No icon

அவள் ஒரு நற்செய்தி!

எப்பொழுதுமே பயணிகள் கூட்டம் பிதுங்கி வழியும் அந்த ஷேர் ஆட்டோவில், அன்று ஏனோ வேறு பயணிகள் யாரும் உடன் பயணிக்கவில்லை. ஆட்டோவில் அமர்ந்த ஜெஸி டீச்சருக்கு, அந்த அமைதியான தனிமை மனத்திற்குச் சற்றே ஆறுதலளிப்பதாக இருந்தது. தவிரவும் அவளுக்கு அப்போதைக்கு அது தேவையாகவும் இருந்தது!

திடீரென்று கைப்பையில், தன் கையை நுழைத்து எதையோ தேட ஆரம்பித்தாள் அவள். அதிலிருந்த நாலைந்து புத்தகங்களுக்கு நடுவே அவள் தேடிய அந்தப் புத்தகம் கையில் கிடைத்துவிடவே,…கண்களில் நீர் ததும்ப அதை முத்தமிடுகிறாள், ஆதரவாக வருடுகிறாள்!

அது ஒரு நற்செய்திப் புத்தகம்! அப்புத்தகமும் மற்ற பள்ளிப் புத்தகங்களைப் போலவே காக்கி அட்டையிடப்பட்டுக் காட்சியளித்தது. சற்றே வித்தியாசமாகத்தான் இருந்தது!

ஏன் அப்படி? ஜெசி ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.… ஆழ்ந்த மதப்பற்றுடன் வளர்க்கப்பட்டவள். சிறு பிள்ளையிலிருந்தே அருள் சகோதரியாக வேண்டும் என ஆசைப்பட்டவள்தான். ஆனால், வளர வளர, வயது ஏற ஏற பருவ வயதின் இயல்பினால் கூடப் படிக்கும் விஷ்ணுவை, கல்லூரியில் படிக்கும்போதே காதலிக்க ஆரம்பித்தாள். அவனோ தீவிரமான இந்து மதப்பற்றாளன். ‘காதலுக்குக் கண் இல்லையே!’ என்பார்கள். ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் தாங்கள் சார்ந்த மதம் பற்றிப் பெரிதும் அக்கறைப்படவில்லை. அந்த அளவுக்கு அவ்விருவரும் ஒருவர்மீது ஒருவர் அதிகப்படியான ஈர்ப்பும், காதலும் கொண்டிருந்தார்கள். இடையிடையே அதைப் பற்றி பேச்சு எழுந்த போதும், விஷ்ணு அவளிடம்,…”இதோ பாரு ஜெசி, என்னால் ஒருபோதும் மதம் மாறவே முடியாது. உன்னையும் என் மதத்திற்கு மாறச் சொல்லி நான் ஒருபோதும் கட்டாயப்படுத்த மாட்டேன். நாம் இருவரும் ஒருவர் மதத்தை மற்றவர் மதிக்க வேண்டும்; நீ என் மத விஷயங்களில் தலையிட வேண்டாம். நானும் தலையிட மாட்டேன்என்று கூறி நம்ப வைத்தான்; அவளும் நம்பினாள்.

ஏறத்தாழ ஐந்து வருட காலக் காதலுக்குப் பின், தொடக்கத்தில் எதிர்த்தாலும், பின் இரு வீட்டார் சம்மதத்துடனும், இரு மத முறைப்படியும் திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.

இப்போது விஷ்ணு ஒரு கல்லூரியில் பேராசிரியராகவும், ஜெசி ஒரு மேல் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி நான்கைந்து மாதங்கள் கழிந்த நிலையில், ஜெசியின் மதம் சார்ந்த நடைமுறைச் செயல்பாடுகளில் சிறிது சிறிதாகத் தலையிட ஆரம்பித்தான் விஷ்ணு. குறிப்பாக, அவள் ஞாயிறு காலையில் திருப்பலிக்குச் செல்வதை அவன் விரும்பவில்லை. இதன் காரணமாக அடிக்கடி இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட, அது சில நேரங்களில் மிகப்பெரிய சண்டையில் முடிந்தது.

அவன்மீது வெறுப்பு அதிகம் ஏற்படாதிருக்க அவனது பிற நல்ல குணங்களை எண்ணிப் பார்த்தாள் ஜெசி. இருவருமே வேலைக்குச் செல்கின்ற காரணத்தால், வீட்டில் அவன் அவளுக்கு ஒத்தாசையாக இருக்கும் பண்பு, தன் தாய்-தந்தையரையும் அவனது பெற்றோராக எண்ணி, அவர்கள் மீது அவன் வைத்தி ருக்கும், மரியாதை, பாசம்,… ஏழைகளுக்கு இரங்கும் இரக்கக் குணம் முதலியன அவன்மீது அவள் கொண்ட அன்பை அதிகப்படுத்தவே செய்தன. எனவே, அன்பே அனைத்தும், எல்லாமும் எனப் போதித்த, அதோடு தனக்கு எதிரானவர்களையும் அன்பு செய்யக் கற்பித்த தனது மதத்தின் அடிப்படைத் தத்துவத்தை வைத்தே அவன் மனதைக் கவர முடிவு செய்தாள்.

அன்புபொறுமையுள்ளது,…பரிவுள்ளது; சீற்றத்திற்கு இடம் தராது;… பிறர்மீது நல்லெண்ணம் இழப்பதில்லை; நம்பிக்கையில் தளர்வதில்லை; அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்என்ற நற்செய்தி வார்த்தைகளைத் திரும்பத் திரும்பத் தன் மனத்திற்குள் சொல்லி உரமேற்றிக் கொண்டாள்.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்என்ற பழமை வாதமோ, ‘கண்ணுக்குக் கண்,… பல்லுக்குப் பல்’… என்ற பகைமை வாதமோ பலன் தராது. மாறாக, அது பிரச்சினையை மேலும் அதிகரிக்கவே செய்யும். மேலும், அது அவர்களிடையே நிரந்தரமான பிரிவை உண்டாக்கி, வயிற்றில் வளரும் தங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கவும் கூடும். எனவே, இப்போதைக்கு அவன் போக்கிலேயே போகத் தீர்மானித்தாள் அவள்.

மதத்தைக் காரணம் காட்டி அவன் அவளிடம் தகராறு செய்யும்போதெல்லாம், மிகுந்த பொறுமையுடனும், நிதானத்துடனும், ஞானத்துடனும் அதனை எதிர்கொள்ளத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.

இப்போதைக்குத் தான் ஒரு நல்ல கிறிஸ்தவ மனைவியாக,… தாயாகஅன்பை மட்டுமே அந்தக் குடும்பத்தில் விதைக்க வேண்டும். ஒருநாள் தன் கணவனின் மனம் மாறவோ, மதம் மாறவோ ஒருவேளை உதவலாம். அல்லது விஷ்ணு முன், தான் சொன்ன சொல்லைக் காத்து, அவளது மதம் சார்ந்த செயல்பாடுகளுக்குத் தடை போடாமலிருக்கலாம் என நம்பினாள் அவள். எனவே, கணவன் அவன் கண்முன்னே விவிலியம் படிப்பதை விரும்பாத காரணத்தால், அவள் படிப்பது என்ன புத்தகம் என வெளியில் தெரியாதபடி அப்புத்தகத்திற்கும் மற்ற பள்ளிப் புத்தகங்களைப் போலவே காக்கி அட்டை போட்டுக் கைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

இப்போதெல்லாம் திருப்பலிக்குச் செல்ல உத்தரவு கேட்டு தன் கணவனிடம் சண்டை போடுவதேயில்லை. மாறாக, அவள் பணிபுரிந்தது ஒரு கத்தோலிக்க மேல்நிலைப்பள்ளி என்பதால், அவ்வப்போது அங்கு நடை பெறும் திருப்பலிகளில் முழு ஈடுபாடுடன் கலந்துகொள்ள ஆரம்பித்தாள். மேலும் அவள் கையில் உள்ள  அலைபேசியில் இடைவிடாது ஒளிபரப்பாகும் Live Mass… Live Adoration முதலானவையும்  அவள் கடவுளோடு ஒன்றித்திருக்கப் பெரிதும் உதவின.

அதோடு பள்ளி ஓய்வு நேரத்தில் விவிலியம் வாசிப்பதும், மறைக்கல்வி எடுப்பதும், தன் பாட வேளையின் போதே வாய்ப்பு கிடைத்தால் நற்செய்தி அறிவிப்பதும் அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தந்தன.

அன்றும்  அப்படித்தான் திரு. ச்.. கிருட்டிணப்பிள்ளை அவர்கள் எழுதிய  ‘இரட்சண்ய யாத்ரீகம்என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதன்னரியதிருமேனி, சதைப்புண்டு, தவிப்பெய்திப் பன்னரிய பலபாடு படும்போதும், பரிந்தெந்தாய் இன்னதென அறிகிலார் தாஞ் செய்வதிப் பிழையை மன்னியும் என்றெழிற் கனிவாய் மலர்ந்தால் நம் அருள்வள்ளல்என்ற பாடலை நடத்த வேண்டியிருந்தது.

இறைமகன் இயேசு சிலுவை சுமந்து, முள்முடி சூட்டப்பட்டு, கசையால் அடிக்கப்பட்டு, திருமேனி சதையெல்லாம் கிழிந்து, இரத்தம் வழியப் புண்பட்டு ஆணிகளால் சிறையில் அறையப்பட்டு, பல பாடுகள் பட்டு, உயிர் பிரியும் நேரத்திலும், தன்னை இந்நிலைக்கு உட்படுத்திய மனுக்குலத்தின்மீது கோபம் கொள்ளாது;… மாறாக, அவர்கள் மீது பேரிரக்கம் கொண்டு, ‘பிதாவே இவர்கள் செய்வது இன்னதென்று இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்; எனவே, இவர்களை மன்னியும்என்று கூறி தம் இன்னுயிரை நீத்ததாகக் கற்பிக்கும்போது, மிகவும் அழகாக, மனதுருகி பாடம் நடத்திய அவள் எல்லா மதங்களும் அன்பையே போதித்தன; ஆனால், கிறிஸ்தவ மதம்தான் பகைவனுக்கும் அன்பு செய்யக் கற்றுத் தந்தது. இயேசுவே தாம் போதித்தபடியே வாழ்ந்தும் காட்டினார் என்று சொல்லித் தந்தாள்.

அதன்பின்வகுப்பு மாணவிகளும் அவர் தம் வீடுகளில்தம்பி-தங்கையரிடமும், உறவினர்- நண்பர்களிடமும் பகைமை பாராட்டக்கூடாது என்று எடுத்துச் சொல்லி, தன் வகுப்பில் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்ட மாணவிகள் யார் என விசாரித்து, அவர்களை எழுந்து நிற்கச் சொல்லிஅவர்தம் பகை மறந்து, தோழமை கொள்ளச் செய்தாள்.

இப்படி உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கச் சொன்ன இறைவார்த்தைக்குச் சான்றான அவள் ஒரு வாழும்  நற்செய்தி என்று சொல்வது சரிதானே!

Comment