவர்களின் வழிகாட்டித் தந்தையாகச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மாணவர்களுக்கு உரையாற்றுவதிலும், வழிகாட்டுவதிலும் மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். மாணவர்களின் நற்குணங்களை இனங்கண்டு அதனை வளர்க்க அவர்களைத் தட்டிக் கொடுத்தும், குறைகளைக்  காணும்போது, பக்குவமாகச் சுட்டிக்காட்டித் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தூண்டுகோலாகவும் இருப்பார்.

காலத்தின் அருமை தெரிந்தவர் என்பதால், கருமாத்தூர் குருத்துவக் கல்லூரி மாணவர்களின் வழிகாட்டியாகப் பணியாற்றிய காலங்களில் தன்னுடைய கல்வி நிலையை மேம்படுத்தத் தவறியதில்லை. அதற்காக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர் கல்வி கற்றார்.

அவருடைய பங்குப் பணி வாழ்விலும், மறைவட்ட முதன்மைப் பணியாளர் நிலையிலும்  நிர்வாகத் திறமை உடையவராக, பல எதிர்ப்புகளுக்கிடையேயும் முற்போக்குச் சிந்தனையுடன் மறைமாவட்ட முன்னெடுப்புகளை முன்னிலைப்படுத்தும் போது, அதற்கு மாறுபட்டக் கருத்து உடையவரையும் தாமாகவே தேடிச் சென்று, பேசி ஏற்புடையவர்களாய் மாற்றுவதில் ஆற்றலும், விவேகமும்அதே நேரத்தில் தாழ்ச்சியும் உடையவராகக் காணப்பட்டார் என்பதைப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கடின உழைப்பால் தன்னுடைய பணிப் பொறுப்புகளில் பிரமாணிக்கமாய் இருந்ததோடு, தன் ஆன்மிக வாழ்வில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்ட அவரைக் குழித்துறை மறைமாவட்ட முதன்மை மேய்ப்பராகத் தேர்ந்து கொண்ட இறைவனுக்கு நன்றி கூறி, அவர் பணி சிறக்க வாழ்த்துவோம். செபிப்போம்!

Comment