No icon

குடந்தை ஞானி

திருப்பீட அமைப்பின் மூன்று உதவி திட்டங்கள்

சிரியா, லெபனான் மற்றும் இந்தியாவில், துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் நோக்கத்தில், மூன்று திட்டங்களை வகுத்து செயல்படுத்த உள்ளது, துன்புறும் திருஅவைகளுக்கு உதவும் எசிஎன் (ACN) எனும் திருப்பீட அமைப்பு.

சிரியாவில், குணப்படுத்த இயலா நோய்களால் துன்புறும் 150 பேருக்கு மருத்துவ உதவிகளை வழங்குதல், லெபனான் நாட்டில் பசியால் வாடும் ஏறத்தாழ 2,500 கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு உணவளித்தல், இந்தியாவில், கோவிட் நோயாளிகளிடையே பணிபுரியும் 190 அருள்பணியாளர்கள் மற்றும் 800 அருள்சகோதரிகளுக்கு உதவுதல், போன்றவைகளை எசிஎன்  (ACN) அமைப்பு அறிவித்துள்ளது.

கிறிஸ்துப்பிறப்பு காலத்திற்குரிய திட்டங்களாக இந்த மூன்றையும் அறிவித்துள்ள எசிஎன் (ACN) உதவி அமைப்பு, இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு நகரில், ஏழ்மை மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடையே பணிபுரியும் 190 அருள்பணியாளர்கள் மற்றும் 800 அருள்சகோதரர்கள் வழியாக உதவிகளை வழங்க திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்றால், உடல் நலத்திலும், பொருளாதார அளவிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள வறியோரின் நிலைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களிடையே பணியாற்றிவரும் அருள்பணியாளர்கள், மற்றும் அருள்சகோதரிகளின் சேவைகளை தொடர்ந்து நடத்த, நிதியுதவி செய்ய உள்ளதாக இவ்வமைப்பு அறிவித்துள்ளது.

10 ஆண்டுகால போர்ச்சூழல்களால், சிரியா நாட்டில், நல ஆதரவுப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குணப்படுத்த இயலா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மருத்துவ உதவிகளை வழங்க துன்புறும் திருஅவைகளுக்கான இத்திருப்பீட அமைப்பு முன் வந்துள்ளது.

நாட்டின் மொத்த மருத்துவமனைகள் மற்றும் நல ஆதரவு மையங்களில், ஏறத்தாழ பாதி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பட்சத்தில், மருத்துவ ஊழியர்களில் 70 விழுக்காட்டினர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துச் சென்றுள்ளதால், 10,000 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்திலேயே மருத்துவர்கள் உள்ளனர் என்பதையும் எசிஎன் (ACN) அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. போதிய மருத்துவ உதவிகள் இன்மையால், சிரியாவில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 15 ஆண்டுகளும், பெண்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளும் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் நாட்டின் 2,500 கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு உணவு உதவிகளை வழங்க உள்ளதாக அறிவிக்கும் எசிஎன் (ACN) உதவி அமைப்பு, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி, தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் இடம் பெற்ற வெடி விபத்தைத் தொடர்ந்து, நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.

லெபனான் நாட்டில் 74 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதாகவும், பொருட்களின் விலை 120 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், ஒவ்வொருநாளும் 20 மணி நேரங்கள் வரை மின்தடை இருப்பதாகவும், கவலையை வெளியிடும் இந்த உதவி அமைப்பு, ஒவ்வொரு ஞாயிறன்றும் திருப்பலிக்குப்பின் குடும்பங்களுக்குத் தேவையான உணவு உதவிகள் அருள்பணியாளர்களால் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தது.

Comment