No icon

(நவம்பர் 26) கிறிஸ்து அரசர் பெருவிழா

பொதுக்காலம் 34 ஆம் ஞாயிறு (எசே 34:11-12, 15-17, 1கொரி 15:20-26,28; மத் 25:31-46)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். ‘கடவுள் நிலையில் இருந்த அவர் நமக்காக அடிமையானார்என்று திருவிவிலியத்தில் வாசிக்கின்றோம். நமக்காக அனைத்தையும் துறந்தவரை நாம் எதற்காகப் பேரரசர் என்று அழைக்க வேண்டும்? இதற்கான காரணம் என்ன? முதல் உலகப்போர் முடிவுற்ற நேரத்தில், உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, ‘எங்கள் நாடு தான் சிறந்தது, நாங்கள்தான் உயர்ந்தவர்கள், வலிமையானவர்கள்என்று கூறி, மீண்டும் போர் மற்றும் வன்முறையை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்தார்கள். இத்தருணத்தில்தான் திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்கள், ‘மனித சக்திகளுக்கும், அதிகாரங்களுக்கும் ஓர் எல்லையிருக்கிறது; ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் எல்லையில்லை; ஏனெனில், அவர் பேரரசர், அரசர்களுக்கெல்லாம் அரசர். முடிவில்லா ஆட்சி புரியும்  இப்பேரரசரில் நம்பிக்கை கொண்டு இவரைக் கொண்டாடி வழிபடுவோம்என்று 1925-ஆம் ஆண்டு தனது சுற்று மடல் வழியாகச் சிதறிச் சென்ற மக்களை மீண்டும் ஒன்றுசேர்த்தார். இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அன்றிலிருந்து இன்றுவரை கிறிஸ்து அரசர் பெருவிழாவினை நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். அமைதியின் அரசராம், இரக்கத்தின் அரசராம், அன்பின் அரசராம் கிறிஸ்து அரசரின் ஆட்சியில் பங்கு பெற்றிட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரே தம் மக்களுக்கு ஆயனாய் இருக்கிறார். ஓர் ஆயன் தன் மந்தைகளை ஒன்று சேர்த்து, காத்து வழிநடத்துவது போல, ஆண்டவரும் தாம் தேர்ந்தெடுத்த மக்களை வழிநடத்தி வருகிறார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆதாம் வழியாக இவ்வுலகில் சாவு நுழைந்தது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக இவ்வுலகிற்கு உயிர்ப்பு வந்தது. கடைசி பகைவனான சாவை வென்ற ஆண்டவர் இயேசுவே இவ்வுலகின் அரசர் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

அனைத்துலகோரின் ஆண்டவரே! உம் திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள், தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயர்கள் என்பதை உணர்ந்து, உமது அரசைத் தங்கள் சொல்லாலும், செயலாலும் இவ்வுலகில் விதைத்திடும் ஆற்றல் பெற்றிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அரசருக்கெல்லாம் அரசரே! உலக நாடுகளை ஆளும் தலைவர்கள், போர் மற்றும் வன்முறைகள் மூலம்யார் பெரியவர்?’ என்று எண்பிக்க முயல்வதைக் கைவிட்டு, உம் திருமகன் கிறிஸ்து ஒருவரே பேரரசர் என்பதை உணர்ந்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கமுள்ள தந்தையே! எங்கள் குடும்பங்களில், எங்களின் அதிகாரங்களை மற்றவர்கள்மீது திணித்து அடக்கி ஆளாமல், ஒருவரை ஒருவர் அன்பு செய்து பணிவோடும், மனமகிழ்வோடும் வாழ வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் அன்புத் தந்தையே! நாடுகளில் பெருகி வரும் மத வெறுப்புப் போக்குகள் குறையவும், உம் திருமகன் இயேசுவைப் போல நாங்கள் அனைவரையும் சமமாக மதித்து, அன்பு செய்து வாழ வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment