No icon

ஊரடங்கும்குழந்தை திருமணங்களும்

ஊரடங்கும்குழந்தை திருமணங்களும்

ஜெசிந்தா ஜான்சன்

கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலை கேள்விக்குறியாகியுள்ளது. வாழ்வாதாரமின்றி அவர்கள் சிரமப்படுகின்றனர். மாணவர்களும் படிக்கும் மனநிலை மாறி குழந்தை தொழிலாளர்களாகி வருகின்றனர். தொலைகாட்சியிலும், தொலைபேசியிலும், இணையவலையிலும் முழ்கி நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கின்றனர். ஆன்லைன் வகுப்புகளுக்கு அழைத்தாலும், தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொண்டாலும், சில மாணவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. சில மாணவிகளுக்கு திருமணமாகிவிட்டது என்ற தகவலையும் சில ஆசிரியர்கள் வழி கேட்கும் போது மனது பதைபதைக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் 40ரூ வரை அதிகரித்திருப்பதாக Child Right % Youth (CRY)) அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுவரும் தொண்டு நிறுவனமான CRY

 இத்தகவலை சார்ந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அவை முறையே,

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 19 வயதுக்கு கீழ் உள்ள 8.69% பெண் குழந்தைகள் திருமணமானவர்கள். குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக தர்மபுரியில் 11.9% , சேலத்தில் 10.9% , 19 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் திருமணமானவர்களாக இருந்தனர். 2020 ஆம் ஆண்டில் சேலம், தர்மபுரி, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களிலும் குழந்தை திருமணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியினர் வசிக்கும் 71 தொகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடப்பதாக CRY அமைப்பு தெரிவித்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் 318 குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக CRY அமைப்பு தெரிவிக்கிறது. சேலம் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் 60 குழந்தை திருமணங்கள் நடைபெற்றிருந்த நிலையில் 2020 மே மாதத்தில் அது 98 ஆக அதிகரித்துள்ளது. தர்மபுரியில் 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் 150 குழந்தை திருமணங்கள் நடைபெற்ற நிலையில் அது 2020 மே மாதத்தில் 192 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில்….

உலகில் நடைபெறும் குழந்தை திருமணத்தில் 1/3 இந்தியாவில் நடைபெறுகின்றது. குழந்தை திருமணத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பங்களிப்பு என்பது உலக அளவில் 33% இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய அளவில் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடைபெறுவதாகவும் நகர்ப்புறங்களில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவிக்கிறது.

தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பின்படி குழந்தை திருமணத்திற்கான காரணங்கள்

1. பல நூற்றாண்டுகளாக வேரூன்றியிருக்கும் பாலின சமத்துவமின்மை, பாரம்பரியம் மற்றும் வறுமை ஆகியவையும்

2. குழந்தை வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் குறைந்த அளவு மட்டும் வரதட்சணை கொடுத்தால் போதும் என்ற பெற்றோரின் மனநிலையும்

3. பொது முடக்க காலத்தில் திருமணத்திற்கு ஆகின்ற செலவு 10,000 முதல் 20,000 வரை மட்டுமே இருப்பதாலும்

4. கல்வியறிவின்மையும் குழந்தை திருமணம் பெருக முக்கிய காரணமாகிறது.

நியூஸ் 360….

31.05.2021 அன்று மதியம் ‘புதிய தலைமுறை’யில் இடம் பெற்ற ‘நியூஸ் 360’ நிகழ்ச்சியில் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், மருத்துவர் கார்த்தி மருதநாயகம் குழந்தை திருமணங்கள் குறித்து பேசிய கருத்துக்கள், மற்றும் சமூக நலத்துறை அமைச்சரின் முடிவுகள், இதோ மனித உரிமை ஆர்வலர் திரு. ஹென்றி திபேன் கூறும் போது…குழந்தை திருமணங்கள் மிகக் கொடூரமான குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் என்கிறார். இதனை தடுத்து நிறுத்த சட்டம் மட்டும் போதாது, ஒவ்வொரு மனிதனுக்கும் இதில் பொறுப்பு உண்டு. மனித உரிமைக் கல்வியை பள்ளிக் குழந்தைகளுக்கு பாடமாக நடத்த வேண்டும். மாவட்ட Child Protection Unit, Child Welfare, காவல் துறை என பல தரப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். இதில் பணியாற்றும் ஊழியர்கள் 1 வருட கான்ட்ராக்டர்களாக இருக்கின்றனர். அவர்கள் நிரந்தர பணியாளர்களாக அமர்த்தப்பட வேண்டும்.

மருத்துவர் கார்த்தி மருதநாயகம் பேசும் போது…:

“பெற்றோர்களே குழந்தைகள் உங்கள் மூலமாகவந்தவர்கள், உங்களிடமிருந்து வரவில்லை” என்ற கலீல் ஜிப்ரானின் வரிகளை மேற்கோள் காட்டி பேசத் துவங்கிய மருத்துவர், பெற்றோர்கள் குழந்தைகளை தங்கள் சொத்தாக, படைப்பாக பார்க்கின்றனர். குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்ற மனப்பான்மையில் பெற்றோரே எல்லா முடிவுகளையும் எடுக்கின்றனர். அப்பா நல்லது தான் செய்வார் என குழந்தைகளும் நம்புகின்றனர். பெண் குழந்தைகள் திருமணம் செய்து கொடுத்துவிட்டால், தனது பொறுப்பு முடிந்து விடும் என பொறுப்பு துறப்பு நிலையை விரைவில் அடைய பெற்றோர் நினைக்கின்றனர். வாக்குறுதி கொடுத்துவிட்டேன், அப்பா அல்லது தாத்தாவுக்கு உடல் நலம் சரியில்லை என தங்கள் இயலாமையை அழுத்திக் கூறி சிறு பிள்ளைகளை இதற்கு பணிய வைக்கின்றனர் என்றார்.

பாதிப்புகள்…

வளரிளம் பருவத்தில் தான் ஆளுமை, உடல் மன வளர்ச்சிகள் நடைபெறுகின்றன. சமூகத்தோடு பேசுவது, பழகுவது எப்படி? எது நல்லது? எது கெட்டது என தெரிந்து கொள்ளும் பருவமிது. தவழும் குழந்தையை ஓடச் செய்வது போல, தன்னையே அறியாத குழந்தையின் தலையில் குடும்ப பொறுப்புகளை சுமத்துவது அளவுகடந்த சிக்கலை ஏற்படுத்தும். இது மன உளைச்சல் மற்றும் உளவியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். குழந்தை மகப்பேறு என்பது மிகவும் ஆபத்தானது என்றார்.

இதனை தடுக்க:

* இத்தகைய பிரச்சனைகள் உள்ள குழந்தைகளை காப்பகங்களில் வைத்து, திருமண வயது வரை பராமரிக்கலாம்.

* இதில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டு சிறை 2,00,000 ரூபாய் அபராதம் விதிக்கலாம்.

* பெற்றோரின் பொருளாதார சிக்கலை சரி செய்ய வேண்டும்

* குழந்தைகளுக்கு மனநலம், உடல்நலம், கல்வி மிக அவசியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

* குழந்தை திருமணத்தை தடுக்கும் மக்கள் இயக்கம் மாணவியர் இயக்கம், பள்ளி அளவில் கிராம அளவில் அமைத்து, பழைய மாணவர்களையும் இதில் இணைந்து செயல்படலாம்.

* சட்டம், அதிகாரிகள் மட்டும் இதை செய்தால் மாற்றம் வர தாமதமாகும் என்றார். 31.05.2021 அன்று, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

* மெத்தனமாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணியிடை மாற்றம் செய்யப்படுவர் என்றார்.

* குழந்தை திருமணத்தை நடத்துவோர் மட்டுமின்றி, பங்கேற்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

* மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை, அதில் கல்வி இடைநிற்றல் எத்தனைபேர் இது போன்ற விழிப்புணர்வை அந்தந்த பகுதியில் ஏற்படுத்த வேண்டுமென்று காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

Comment