No icon

குடந்தை ஞானி

வெறுப்புப் பேச்சின்றி மத நம்பிக்கையைக் கடைபிடிக்க வலியுறுத்தல்

இந்திய நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு, இந்திய நாட்டைச் சேர்ந்த புனித குரியாகோஸ் எலியாஸ் சாவராவுக்கு ஜனவரி 3 ஆம் தேதி திங்களன்று மரியாதை செலுத்தினார். மற்ற மதங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சமூகத்தில் பிளவுகளை உருவாக்குகிறது என்று கண்டித்த அவர், நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் தனது மத நம்பிக்கையை கடைபிடிக்க உரிமை உண்டு என்றும் வலியுறுத்தினார்.
புனித குரியாகோஸ் எலியாஸ் சாவராவின் 150வது ஆண்டு நினைவு நாளைக் குறிக்கும் வகையில், கேரள மாநிலம் மன்னானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய துணைக் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அவர்கள், உங்கள் மதத்தைப் பின்பற்றுங்கள், ஆனால், நிந்தனை, வெறுப்பு பேச்சு மற்றும் தவறாக எழுதுவது ஆகியவற்றில் ஈடுபடாதீர்கள்" என்றும் கேட்டுக்கொண்டார்.  
ஒவ்வொரு மாநிலத்தையும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் இருப்பிடமாக மாற்ற முடியும் என்பதையும், சமூகத்தின் ஏழ்மை நிலையில் வாழும் பெண்கள் மற்றும் இளையோரின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டின் வழியாக இதை அடைய முடியும் என்பதையும், புனித  சாவராவின் பணி வாழ்வு நிரூபிக்கிறது என்றும்,  துணைக் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு சுட்டிக்காட்டினார்.
19 ஆம் நூற்றாண்டில் கேரள சமூகத்தின் ஆன்மீக, கல்வி, சமூக மற்றும் கலாச்சார சீர்திருத்தவாதியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட புனித சாவரா, மக்களின் சமூக மறுமலர்ச்சிக்காகப் பெரும்பங்காற்றி உள்ளார் என்று துணைக் குடியரசுத் தலைவர் பெருமிதம் தெரிவித்தார். 
அனைத்துப் பிரிவினரையும் சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஒருங்கிணைத்து, நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு உயர்ந்த தனிநபராக விளங்கிய புனித சாவரா, இன்று நம் ஒவ்வொரு சமூகத்திலும் தேவைப்படுகிறார் என்றும் வெங்கையா நாயுடு எடுத்துரைத்தார்.
 

Comment