
நம்பிக்கையை விதைப்போம்!
அலெக்சாண்ட்ரோ மன்சோனின் ‘I Promessi Sposi’ என்கிற இத்தாலிய நாவலில் அருள்பணியாளர் அபோண்டியோ மற்றும் கர்தினால் ஃபெதெரிகோ இடையே நடக்கும் உரையாடலில், தனது பணிசார் நடத்தையை நியாயப்படுத்தும் விதமாய் அருள்பணியாளர் அபோண்டியோ கூறுகிற வார்த்தை, “நம்பிக்கை (தைரியம்) - ஒருவர் அதைத் தனக்குத்தானே கொடுக்க முடியாது” (Il coraggio, uno non se lo può dare). காரணம், நிகழும் தவறுகள், தண்டிக்கப்படாத அநீதிகள் மற்றும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையின்மை ஆகிய கடினமான சூழலில், யாரும் தனக்குத்தானே தைரியத்தைக் கொடுக்க முடியாது என்கிறார். குடும்பம், சமூகம், அரசியல், ஆன்மிகம் என எங்குப் பார்த்தாலும் இத்தகு கையறு நிலையே தொடர்கிறது.
நீதிமன்றங்களை நாடிச் சென்றால் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை இல்லை. தவறுகளைக் கண்டிப்பார்கள், பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்று நினைத்துக் காவல் நிலையம் சென்றால், வேலியே பயிரை மேயும் கதை. நம்பிக்கையும், பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய அரசு இயந்திரங்களும் கண்காணிப்புக் கேமராக்களுக்குப் பின் ஒளிந்து கொண்டிருக்கின்றன. ஆன்மிகத்திற்குள் வந்தாலும் இதே நிலைதான். பிரச்சினைகளைச் சந்திப்பதற்குப் பதிலாகத் தள்ளிப்போடுவது தீர்வென்று கனவு காண்கிறார்கள். ஆலயம், மசூதி, கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பாளர்களை நம்பி வந்தால் ‘செவி மடுப்பார்கள், தீர்வு கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள். இங்ஙனம், அதிகரித்து வரும் அவநம்பிக்கை, வெறுப்பு போன்ற எதிர்மறை எண்ணங்களை ஊடகங்களும் தீனிபோட்டு வளர்க்கின்றன. ஊடகங்களில் குவியும் பெரும்பாலான செய்திகள் உண்மைகளை மறைத்துத் திரித்து அவநம்பிக்கைகளை, வெறுப்புகளை அள்ளி வீசும் விஷமங்களே. அச்சத்தைத் தூண்டும் செய்திகளை அனுப்புவதிலும், அவற்றின் பரவலை ஊக்குவிப்பதிலும் ஒவ்வொரு தனிநபருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பொறுப்பு உள்ளது என்பதே கசப்பான உண்மை. யாரை நம்புவது? எதை நம்புவது? எங்குச் சென்றால் தீர்வு கிடைக்கும்? என்கிற குழப்பங்களே அதிகம். உறவுகளையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் அவலம் நீள்கிறது. எனவே, பரஸ்பர நம்பிக்கையைச் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் காலத்தின் கட்டாயம்.
கொரோனா பெருந்தொற்றைக் கடந்து வந்துவிட்டோம். ஆனால், பயம் ஒரு தொற்றுநோயைப் போல் எல்லா இடங்களிலும் தாண்டவமாடி எல்லா வயதினரையும், சூழலையும் பாதிக்கிறது. இது மிகவும் நன்கு அறியப்பட்ட வைரஸ். ஆனால், அதன் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசி இன்னும் முழுமையாகக் கண்டு பிடிக்கப்படவில்லை என்பதைவிட கடைப்பிடிக்கப்படவில்லை எனலாம். பயம் என்பது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்க்கும் மற்றும் தன்னையும், மற்றவர்களையும் கருத்தில் கொள்ளும் ஓர் உணர்வின் வழி. தனிமைப்படுத்தப்பட்ட சந்தேகங்களின் ஊர்வலத்துடனும், தாக்கும் கோபத்துடனும், முடிவெடுப்பதிலிருந்தும், உறுதியளிப்பதிலிருந்தும், கொடுப்பதிலிருந்தும் பின்வாங்கும் அவநம்பிக்கையுடனும் பயம் தெருக்களில் அலைந்து திரிகிறது. திறமையானவர்கள், தகுதியானவர்கள் பலர் பொறுப்புகளிலிருந்து விடுபட எத்தனிப்பதும் இதனால்தான். குறிப்பாக, பொதுவெளிச் சமூகத்தின் நிர்வாகத் தன்மைகளுக்குள் வருகின்ற போது, பொறுப்புகளை எதிர்கொள்வது, மோதல்கள் குறித்த பயம், விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளின் ஆக்கிரமிப்பு போன்றவை பய உணர்வை அதிகம் தூண்டுகின்றன. இந்நிலையில் அதிகாரம் அல்லது ஆதாயங்களுக்கு உறுதியளிக்காமல் செயல்படும் அர்ப்பணிப்புக்கு நம்பிக்கை தேவைப்படுகிறது.
துரோகங்கள் மற்றும் வஞ்சகத்தால் அடுத்தவர் உடனான உறவு உடைக்கப்படும்போது, அவர் பணியாற்றும் நிறுவனங்களுடனான உறவும் பாதிப்படைகிறது. அச்சம் ஒரு தொற்றுநோயைப் போல பரவுகிறது. அதை ஒரு நோயாக அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக, எதார்த்தவாதத்தின் ஒரு வடிவமாக நியாயப்படுத்தி விலகிக் கொள்வதில் அக்கறை காட்டுவோர் அதிகம். நம்பிக்கை சுயமாகக் கொடுக்கப்பட முடியாது என்று நினைக்கும் சூழலில், நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்கான காரணங்களையும், பொது நன்மையைக் கவனித்துக் கொள்வதற்கான கடமையையும் உணர்ந்து, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதில் தன்னம்பிக்கை கொண்ட நபர்களாக மாறும் பொறுப்பை நாம் உணர்வது அவசியம். அதை விடுத்து, விவேகத்தின் ஒரு வடிவமாகவும், எதார்த்த வாதத்தின் நடைமுறையாகவும், அமைதியான வாழ்க்கைக்கான ஆலோசனையாகவும் நடுநிலை வகிப்பதை ஒருபோதும் நியாயப்படுத்தலாகாது. நடுநிலை வகிப்பது, கேட்டுவிட்டுக் கடந்து விடுவது நிர்வாக அணுகுமுறைக்கு உகந்ததல்ல. எனவே, இன்று நம்பிக்கையைத் தானாகவே தனக்குள் ஒருவர் உருவாக்கிக்கொள்ள இயலா அளவிற்கு எதிர்வினைத் தாக்கங்கள் இருக்கும் தருணத்தில், நம்பிக்கையை நம் சமூகத்தில், வாழும் குடும்பத்தில், பணிபுரியும் இடங்களில் விதைப்பதே மிகப் பெரிய சவால். இது வெறும் வார்த்தையால் வருவதல்ல; மாறாக, அன்றாடச் செயல்களால் மட்டுமே சாத்தியம்.
இன்று வணிகமாகிறது...
பயத்தைப் பரப்புவதன் மூலம் யார் பயனடைகிறார்கள்? பயத்தையும், அவநம்பிக்கையையும் விதைப்பதன் மூலம் என்ன நடத்தைகள் ஊக்குவிக்கப்படுகின்றன? இத்தகு கேள்விகள் எழுப்புவது அவசியம். ஓர் ஆபத்தான சூழலுக்கு எதிராகத் தற்காத்துக் கொள்ள, முதன்மையாகத் தன்னைப் பற்றிச் சிந்திக்க பரிந்துரைக்கும் ஆர்வங்களுக்குப் பின்னால் பய வணிகம் உள்ளது. உதாரணத்திற்கு, உலகின் பல பகுதிகளை உலுக்கும் போர்களை எடுத்துக் கொள்வோம். ‘போர் என்பது தங்கள் நாட்டைப் பாதுகாக்க’ என்பது வாதம். ஆனால், நல்ல புத்திசாலியான எவரும் ‘போர் அழிவுகரமானது’ என்று அங்கீகரிக்க முடியும். இதன் மூலம் பயனடைபவர்கள் ஆயுத விற்பனையாளர்கள் மட்டுமே! சரக்குகளைக் குவித்தல், அதிகாரங்களைத் தக்க வைத்தல் எனப் பல நிலைகளில் பய தொற்றுநோய் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. வணிகர்களும், சர்வாதிகார அபிலாஷைகளும் இதனால் பயனடைகின்றனர். பாதிக்கப்படுபவர்களோ சாமானியர்கள்! பொறுப்புகளைத் தவிர்ப்பது, அரசியல் ஓர் அழுக்கு என்று ஒதுங்குவது, பொது நலனுக்காக அர்ப்பணிப்பது ஆபத்தானது என்று விலகியிருப்பது இவற்றின் வெளிப்பாடுகளே!
நம்பிக்கை நமதாகட்டும்!
நம்பிக்கை - ஒரு சமூகத்தின், நகரத்தின், நாட்டின் மக்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான அமைதியான சக வாழ்வுக்கு இன்றியமையாதது. அது இன்றைய சவால்களை எதிர்கொள்வதற்கும், எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கும் ஓர் அவசிய அணுகுமுறை; நமது நாகரிகத்தின் வீழ்ச்சியை எதிர்ப்பதற்கான விரும்பத்தக்க மருந்து; அனைத்திற்கும் மேலாய் பயம் மற்றும் அச்சத்தின் தொற்றுநோய்க்குத் தீர்வு.
மனிதகுலம் இயல்பில் நம்பிக்கைக்குத் தகுதியானது; நம்பிக்கையின் அடிப்படையிலே வாழ்கிறது. உதாரணமாக, பேருந்து ஓட்டுபவர் நம் இலக்குக்கு நம்மை அழைத்துச் செல்வார் என்று நமக்குத் தெரியும். உணவுக்கடை மற்றும் பழ விற்பனையாளர் ஆரோக்கியமான பொருள்களை விற்பனை செய்வார் என்று நம்புகிறோம். நகரத்தில் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தங்களது நேரம், நுண்ணறிவு, முயற்சியை அர்ப்பணிக்கிறார்கள் என்று சட்டப் பாதுகாப்புத் துறையினர் மீது நம்பிக்கை வைக்கிறோம். மதகுருமார்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொள்வார்கள், கடவுள் அனுபவத்தைக் கற்றுத்தருவார்கள் என்று அவர்கள் மீதும் நம்பிக்கை உள்ளது. நாம் சந்திக்கும் வழிப்போக்கர்கள், சுற்றுலாப் பயணிகள் மீதும் நம்பிக்கை உள்ளது. அவர்கள் புன்னகைக்காமலோ அல்லது வாழ்த்தாமலோ, அவசரப்படாமலோ, இடையூறு ஏற்படுத்தாமலோ கடந்து செல்லக்கூடும் என்று நமக்குத் தெரியும். முன்பின் தெரியா மக்கள் மீது நம்பிக்கை உள்ளது.
தெரு தெரியாது திசைகளைக் கேட்டால், அவர்கள் பதிலளிக்க முடிந்தால், அவர்கள் தயவுடனும், துல்லியத்துடனும் சொல்வார்கள் என்று தெரியும். இப்படி வாழ்வில் நம்பிக்கை கொள்ள ஏராளமான தருணங்கள் நமது கவனிப்பின்றியே கடந்து சென்றுகொண்டுதான் இருக்கின்றன. இவைவெல்லாம் அடிப்படையில் இயல்பாகவே நம் வாழ்வு நம்பிக்கையால் வழிநடத்தப்படுகிறது என்பதற்கான உதாரணங்கள். இந்நிலையில் ஏன் பயம்? அவ நம்பிக்கை? அச்சம்?
ஒட்டுமொத்த மனிதகுலமும் நம்பிக்கைக்குத் தகுதியானது. இருப்பினும், பூமியில் மோசடி செய்பவர்கள், தொந்தரவு செய்யக்கூடிய குழப்பமானவர்கள், திருட்டு மற்றும் குறும்புத்தனங்களைத் திட்டமிடுவதில் தங்கள் நேரத்தைச் செலவிடும் நேர்மையற்ற மக்கள், பொதுவிடச் சுவர்களிலும் மற்றும் வலைத்தளங்களிலும் தாறுமாறாக எழுதும் முட்டாள்தனமான மக்கள், மனித மாண்பு மற்றும் அடையாளங்களை அழிக்கும் முட்டாள்தனமான மக்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! ஆம், அவர்களும் இருக்கிறார்கள். அவர்களும் நம் கவனத்திற்குத் தகுதியானவர்கள். அவர்கள் நமது நம்பிக்கை விதைகளால் நல்ல நடத்தை மற்றும் நேர்மையின் விதிகளுக்கு மீண்டும் வழிநடத்தப்படலாம். எனவே, நம்பிக்கை விதைப்பது கட்டாயமாகிறது.
Comment