No icon

ஆசிரியர் பக்கம்

கல்வியும், காமராஜரும்

“அரசியல் சமுதாயத்தின் இன்றியமையாத அங்கம்!

அதை சேவையென செய்வோர் தேசத்தின் தங்கம்!”

பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தவர். ஐந்து முறை சட்டமன்றம் சென்றவர். நான்குமுறை நாடாளுமன்றம் கண்டவர்ஒன்பது ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி வகித்தவர். அகில இந்தியக் காங்கிரசின் தலைவராக ஐந்தாண்டுகள் அரசோச்சியவர். இந்தியப் பிரதமர்களை இரண்டு முறை உருவாக்கியவர். இரண்டு முறை தேடி வந்த இந்தியப் பிரதமர் பதவியை உதறித் தள்ளியவர்போன்ற பெருமைகளுக்கு உரியவர் கர்ம வீரர் காமராஜர். இவர் கண்மூடிய பிறகு, பணி வாழ்வில் அவருக்கென்று மிஞ்சியது வெறும் அறுபது ரூபாயும், பத்துக் கதர் வேட்டி உடைகளுமே.

காமராஜர் கண் மூடினார். அவர் பயன்படுத்திய வாகனத்தைக் கட்சி எடுத்துக்கொண்டது; அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக்கொண்டார்; அவருடைய உடலை நெருப்பு எடுத்துக்கொண்டது; அவரது பெயரை வரலாறு எடுத்துக்கொண்டதுஎனக் குறிப்பிடும் தமிழருவி மணியனின் கூற்று முற்றிலும் உண்மையே.

வரலாற்று நாயகனாய், சரித்திரம் அவருக்கு இடம் கொடுக்கக் காரணம் என்ன? அவர் தேசத்தின் தங்கம்! கல்விக்காக... ஏழை மாணவர்களுக்காக... இலவசக் கல்வித் திட்டத்திற்காக... மதிய உணவு வழங்கும் திட்டத்திற்காக வரலாறு அவரை மறக்காது. ஏனோ மனித மனங்கள் மறந்துவிட்டன?

கடையனுக்கும் கடைத்தேற்றம்என்ற ரஸ்கினின் கூற்றைப்போல, அடித்தட்டு நிலையில் பொருளாதாரமின்மையால் வாடும் ஏழை-எளியோருக்குக் கல்வி என்றும், அனைவருக்கும் இலவசக் கல்வி என்றும், சூரியக் கதிர்களை இந்த இருண்ட சமூகத்தினிடையே பாய்ச்சிஅறியாமை இருளகற்றி விடியலைத் தந்தவர், எதிர்கால வளமான இந்தியாவைக் காண, அன்றே மாணவர் விழிகளில் அறிவொளியைத் தந்தவர் காமராஜர்.

படிக்க ஒரு சாதியும், படிப்பு சொல்லிக் கொடுக்க ஒரு சாதியும் எனக் கல்விசாதிய விலங்குகளுக்குள்பூட்டப்பட்டுக் கிடந்தபோது, தந்தை பெரியாரின் கொள்கையை அடியொற்றி ஊர்கள்தோறும், கிராமங்கள் தோறும் கல்விப் பாடசாலைகளை அமைத்தவர் காமராஜர். நிலை குலைந்த தமிழர்களைத் தட்டியெழுப்பி, உணர்ச்சியூட்டி, அவர்களுக்குத் தன்மான உணர்வும் ஊட்டியவர் இவர். தமிழ் மக்களைப் படித்தவர்களாகவும், பண்டிதர்களாகவும் உருவாக்கிய பெருமை இவரையே சேரும். சுருக்கமாகச் சொன்னால், தந்தை பெரியாரின் பிரச்சாரத்தைச் சட்ட வடிவமாக்கியவர் காமராஜர்.

தமிழையும், தமிழ்மொழி இலக்கியத்தையும், தமிழர் நல் வாழ்வையும், தமிழர் தன்மானத்தையும் அடகு வைக்க ஆசைப்பட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் தமிழினத் துரோகிகள், காமராஜரின் எண்ணவோட்டங்களை இன்று சற்றே அசை போட்டுப் பார்க்க வேண்டும்.

உலக அரங்கில் மருத்துவத் துறையிலும், பொறியியல் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், கணிதத் துறையிலும், விண்வெளி ஆராய்ச்சித் துறையிலும், வேளாண்மைத் துறையிலும், இன்றைய கணினியுகத் துறையிலும் கொடிகட்டிப் பறப்பவன் தமிழன். தமிழனின் அறிவு வளர்ச்சியும், அதன் வேகமும் அளப்பரியது. இத்தலைமுறையை, இத்தமிழினத்தை வளர விட்டால் ஆபத்து என்று உணர்ந்ததாலேயே இன்று நம்மீது ஏகப்பட்ட எதிர்வினை அம்புகள்  தொடுக்கப்படுகின்றன. ஆங்கில மோகம், மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு என எல்லாமும் திணிக்கப்படுகின்றன.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடு அல்ல மற்றவை’ (குறள் 400)

என்றார் ஐயன் வள்ளுவர். ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே என்றும், ஏனைய மண் -பொன் முதலிய செல்வங்கள் அழியக்கூடியவை என்பதால், அவை செல்வங்கள் ஆகாது என்றும் மொழிந்த வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, எல்லாச் செல்வங்களுக்கும் மேலானது கல்விச் செல்வம் என்பதையும், உலகில் அழிக்க முடியாத செல்வமும் அதுவே என்பதையும் நாம் உணர வேண்டும்.

கல்வி வியாபாரமாக்கப்பட்ட இந்தச் சமூகச் சந்தையில், கல்வி கற்பது நமது அடிப்படை உரிமை, நமது கடமை என்பதை நாம் புரிந்தாக வேண்டும். தமிழ் நாட்டில் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகள் 37,387; மெட்ரிக் பள்ளிகள் 9,311; நிதியுதவி பெறும் பள்ளிகள் 11,335. ஆக மொத்தம் 58,033 பள்ளிகள் இயங்குகின்றன. இருப்பினும் 80.33% மட்டுமே கல்வியறிவு பெற்ற மாநிலமாக இருக்கின்றோம். இன்னும் தமிழ்நாடு, எல்லாரும் கல்வி பெற்ற மாநிலமாக உருவாகாதது ஏன்?

பள்ளியே ஒரு கோவில்தான்என்றனர் பெரியோர். ‘கோவில்கள் அனைத்தும் கல்விச் சாலைகள் ஆகட்டும்என்றான் பாரதி. பள்ளி கோவிலாகவில்லை, கோவில் பள்ளியாக மாறவில்லை. கல்வியின் நோக்கம் சிதைந்ததால் பள்ளியின் புனிதம் காற்றில் பறந்து போயிற்று.

கல்வி அடிப்படை உரிமைச் சட்டம்ஏட்டளவில் தான் உள்ளதே தவிர, தகுதி வாய்ந்த ஆசிரியர்களும், வகுப்பறை, மின்சாரம், குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கொண்ட பள்ளிகளும், இலவசக் கல்வியும், சுகாதாரமான சூழலும் இன்னும் முழுமை பெறாதது கவலை அளிக்கிறது.

மாநிலங்களின் நிலையை நோக்கும்போது, கேரளத்தை அடுத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்ற பல்லவியைப் பல ஆண்டு காலமாகப் பாடிக்கொண்டிருக்கின்றோம். முதல் மாநிலமாக வராதது ஏன்? இலவசக் கல்வி, கட் டாயக் கல்வி என்ற சட்டத்தை இயற்றியதனால் அரசின் கடமையும், சமுதாயத்தின் பொறுப்பும் முடிந்து விட்டனவா? இது ஒரு தொடக்கம்தான். அனைத்துக் குழந்தைகளுக்கும் வசதி வாய்ப்பையும், பொருளாதார ஏற்ற நிலையையும், ஊக்கத்தையும் கொடுத்தாலே கல்வியில் சிறந்த மாநிலமாய்த் தமிழ்நாடு திகழும். காமராஜரின் கனவு நனவாக மாறும். ஏட்டில் இயற்றிய சட்டங்கள் நாட்டில் நன்மை பயக்கட்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment