No icon

குடந்தை ஞானி

வட மாநிலங்களில் தொடர்ந்து தாக்கப்படும் கிறிஸ்தவ ஆலயங்கள்

வட மாநிலங்களில் கிறிஸ்மஸ் விழாக்காலம் தொடங்கிய இரண்டு மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டிருக்கின்றன. வட மாநிலமான ஹரியானாவின் அம்பாலாவில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் கத்தோலிக்க ஆலயத்தில் நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இயேசு கிறிஸ்துவின் சுருபமானது கிறிஸ்மஸ் விழா இரவில் உடைக்கப்பட்டது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிறிஸ்மஸ் இரவில் ஆலய வளாகத்தில் இரண்டு பேர் அங்கும் இங்கும் செல்வதும், பிறகு பேழையை உடைத்து சுருபத்தை உடைப்பதுமான காட்சிகள் சிசிடிவியில் காணப்பட்டன. ஆலய அருள்பணியாளர்கள் அளித்த புகாரின் பேரில் மூன்று நாட்களுக்குப் பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நபர்களை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டனர். ஆனால், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் மதுபோதையில் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் கூறியதன் மூலம் இந்த வழக்கு நீர்த்துப்போகக்கூடும் என்று ஆலய அருள்பணியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

"விசாரணைக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி, அந்த இருவரும் மது போதையில் செயல்பட்டதாகக் கூறி குற்ற வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கிறார். முதலில் நகரில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காகவே இந்த சந்தேக நபர்கள் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், காவல் துறை அவ்வாறு செய்யவில்லை. சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது, இவர்கள் இருவரும் ஏதோ மதுபோதையில் செய்வதுபோல் தோன்றவில்லை. மாறாக செல்போனில் பேசி ஒருவரிடமிருந்து ஆணையைப் பெற்ற பிறகே இதை செய்வதைப்போல் தோன்றுகிறது. நாங்கள் இது போன்ற செயல்களை பொறுத்துக்கொண்டே போனால், நாங்கள் அனைவரும் தாக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே இது சம்பந்தமாக மாநில உள்துறை அமைச்சரையும் அணுக உள்ளோம், தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தை நாடவும் தயங்க மாட்டோம்" என்று தாக்குதலுக்கு உள்ளான ஹோலி ரெடீமர் ஆலயத்தின் பங்குத்தந்தை அருள்பணி. பட்ராஸ் முண்டு UCA  செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

உதவி பங்குத்தந்தை ஆண்டனி சாக்கோ "அந்த இருவரும் ஆலய வளாகத்தினுள் இருந்த இயேசுவின் சுருபம் மற்றும் அலமாரிகளை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தகர்த்துக்கொண்டிருந்ததையும், அவர்களில் ஒருவர் ஆலயத்தின் கதவுகளின் மேல் சிறுநீர் கழித்ததையும் சிசிடிவி காட்சிகளில் காணலாம். எனவே, காவல்துறை இச்சம்பவம் குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறினார்.

Comment