No icon

தூய ஆவியார் பெருவிழா (19-05-2024)

திப 2:1-11; கலா 5:16-25; யோவான் 15:26-27,16:12-15

திருப்பலி முன்னுரை

இன்று நாம் தூய ஆவியார் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இன்று நமது தாயாம் திரு அவை, தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றது. ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு வாக்களித்தது போல, தாம் உயிர்த்தெழுந்து, விண்ணகம் சென்ற ஐம்பதாவது நாளில் தூய ஆவியானவரைத் தமது சீடர்கள்மீது பொழிகிறார். தூய ஆவியானவரைப் பெறுவதற்கு முன்பு, சீடர்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள யூதர்களுக்கும், உரோமையர்களுக்கும் பயந்து ஓடினார்கள். ஆண்டவர் இயேசுவை மறுதலித்தார்கள். மீன்பிடித் தொழிலான தங்கள் பழைய வேலைக்கே திரும்பினார்கள். ஆனால், எப்போது தூய ஆவியானவரைத் துணையாளராகப் பெற்றார்களோ, அந்நேரம் முதலே ஆண்டவர் இயேசுவுக்காகவும், அவரின் நற்செய்திக்காகவும் எத்தகைய சாவையும் எதிர் கொள்வதற்கு எந்நேரமும் தயாராய் இருந்தார்கள். அந்த அளவிற்குத் தூய ஆவியானவர் சீடர்களைத் திடப்படுத்தி, உறுதிப்படுத்தி வழிநடத்தினார். உண்மையை வெளிப்படுத்துபவர் தூய ஆவியானவர். இயேசு கிறிஸ்து என்னும் உன்னதமான உண்மையை இவ்வுலகின் கடையெல்லை வரை வெளிப்படுத்த சீடர்களுக்குத் துணையாய் இருந்தவர் தூய ஆவியானவர். இப்பெருவிழாவிலே தூய ஆவியாரின் துணையை நாமும் வேண்டுவோம். நமது தாயாம் திரு அவையைத் தூய ஆவியானவர் தொடர்ந்து வழிநடத்தவும், இயேசு கிறிஸ்து என்னும் உண்மையை உலகிற்கு உரக்கப் பறைசாற்ற வரம் வேண்டியும் இப்பெருவிழா திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

பெந்தகோஸ்தே நாளிலே தூய ஆவியானவர் நெருப்புப் போன்ற நாவடிவிலே சீடர்கள் மேல் இறங்கி வர, அவர்கள் பறைசாற்றிய நற்செய்தியைப் பல மொழிகள் பேசும் மக்களும் தெளிவாய்ப் புரிந்து கொண்டார்கள் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தூய ஆவியாரின் துணையாலே நாம் வாழ முடியும். தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப நாம் வாழ்கிறபோது நாம் இறையாட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்கிறோம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

அப்பா தந்தையே! இப்பெந்தகோஸ்து பெருவிழாவிலே, தனது பிறந்த நாளைக் கொண்டாடும் உமது திரு அவை, தூய ஆவியாரின் கொடைகளையும், கனிகளையும் உமது திருப்பணியாளர்கள் வழியாக உமது மக்கள் அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அருமை நேசரே! உலகை ஆளும் தலைவர்கள் அநீதிக்கும், வன்முறைகளுக்கும் துணை போகாமல், உண்மையை உணர்த்தும் தூய ஆவியானவரின் வழி நின்று மக்களை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அற்புதங்கள் புரிபவரே! நாங்கள் பல குடும்பங்களாக இருந்தாலும், இப்பங்கின் இறைமக்கள், தூய ஆவியாரின் ஆலயங்கள் எனும் எண்ணத்தோடு வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமையோடு வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்களைப் படைத்தவரே!  பல சபைகளாகப் பிரிந்திருக்கும் நாங்கள், உமது தூய ஆவியாரால் இணைக்கப்பட்டு, மீண்டும் ஒரே கத்தோலிக்கத் திரு அவையின் மக்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment