No icon

மாலை நேரத்து நிழல்

குஜராத்- இமாச்சல் தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் மாலைநேரம். வெயில்பட்ட நிழல் நீளும் நேரமும் மாலைநேரம். சூரியன் மறைந்ததும் அந்த நீண்ட நிழலும் மறைந்து போகும்.

குஜராத் - இமாச்சல் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கான நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குஜராத்தில் பாஜகவும் இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரசும் ஆட்சியைப் பிடித்துள்ளன. குஜராத்தில் தொடர்ந்து ஏழாவதுமுறையாக 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில்  பாஜக இமாலய வெற்றிப் பெற்றுள்ளது. ஆனால், இமாலயத்திலோ 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் வெற்றிப் பெற்று பாஜகவை அகற்றி, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆம் ஆத்மி இமாச்சலில் 1.1 சதவீத வாக்குகளைப் பெற்று 0 இடத்திலும், குஜராத்தில் 12.9 சதவீத வாக்குகளைப் பெற்று 5 இடங்களிலும் வெற்றிப்பெற்று ஒரு தேசியக் கட்சியாக தகுதி உயர்ந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் 77 தொகுதிகளில் அமோக வெற்றிப் பெற்ற காங்கிரஸ், இத்தேர்தலில் வெறும் 17 இடங்களில் மட்டும் வெற்றிப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்த்தையும் இழந்துள்ளது. குஜராத் தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட ஆம் ஆத்மி ஐந்து இடங்களில் வெற்றிப்பெற்று பேரூக்கம் பெற்றுள்ளது.

நடைபெற்று முடிந்த குஜராத் தேர்தல் தேசிய அளவில் மிகுந்த கவனத்தைப் பெற்றது. 2024 இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக குஜராத் தேர்தல் பார்க்கப்பட்டது. இமாச்சல் பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், குஜராத்திலோ ஐந்து கட்டங்களாக சிலருக்கு நல்வாய்ப்பைக்கொடுத்து தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உறுதுணை இதனால் மிகத்தெளிவாக மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. எல்லா நிலையிலும் இந்துத்துவா வெயிலின் உக்கிரம் மிகவும் கொடூரமாகவே இருந்தது. உலகையே உலுக்கிய மோர்பி பாலம் விபத்து நடைபெற்ற மாவட்டத்தில் 141 பேரை இழந்ததுப் பற்றி எந்த சலனமும் இல்லாமல் வாக்காளர்களின் அமோக ஆதரவைப் பெற்று இத்தொகுதியின் பாஜக வேட்பாளர் காந்தி லால் 1.13 இலட்சம் வாக்குகளைப் பெற்று பாஜக அமோக வெற்றிப் பெற்றுள்ளது. பாஜகவின் மாலை நேரத்து நிழல் மிகப் பெரிதாகவே தோன்றுகிறது.

காங்கிரஸ் கட்சியின் உற்சாகமின்மையும் தலைமைத்துவமின்மையும் ஒருங்கிணைப்பின்மையும் குஜராத்தில் 2017-ல் வெற்றிப் பெற்ற 77 தொகுதிகளிலிருந்து தற்போது வெறும் 17 தொகுதிகளாக மாறியுள்ளது. காங்கிரசின் மாலை நேரத்து நிழல் மறைவதற்கான அறிகுறி தென்படுகிறது. அரசு இயந்திரம் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் முழுப்பலத்துடன் முடக்கிவிடப்பட்டது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் குஜராத்திற்கு இரண்டு இலட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டது. ஒருபுறம் இலவசங்களுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் கொடுத்துக்கொண்டே, தேர்தல் தேதி அறிவிக்கப்படும்வரை பல்வேறு இலவசங்கள் அறிவிக்கப்பட்டன. அதற்காகவே காலதாமதத்துடன் தேர்தல் தேதி ஐந்து கட்டங்களாக பிரதமரின் பிரச்சாரப் பயணத்திற்கேற்ப அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி, குஜராத்தில் உள்ள எதிர்க்கட்சிகளையும் உதிரிக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து வலிமையான கூட்டணி அமைக்கவில்லை.

பாஜகவின் நீட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சி, மிகுந்த வலிமையுடன் களமிறங்கியது. பஞ்சாப்பைத் தொடர்ந்து, இங்கும் கால்பதிக்க பிரயத்தனம் செய்தது. அவ்வகையில் வெற்றியும் பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 0.1 சதவீதத்திலிருந்து 12.9 சதவீதமாக வாக்கு வங்கியை உயர்த்தி நிற்கிறது. காங்கிரசோ தன் வாக்கு வங்கியை 44 லிருந்த 27 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பழங்குடி மக்களின் வாக்கு வங்கியை காங்கிரஸ் கட்சி பலமாக இழந்துள்ளது. பட்டேல் சமூகத்தின் தலைவராக காங்கிரசில் இருந்த ஹிர்திக் பட்டேல் பாஜகவில் ஐக்கியமாகி, இட ஒதுக்கீட்டின் காரணமாக பாஜக மீது வெறுப்பில் இருந்த இச்சமூக வாக்கை மீண்டும் தக்க வைத்து, பாஜக அமோக வெற்றிப் பெற பேருதவி செய்துள்ளார். இவரும் விராம்காம் தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார்.

‘ஒரே நாடு! ஒரே தேர்தல்!’ என்று ஓர்மையை வலியுறுத்தும் பரிவார வகையறாக்கள், குஜராத்தில் குஜராத்திகளின் மத உணர்ச்சியைவிட இன உணர்ச்சியைத் தூண்டி, அதனை வாக்குகளாக அறுவடை செய்துள்ளது. பொருளாதாரத்திற்கு அம்பானி - அதானி என்றால், அரசியலுக்கு மோடி - அமித் ஷா என்று குஜராத்திய உணர்வைத் தூண்டியது. ஆகையால்தான் ஜி20 நாடுகளுக்கான தலைமை இந்தியாவிற்கு சுழற்சிஅடிப்படையில் வழங்கப்பட்டதை, மோடிக்கு வழங்கப்பட்டதாகவே சித்தரித்து, ஒருவேளை மத்திய தலைமை தகர்ந்தால், அது குஜராத்திகளுக்கு அவமானம். மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமான இத்தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது மிகவும் அவசியம் என்ற அடிப்படையில் நான்கு தொகுதிகளுக்கு ஒரு பிரச்சாரக்கூட்டம் என்று மோடி பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அவரது சாலைப் பிரச்சாரமும் நடைப்பிரச்சாரமும் திட்டமிட்டு தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டது. உலகில் வாக்குச் சாவடிக்கு இரண்டரை மணிநேரம் நடையாக நடந்து வாக்களித்த ஒரே வாக்காளர் மாண்புமிகு பிரதமர் மட்டுந்தான் என்றளவுக்கு விதிமுறை மீறலுக்கு அனுமதிக்கப்பட்டது. பாஜக மொழியில் வனவாசிகளாக இழிவுப்படுத்தப்பட்ட பழங்குடி மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் அவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியிலிருந்துதான் நல்ல வேஷம் கட்டி தன் முதல் பிரச்சாரத்தையே மோடி முன்னெடுத்தார். தன்னை இழிவுப்படுத்தியதாக துவேசப் பிரச்சாரம் செய்து அனுதாப வாக்குகளைக் கவர்ந்தார். குஜராத்திகளின் தேசியத்தலைமையை (G-20) உலகத் தலைமையைப் பற்றி பெருமைப் பேசி அதற்கு பங்கம் விளைவிக்கக் கூடாது என்று ஒரே நாட்டுக்கொள்கைக்கு எதிராகப் பேசினார். பத்து நாள்கள் தன் பிரதமர் பதவியை மறந்து, மாறி மாறி உடையணிந்து, மாறி மாறி பிரச்சாரம் செய்து, ஓட்டமும் நடையுமாக ரோடு ஷோ நடத்தி ஒரே அமர்க்களப்படுத்திவிட்டார். அவர் தேர்தல் விதிமுறைகளை மீறியது பற்றி தேர்தல் ஆணையம் மறந்தும் வாய்திறக்க வில்லை. ஆகையால்தான் என்னவோ, வெற்றிச் செய்தி கேட்டவுடனே தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்ற பிரதமர் திருவாய் மலர்ந்தார்.

காங்கிரசின் இயலாமையும் முதல்வர் வேட்பாளராக ஒருவரை முன்மொழிந்து திறம்பட செயல்படாமையும் தலைவர்களுக்கிடையேயான ஒத்துழைப்பின்மையும் பாஜகவிற்கு பலம் சேர்த்தது. ஆம் ஆத்மி வாக்குகளைப் பிரித்ததும் பாஜகவிற்கு சாதகமாகியது. ஆகையால்தான் ஏழாவது முறையாக தொடர்ந்து அவர்களால் ஆட்சியை தக்க வைக்க முடிந்தது. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரசின் வெற்றி ஆறுதல் தந்தாலும் இந்த ஆறுதல் மாலை நேரத்து வெயிலைப் போல நீண்ட நேரம் நீடிக்காது. ஆம் ஆத்மி குஜராத்தில் பெற்ற வெற்றியின் மூலம் ஒரு தேசியக் கட்சியாக தகுதி உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிப் படி டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் மாநிலங்களில் கணிசமாக வாக்கு சதவீதத்தைப் பெற்று மாலை நேரத்து வெயிலைப் போல பிரமாண்டமாகத் தோன்றுகிறது.

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் சொந்த மாநிலமான இமாச்சலில் பாஜக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்ததும், டெல்லி கிழக்கு மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றதும், உத்தரப் பிரதேச மெயின்புரி மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் வெற்றியும் கதாலி தொகுதியில் ராஷ்டிரிய லோக் தளத்தின் வெற்றியும் மாலை நேரத்து வெயிலைப் போல பிரமாண்ட நம்பிக்கையின் நீட்சிதான். இடைத்தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான் சர்தார்சாகர் மக்களவைத் தொகுதியிலும், சத்தீஸ்கர் பானுபிரதாப்பூர் மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றிப் பெற்றதும் நம்பிக்கையைத் தருகிறது. பாஜகவின் வெற்றி நீண்ட நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை. பாஜக பலமாக உள்ள உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத்தைத் தவிர ஏனைய அனைத்து மாநிலங்களிலும் அதனை வீழ்த்துவது மிக எளிது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒருமித்த வியூகம் அமைத்து சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தால் நிச்சயம் வெற்றிப் பெற முடியும். திருவிவிலியத்தில் மாலை நேரம் என்பது அவநம்பிக்கையின் நேரம். மாலைநேரத்தில் அறிவிக்கப்பட்ட குஜராத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பின்மைக்கு அவநம்பிக்கையாக இருந்தாலும், இமாலய இமாச்சல் வெற்றியும் இடைத்தேர்தல் வெற்றியும் நமக்கு நம்பிக்கையைத் தருகிறது.

கோத்ரா - பில்கீஸ் பானுவின் வருத்தம் தோய்ந்த இந்த மண்ணில், காந்தி பிறந்த இந்த மண்ணில் இனியும் மதவெறி தொடரக்கூடாது. ஓர் உயர்நிலை கண்காணிப்பு மிகவும் அவசியம். ஜிக்னேஷ் மேவானி போன்ற ‘திருமா’க்கள் மாநிலத்திற்கு ஒன்றாக தோன்ற வேண்டும்; வளரவேண்டும். மனிதம் மரிக்காமல், மதவெறி தலைதூக்காமல் இந்திய இறையாண்மையைக் காக்க வேண்டும். மாலை நேரம் கடந்து, பாஜகவின் குதிரை பேர இருள் ஒழிந்து, இன்னொரு ஜனநாயக உதயத்திற்காக அனைவரும் உழைப்போம்; காத்திருப்போம்.

Comment