No icon

குடந்தை ஞானி

இந்திய சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வெறுப்புப் பேச்சு

ஒருபுறம் கோவிட் - 19 தொற்றுநோய் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பழிவாங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் மரணபயத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்க, மறுபுறம் இதனையெல்லாம் திசைமாற்றும் அளவிற்கு இவ்வாண்டின் இறுதியில் கிறிஸ்மஸ் தினத்தன்று நடந்த சில சம்பவங்கள் தேசியவாத கும்பல்களால் தாங்கள் படுகொலை செய்யப்படுவோமோ என்ற அச்சத்தை கிறிஸ்தவர்கள் மத்தியில் கேட்க முடிந்ததாக UCAN செய்தி தெரிவிக்கிறது. பாதுகாப்பு கொடுக்கவேண்டியவர்களே கையாலாகாத நிலையில் இருப்பதையும், கைகட்டி அமைதி காப்பதையும் காண முடிகிறது என்று இச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

கிறிஸ்மஸ் தினத்தன்று, சீக்கிய சமூகத்தினரின் குருக்களில் ஒருவரை நினைவுகூர்ந்து நீண்டநேரம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது இடைக்கால முஸ்லீம் பேரரசர்கள் நிகழ்த்திய அட்டூழியங்கள் குறித்து நீண்ட கவனம் செலுத்தினார் என்றும், அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, இந்துத்துவ வன்முறைக் கும்பல், இந்தியா முழுவதும் 16 பெரும் நகரங்கள், மற்றும் சிறு நகரங்களில் கிறிஸ்மஸ் கொண்டாடும் வழிபாட்டுத்தலங்களையும், வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்களையும், கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடிய குழுக்களையும் தாக்கியுள்ளது என்றும் இச்செய்தி நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும், வடக்கில் ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, வடகிழக்கில் அஸ்ஸாம் மற்றும் தெற்கில் கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் இச்செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இத்தகைய தாக்குதல்களால், இந்த ஆண்டு 400-க்கும் மேற்பட்ட தனித்தனி சம்பவங்களுடன், கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறை உச்சத்தை எட்டியுள்ளது என்றும், யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம் என்ற அமைப்பின்படி இந்தத் தாக்குதல்கள் 460 ஆக இருக்கலாம் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இச்செய்தி நிறுவனம் விவரிக்கிறது.

Comment