No icon

தலைமை ஆசிரியர் அல்லர்; தலைமை அன்னை!

தலைமையாசிரியைசிஸ்டர் ஹெலன்என்றாலே, அந்தப் பள்ளியிலுள்ள அத்தனை பேர்களுக்கும் சிம்ம சொப்பனம்தான்! அந்த அளவுக்கு மிகவும் கண்டிப்பான, திறமையான நிர்வாகி! அனைத்து மாணவர்களின் ஒழுக்கம், நடத்தை, கல்வி போன்ற எல்லா விஷயங்களிலும் ஏராளமாக அக்கறை கொண்ட வராக இருந்தார். அதன் பொருட்டே ஆசிரியர்களிடமும், சிலவேளை பெற்றோர்களிடமும் சற்றே கூடுதலான கண்டிப்புடன் நடந்து கொள்வார். அதனாலேயே பலருக்கும் அவரைப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லைதான்!

ஒருநாள் ஆசிரியர்களில் சிலர் மதியம் சாப்பாட்டு நேரம் முடிந்து, மதியப் பாடவேளை மணியடிப்பதற்குப் பதினைந்து நிமிடங்களுக்கு முன், சற்றே ஓய்வாகப் பல குழுக்களாகப் பிரிந்து, அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு குழு மட்டும் பள்ளித் தலைமை ஆசிரியையைப் பற்றி மும்முரமாக விமர்சனங்களை விளாசித் தள்ளிக் கொண்டிருந்தது.

ம்... சிஸ்டர்களுக்கு என்ன கஷ்டம்? அவர்களுக்கெல்லாம் மணியடிச்சா சாப்பாடு. நமக்கெல்லாம் அப்படியா? இன்னிக்குக் கூட அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் சமைத்து வைத்து, அவர்களைத் தயார் பண்ணி, வெளியே அனுப்பி வைத்து, அதன் பின்னர்பரபர...’வென மற்ற வீட்டு வேலை களை முடித்து, மணியைப் பார்த்தால் மணி எட்டில் வந்து நிற்கிறது. அதுக்கப்புறம் எனக்குச் சாப்பிட ஏது நேரம்?

நம் பள்ளியில் காலை அசெம்ப்ளிக்கு 8.30 மணிக்கு முதல் மணி அடித்து விடுவார்களே! எனவே, நாலு இட்லியை டிபன் பாக்ஸில் போட்டுக் கிட்டு ஓடி வந்து அடுத்து அசெம்ப்ளி ஆரம்பிப்பதற்கு முன் ரெண்டு வாய் சாப்பிட்டு விட்டு ஓடலாம் என்றால், இரண்டாவது பெல்லும் அடித்து விட்டார்கள்.

என்ன பண்றது... டிபன் பாக்ஸை அப்படியே மூடிவிட்டு, வாயில் போட்ட இட்லித்துண்டை மென்றுக்கொண்டே வெளியே ஓடிவந்தேன். வகுப்பு ஆசிரியர்கள் எல்லோரும் அவரவர் வகுப்பின் பின்னே போய் நிற்கிறார்களா? எனவேவுபார்ப்பதற்காக ஆசிரியர் அறை வாசலில் வந்து நின்ற H.M. கண்ல நல்லா மாட்டிக்கிட்டேன். அந்த அம்மா அப்போ என்னைப் பார்த்த பார்வை இருக்குதே... வாயில் போட்ட இட்லி தொண்டையில போகல; துப்பவும் முடியல விக்கல்தான் வந்தது. என்ன பண்றது? என் கணவன் நல்லா சம்பாரிச்சா, நான் ஏன் வேலைக்கு வரப் போறேன்? எல்லாம் என் தலையெழுத்துஎன்று நீட்டி முழங்கினாள் ரோசி.

அதெல்லாம் விடப்பா! ஒவ்வொரு திங்கள்கிழமை காலையிலும் ஆசிரியர்கள் கொடி ஏற்றி, சொற்பொழிவாற்றணும்னு கண்டிஷன் போட்டிருக்காங்க பாரு, அதுதான் என்னை ரொம்ப டென்ஷனாக்குது. வகுப்புல மாணவிகளுக்கு எவ்வளவோ அறிவுரை சொல்றோம், பாடம் நடத்துறோம். ஆனா, ஆசிரியர்களும், மாணவர்களுமா ஏறத்தாழ ஆயிரம் பேருக்கு மேல கூடியிருக்கிற கூட்டத்திற்கு முன் பேசச் சொன்னா கை கால் உதறுது. வாய் குழறுது. என்னத்த சொல்றது? அதுதான் எனக்குக் கடுப்பாகுதுஅலுத்துக் கொண்டாள் ஜூலி. இவர் பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியை.

அதிலேயும், திங்கள்கிழமைகளில் ஆசிரியர்களுக்கென தனிச் சீருடை. விழா நாள்களில் ஆடம்பரச் சீருடை... கோபமா வருதுஎன்றார் இன்னோர் ஆசிரியை.

அதைவிட காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து, பள்ளிக்கு வந்த அன்றே தேர்வுத் தாள் விநியோகித்து, result analysis கொடுத்துடணும்னு சொல்றாங்க பாரு... அதுவும் ஒவ்வொரு வகுப்பிலேயும் ஏறத்தாழ அறுபது மாணவிகள் இருக்காங்க. ஒவ்வொருத்தரையா பேரைச் சொல்லி அழைத்து, விடைத்தாளைக் கையில் கொடுக்கும்போதே ஒரு பாடவேளை முடிஞ்சு போகுதுஅந்தத் தேர்வைப் பிள்ளைங்க எப்படி எழுதி இருக்காங்க?…அவங்க எப்படி எழுதினா இன்னும் நிறைய மதிப்பெண் கிடைக்கும்? மதிப்பெண் வாங்கத் தவறிய இடம் எது? என்றெல்லாம் பிள்ளைகளுக்கு ஏற்ற விளக்கங்கள் சொல்ல முடியலை. வகுப்புக்குப் போனோமா, பேப்பர்களைப்படபடன்னு விசிறியடிச்சோமான்னு வர வேண்டியிருக்கு...”… இப்படி ஓர் ஆசிரியரின் அங்கலாய்ப்பு!

அதை விடம்மா! ஒரு நாள் C.L. எடுத்து விட்டு, அடுத்த நாள் பள்ளிக்கு வந்தால்H.M. முகத்தைப் பார்க்கவே பயமா இருக்குது. என்னத்த சொல்றது?” குறை பாடிய ராணி டீச்சர் மேலும் தொடர்ந்தார்.

 “நமக்குரிய விடுப்பை நாம எடுக்கக் கூடாதுன்னா எப்படி? அவங்களுக்குத்தான் குடும்பக் கஷ்டம் எதுவுமில்லையே! நமக்கெல்லாம் அப்படியா? கணவனுக்கோ, பிள்ளைகளுக்கோ, நமக்கோ நோய் வந்தாலும், நம்ம வீட்ல பெரியவங்க யாராவது இருந்து, அவங்களுக்கு முடியாமப் போனாலும் நாமதானே பார்க்க வேண்டியிருக்கிறது? இதெல்லாம் இவங்களுக்குப் புரியவாப் போகிறது?”

ஆமா... ஆமா... ஸ்டெல்லா... போன வாரம் கூட எங்க மாமானாருக்கு முடியலைன்னு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வேலைக்கு வந்தா, நான் என்னவோடூயட்பாட பீச்சுக்கு, சினிமாவுக்குப் போயிட்டு வந்தா மாதிரி ஒரே திட்டு! ‘பள்ளி இறுதி ஆண்டு மாணவிகளைத் தயார் செய்யும் ஆசிரியர்கள் இப்படிப் பொறுப்பற்று நடந்து கொள்ளலாமா?’ங்கிறாங்க. என்ன செய்யறது? அலுவலக மனைவிகளுக்கு வீட்டு வேலையும் அதிகம், பணிச்சுமையும் அதிகம்னு பதவியில இருக்கிறவங்களுக்குப் புரியறதுமில்ல... நம்மால அவங்களுக்குப் புரிய வைக்கவும் முடியல. ஒரு வேளை, அவங்களுக்குத் தெரிஞ்சாலும், தெரியாத மாதிரி நடந்துக்கறாங்களான்னு தெரியலை.”

அப்போது அவர்கள் பேச்சிற்கு இடையே குறுக்கிட்ட அப்பள்ளியின் மூத்தத் தமிழாசிரியை செலின், “ஆசிரியைகளே, நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும். அதாவது, நாம அடிக்கடி லீவு எடுத்தா அந்த வகுப்புல மாணவிகள்ஆயனில்லா ஆடுகள்போல இருப்பார்கள். அந்த நேரத்திலதான் அவங்களுக்குள்ள பிரச்சினைகள் ஏற்படறதுக்கும், நேரத்தை வீணாக்கி, வெட்டிக்கதை, வீண்கதை பேசி, படிப்பில் ஆர்வமிழக்கிறதுக்கும் வாய்ப்புகள் உருவாகறதால, அந்த மாதிரிச் சூழ்நிலைகள் ஏற்படக்கூடாதுன்னு ஒரு பள்ளித் தலைமை நினைக்கிறதில்ல என்ன தப்பு இருக்குது?” என்று சொல்லி முடிக்கிறதுக்குள்ள, “ம்... இந்தம்மா பெரிய புனிதை... பேச வந்துட்டாங்கஎன முனகினார் சக ஆசிரியர் ஒருவர்.

அதற்குள் மதியச் சாப்பாட்டு வேளை முடிந்ததை அறிவிக்கும் பள்ளி மணி ஒலிக்கவே, மறுநாள் தேர்வுக்குரிய தயாரிப்பு வேலைகளைச் செய்ய ஆசிரியர்கள் தங்கள் அரட்டைக் கச்சேரியை அத்தோடு நிறுத்திவிட்டுப் பிரிந்து சென்றனர்.

மறுநாள் தேர்வு ஆரம்பித்தது. மாணவிகள் ஒவ்வோர் அறையிலும் தேர்வு எழுதுவதற்கு வசதியாகத் தனித்தனி இருக்கைகளில் அமர்த்திவைக்கப்பட்டி ருந்தார்கள். முறைப்படி அந்தந்தத் தேர்வறைகளில் மேற்பார்வைக்கென ஆசிரியர்கள் கைகளில் வினா, மற்றும் விடைத்தாள் சகிதம் கைகளில் ஏந்தியவர்களாய் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்கள்.

தேர்வு ஆரம்பித்ததை அறிவிக்கும் மணி ஒலித்ததும் மாணவிகள் மும்முரமாகத் தேர்வு எழுத ஆரம்பித்தார்கள். ஆசிரியர்கள் அவர்களைப் பார்வையிட்டபடி இருக்கைகளின் ஊடே நடந்து கொண்டிருந்தார்கள். இப்படியாகத் தேர்வு ஆரம்பித்துச் சரியாக அரைமணி நேரம் முடிந்த நிலையில், ஒவ்வொரு தேர்வு அறையையும் மேற்பார்வை செய்தபடி பள்ளி வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர் ஹெலன். அவர் ஒவ்வொரு அறையையும் தாண்டி நடந்து செல்லும் போதும் அந்தந்த அறையில் உள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் கூடுதல் கவனத்துடன் நடந்து கொண்டார்கள்.

அப்படி ஒரு தேர்வறையில் மாணவிகளின் மேற்பார்வையாளராக இருந்த டாலி டீச்சர், அவர் ஒரு நிறைமாதக் கர்ப்பிணி, அன்று அவரால் நடக்கவும் முடியவில்லை, நிற்கவும் முடியவில்லை. மிகவும் கஷ்டமான குடும்பச் சூழ்நிலையின் காரண மாக வேலைக்கு வந்த அவர், தன் ஆரோக்கியத்தின் மீது அக்கறைகொள்ள முடியாதவராக மிகவும் பலவீனமாக இருந்தார். எனவே, அந்நேரம் திடீரென தனக்குத் தலை சுற்றுவதாக உணர்ந்த அவர், ஓர் ஐந்து நிமிடம் அறையின் ஜன்னலோரம் இருந்த நாற்காலியில் சற்றே அமர்ந்து விட்டு எழும்பலாம் என நினைத்தவராய், அப்படியே சிறிது நேரம் கண்களை மூடி, தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தார். பார்ப்பதற்கு அவர் தூங்குவது போலவே இருந்தது.

என்ன துரதிருஷ்டமோ... சரியாக அந்த அறையின் வாசலில் வந்து நின்றார் தலைமை ஆசிரியர் ஹெலன். மாணவிகள் இடையே ஆசிரியர் இல்லாததையும், அந்தச் சூழலைப் பயன்படுத்தி மாணவிகள் தங்களுக்குள் சைகை மொழியில் பேசிக் கொள்வதையும், தேர்வறையின் ஒரு மூலையில் கண்ணை மூடி அமர்ந்திருந்த டாலியையும் பார்த்ததும் அவர் கண்கள் சிவந்தன. அங்கே சற்று நேரம் நின்று, மாணவிகளையும், ஆசிரியையும் முறைத்துப் பார்த்த அவர், ஒன்றுமே சொல்லாமல், வேகமாக நடந்து staff room இன் வாசலில் நின்றார்.

அன்றைய தினம் தேர்வுப் பணியில்லாத மற்ற ஆசிரியர்கள், மாணவிகளின் பிற ஏடுகளைத் திருத்தியபடியும், சற்றே ஓய்வாக ஏதேதோ தங்களுக்கான வேலைகளைச் செய்தபடியும் இருந்தார்கள்.

அந்த நேரத்தில் தலைமை ஆசிரியரின் வருகையை அங்கே, அந்த நேரத்தில் சற்றும் எதிர் பார்க்காத அவர்கள், அவரைப் பார்த்ததும் ஒருவிதப் பரபரப்புடனும், சிறிய அதிர்ச்சியுடனும் எழுந்து நின்றார்கள்.

ஆசிரியைகளே, உங்களில் பலரும் இல்லற வாழ்க்கையில் இருப்பவர்கள்தானே? உங்களில் பலரும் குழந்தை பெற்ற தாய்மார்கள்தானே! உங்களுக்கு உங்களோடு பணி செய்யும் சக ஆசிரியையின், அதுவும் கருவுற்ற ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் கஷ்டம் புரியாமல் போனது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

போங்கள், யாராவது ஒருவர் போய் பள்ளி முதல் தளத்தில் இருக்கும், ஒன்பதாவது வகுப்பறையில் மேற்பார்வை செய்து கொண்டிருக்கும் டாலி டீச்சரின் வேலையைச் செய்ய யாராவது பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். பாவம், நிறைமாதக் கர்ப்பிணியான அவருக்கு ஏதோ அசௌகரியமாக இருக்கிறது போலும். நான் அவர்களைப் பார்த்ததாகச் சொல்ல வேண்டாம். நீங்கள் மனமுவந்து செய்வதுபோல அவருக்கு உதவி செய்யுங்கள். அவரை இப்போதைக்கு இப்பணியிலிருந்து relieve செய்யுங்கள். போங்கள்...” என்று உத்தரவு போட்டுவிட்டு, வேகமாகச் சென்றுவிட்டார் சிஸ்டர் ஹெலன்.

தலைமை ஆசிரியரின் தாய்மையுள்ளத்தைப் புரிந்துகொண்டு, அதுவரை அவரைத் திட்டிக் கொண்டு இருந்தவர்கள், அவர் தலைமை ஆசிரியர் அல்லர்; தலைமை அன்னை என்று  புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

Comment