No icon

சிறுகதை

நான் அவன் இல்லை!

திருச்சியின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அழகான மரியன்னை ஆலயம் அது. ஏறக்குறைய ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட அந்தப் பங்கில் பங்குத்தந்தையாக ஃபாதர் சேகரன் பொறுப்பேற்றதில் இருந்து, பங்கில் ஏகப்பட்ட மாற்றங்கள்! அதுவரை தொலைக்காட்சிக் கத்தோலிக்கர்களாக இருந்த பங்குமக்கள் ஆலயத்துக்கு நேரில் வந்து, ஞாயிறு திருப்பலியில் பங்கெடுக்கவும், எப்போதும் மொபைல், பைக் ரேஸ் என்ற சிந்தனையில் இருந்த இளைஞர்கள் பங்கு இளைஞர் சமூகப்பணி மன்றத்தில் சேர்ந்து பணி செய்யவும் ஆரம்பித்திருந்தனர்.

ஞாயிறு மாலை திருப்பலியை நிறைவேற்றி விட்டு, மாதா கெபிக்கு முன்பு நின்று பங்கு மக்களைச் சந்தித்துக்கொண்டு இருந்தார் புதிய பங்குத் தந்தை சேகரன். எல்லாரையும் அனுப்பிவிட்டு, தன் அறைக்குத் திரும்பும்போதுதான், கொஞ்சம் தள்ளி இருட்டில் தனியாக ராஜா நிற்பதைக் கவனித்தார்.

ஃபாதர் சேகரன் பொறுப்பேற்ற சமயத்தில் திருச்சியில் எல்லாச் சமூகத்தினர் மத்தியிலும் தனி செல்வாக்கோடு இருந்தவரும், வரப்போகும் தேர்தலில் அனைவரின் ஆதரவோடு போட்டியிட இருந்த வருமான தொழில் அதிபர் செல்வத்தின் ஒரே மகன் ராஜா. தமிழில் நல்ல படைப்பாற்றல் கொண்ட ராஜா, அப்போது இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவராக இருந்து சமூக நலப்பணிகளை முழு வேகத்துடன் செய்துகொண்டு இருந்த வேளையில்தான் ஒரு விபத்தில் செல்வம் தன் மனைவியோடு இறந்துவிட, ராஜா தன் தந்தையின் தொழிலை முழு நேரம் கவனிக்க வேண்டியதாகி விட்டது.

வா ராஜாஎன்று சொல்லி அவனை அழைத்து, அவன் தோள்களில் கை வைத்தபடி ஃபாதர் சேகரன் ராஜாவிடம்என்ன ராஜா, உன்னைச் சந்திச்சு ரொம்ப நாளாயிடுச்சு. சந்தோஷமா இருக்கியா?” என்று கேட்கதன் கண்களில் இருந்து வெளிவரத் துடித்துக் கொண்டு இருந்த கண்ணீரை மறைப்பதற்காக மேலே நிமிர்ந்து வானத்தைப் பார்த்த ராஜா, ‘இல்லைஎன்று சொல்லிவிட்டு ஃபாதர் சேகரனைப் பார்த்தான். அப்போதுதான் கெபியின் வெளிச்சத்தில் ராஜாவின் கண்களைப் பார்த்த ஃபாதர், சேகரனுக்குக் காண்போரைக் கவரும் அழகான பிரென்ச் குறுந்தாடியுடன் முகத்தில் அடர்ந்த புருவங்களுக்குக் கீழ் தெரியும் ராஜாவின் அந்தத் துறுதுறு கண்களில் எப்போதும் அவர் காணும் மகிழ்ச்சி காணாமல் போயிருந்தது தெரிந்தது.

பாசமுள்ள தந்தையைப் போல ராஜாவின் கைகளை எடுத்து தன் இரு கைகளில் வைத்துக் கொண்ட ஃபாதர் சேகரன், சிறிது நேரம் அவனையே பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தார். சிறிது நேர அமைதிக்குப் பிறகு ராஜா எங்கேயோ பார்த்தபடி அவரிடம், “ஏன்னே தெரியலை ஃபாதர், இப்போ எனக்கு வருமானம், வசதிகள், பேர்புகழ் இப்படி எல்லாம் இருக்கு. ஆனா, எல்லாம் இருந்தும் எதிலும் எனக்குத் திருப்தியே இல்லை. வாழ்க்கையில ஏதோ குறை இருப்பது போலவே இருந்துக்கிட்டு இருக்கு” என்று தன் கண்களைத் துடைத்தான்.

உற்ற நண்பனைப் போல அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி, முகத்தைப் பார்த்த ஃபாதர் சேகரன், “மத்தேயு எழுதிய விவிலியத்தில இயேசுவிடம் வந்த அந்தப் பணக்கார வாலிபனை நான் இன்று தான் நேரில் பார்க்கிறேன். அது நம்ம ராஜாவா?” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, தொடர்ந்து ராஜாவிடம்அந்த வாலிபன் நிறைவான வாழ்வு பெற விரும்பினால், அவன் முதலில் சென்று தனக்குள்ளதை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, தம்மை வந்து பின்பற்றும்படி இயேசு சொன்னதைக் கேட்டிருக்கியா ராஜா?”   என்று கேட்க, “ஆமாம் ஃபாதர், கேட்டு இருக்கிறேன்என்றான் ராஜா.

இயேசு சொன்னதைக் கேட்ட அந்தப் பணக்கார இளைஞன் வருத்தத்துடன் சென்றதாக மத்தேயு குறிப்பிட்டு இருக்கிறார். அந்தப் பணக்கார இளைஞனாக நீ இருந்தால் என்ன செய்வாய் ராஜா?”  என்று கேட்டுவிட்டு, அவன் கண்களைக் கூர்ந்து பார்த்தார் ஃபாதர்.

ஃபாதர் சேகரனின் கூர்மையான பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் குனிந்து தரையைப் பார்த்த ராஜா சிறிதுநேரச் சிந்தனைக்குப் பிறகு தீர்க்கமாக, “வாழ்க்கையில்  நான் தேடும் நிறைவை அடைய அதுதான் வழியென்றால், என்னுடைய தொழிலில் ஈட்டும் வருமானம் முழுவதையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவேன் ஃபாதர்என்று சொன்னான்.

ஃபாதர் சேகரன் சிரித்துக்கொண்டே   “உன்னிடமிருந்து இந்தப் பதில் நான் எதிர்பார்த்ததுதான் ராஜா. ஆனால், இங்கே நிறைவாழ்வு பெற இயேசு ஒன்றல்ல, இரண்டு தகுதிகளைக் குறிப்பிடுகிறார். முதல் தகுதி, தனக்குள்ளதை இல்லாதவர்களுக்குத் தருவது; இரண்டாவது, இயேசுவைப் பின்பற்றுவது. இயேசு சொன்னபடி உன்னிடத்தில் இருப்பதை எல்லாம் நீ ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு இயேசுவை எப்படிப் பின்பற்றப் போகிறாய்? உன் வாழ்க்கையை எப்படி நீ அமைத்துக்கொள்ளப் போகிறாய்?” என்று கேட்டார்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு  “சாரி ஃபாதர், இயேசு தாம் பணிபுரிந்த காலத்தில் இறையரசுக்கு உட்பட்டவர்கள் எத்தகைய அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று போதித்து வந்தார் என்பது தெரியும். அதோடு தாம் வாழ்ந்த யூதச் சமூகத்தில் இருந்த அநீதிகளை எதிர்த்துப் போரிட்டார் என்பதும் தெரியும். ஆனால், இந்தியாவில் இன்றைய சூழலில், இயேசுவைப் பின்பற்றி ஒரு வாலிபன் எத்தகைய வாழ்க்கை வாழ வேண்டும் என்று இதுவரை நான் சிந்தித்துப் பார்த்ததில்லை. நீங்க எனக்கு வழிகாட்டக் கூடாதா ஃபாதர்என்று கேட்டான்.

ஆர்வத்துடன் தன்னை நோக்கிய அவனிடம், “அன்று இயேசு வாழ்ந்த சூழ்நிலைக்கும்நாம் வாழும் இன்றைய சூழ்நிலைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. யூதேயாவில் அன்று எப்படி மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்காக என்று சொல்லி மக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து எக்கச்சக்கமான வரி வசூலிக்கப்பட்டு வந்ததோ, அதேபோலதான் இன்று இந்தியாவிலும் தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தகவல்தொடர்புச் சாதனங்கள் வழியே தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரம் செய்து சாமானியர்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து ஏராளமான வரிகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. அடித்தட்டு மக்கள் சுரண்டப்படுகின்றனர். எப்படி அன்று யூதச் சமுதாயத்தில் மனித மாண்பு காப்பாற்றப்படப் போராடிய கிறிஸ்துவை, யூத ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்யூத மதத்திற்கு எதிரானவர்என்று பிரச்சாரம் செய்து, மக்கள் மனத்தில் நஞ்சை விதைத்து வந்தனரோ, அதே போலதான் இன்றைக்கு இந்தியாவில் சாதாரண மக்களைப் பாதிக்கும் முடிவுகளை எடுக்கும் தீய சக்திகளுக்கு எதிரான பிரச்சாரங்களை, போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோர் தேசத் துரோகிகளாகக் காண்பிக்கப்படுகின்றனர்; கொடுமைப்படுத் தப்படுகின்றனர்.                                                      

சரி, நீ ஆலயத்துக்குப் போய் நற்கருணைக்கு முன்னாடி அமைதியா கொஞ்ச நேரம் இருந்து சிந்திச்சுட்டு வா; உன் வாழ்வில் நீ எதிர்கொள்ளும் சவாலுக்கான தீர்வை நீயே முடிவு செய்வதுதான் நல்லது. நீ போயிட்டுத் திரும்பி வர்றவரைக்கும் நான் இங்கேயே மாதாகிட்ட வேண்டிக்கிட்டு இருக்கிறேன்என்று சொல்லி ராஜாவை அனுப்பி விட்டுக் கெபிக்கு அருகில் சென்ற ஃபாதர் சேகரன், ராஜாவுக்குத் தெளிவைப் பெற்றுதர மாதாவிடம் வேண்டிவிட்டுத் திரும்பியபோது ராஜா வந்தான்.

தன் துறுதுறு கண்களில் பளிச்சிடும் மகிழ்ச்சியோடு வந்த ராஜாவை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஃபாதர் சேகரனிடம் ராஜாநான் எப்படிக் கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ்வது என்று யோசித்துப் பார்த்தேன் ஃபாதர். இயேசுவைப்போல மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு நேரில் போதிக்குமளவுக்கு எனக்குத் திறமையோ, அனுபவமோ இல்லை. அதனால், என்னுடைய எழுத்துகள் மூலமாகக் கிறிஸ்தவர்கள் அமைதியானவர்கள், அன்பு செய்பவர்கள் என்பது மட்டுமல்ல, சமூக நீதிக்காக மனித மாண்பைச் சிதைக்கும் தீய சக்திகளுக்கு எதிராகப் போராடத் தயங்காதவர்கள் என்பதே இந்தியக் கிறிஸ்தவர்களின் உண்மையான அடையாளம் என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் சமுதாயச் சிந்தனை மேம்பட முயற்சி செய்வது என்று முடிவு செய்து இருக்கிறேன் ஃபாதர்அதோடு வரப்போகும் தேர்தலில் என்னுடைய அப்பாவுக்குப் பதிலாக அனைவரின் ஆதரவோடு தீய சக்திகளுக்கு எதிராக நான் தேர்தலில் போட்டியிட்டு வென்று, நல்லவர்களோடு கைகோர்த்து நல்லதோர் எதிர்காலத்தை இந்த நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தித் தர விரும்புகிறேன்என்று சொல்லிவிட்டு சிரித்தபடியே, “நான் மத்தேயுவின் வாலிபனா இல்லையா ஃபாதர்?” என்று கேட்ட ராஜாவுக்கு, எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல் ராஜாவையே பார்த்துக்கொண்டு நின்றார் ஃபாதர் சேகரன்.

Comment