No icon

குடந்தை ஞானி

கான்பூரில் மூடப்பட்ட நிர்மலா சிசு பவன் அநாதை இல்லம்

மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி (MC)) சபையானது கான்பூரில் இராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் 1968 ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு எடுத்து அநாதைகள், ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக நிர்மலா சிசு பவன் இல்லத்தை நடத்தி வந்தது. இந்த நிலக் குத்தகை 2019-ல் காலாவதியானது. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் காலாவதியான குத்தகையை புதுப்பிக்காமல் அங்கு அமைந்திருக்கும் அநாதை இல்லத்தை மூடச்சொல்லி இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி (MC)) சபையின் அருள்சகோதரிகள் குத்தகை முடிந்த பிறகும் இராணுவத்திற்கு சொந்தமான இந்த இடத்தை பயன்படுத்தியதால் அவர்கள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகள். எனவே ஒரு கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது.

மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி (MC)) சபையானது நாடு முழுவதும் அதன் தொண்டு பணிகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நன்கொடைகளுக்கான சபையின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) பதிவை புதுப்பிக்க மத்திய அரசு மறுத்ததை அடுத்து வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள இந்த அநாதை இல்லம் மூடப்படுவது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அச்சபையின் தலைமை அருள்சகோதரி பிரேமா கூறியதாவது: எங்களின் FCRA புதுப்பித்தல் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த தவறும் இல்லை என்பதை உறுதிசெய்யும் நடவடிக்கையாக, இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை வெளிநாட்டு பங்களிப்பு கணக்குகள் எதையும் இயக்க வேண்டாம் என்று எங்கள் மையங்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

சபைக்கு நிதி பற்றாக்குறை உள்ளது மற்றும் அதன் தொண்டு பணிகளை தொடர பொதுமக்களின் ஆதரவை நாடி வருகிறோம். சட்டங்களுக்கு பணிந்து இராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள எல்லா உடைமைகளையும் ஒப்படைத்துவிட்டோம்.

Comment