No icon

குடந்தை ஞானி

இந்திய தலித் கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடா?

மதம் மாறியவர்கள் என்பதற்காக தங்களை பட்டியலின வகுப்பிலிருந்து (SC) நீக்கியதற்கு எதிராக பல ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் போராடி வருகிறார்கள். இவர்களை பட்டியலின வகுப்பில் (SC)சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆராய புதிய தேசிய ஆய்வுக்குழுவை அமைப்பது குறித்து இந்திய அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது. புதிதாக முன்மொழியப்பட்டிருக்கிற இந்த தேசிய ஆய்வுக்குழு, பட்டியல் வகுப்பினர் பிற மதங்களுக்கு மாறிய பிறகு சமூகம், பொருளாதாரம் மற்றும் பிற தளங்களில் எதிர்கொள்ளும் பல சிக்கல்களை, பாகுபாடுகளைக் கண்டறியும். பிறகு அதனடிப்படையில் செயல்பாடுகள் தொடங்கும் என்றும், அதே நேரத்தில் சிறுபான்மை சமூக உறுப்பினர்களைப் பட்டியலின வகுப்பில் சேர்ப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் மத்திய அமைச்சர், நீதித்துறை உறுப்பினர் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவித்திருக்கிறது.

தலித் கிறிஸ்தவர்களின் தேசிய கவுன்சிலின் (NCDC)) ஒருங்கிணைப்பாளர் ஃபிராங்க்ளின் சீசர் தாமஸ், UCA  செய்தி நிறுவனத்திடம், "தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் கோரிக்கையான இட ஒதுக்கீடுக் குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க ஏற்கனவே குழு ஒன்று இருக்கிறது. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் சிறுபான்மை சமூகங்களில் உள்ள தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் மற்றும் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது" என்று கூறினார்.

இது குறித்து ஒன்றிய அரசு, "உண்மையில், கல்வி மற்றும் வேலை ஒதுக்கீடுகள் மத மாற்றங்களை ஊக்குவிக்கும். சிறுபான்மையினருக்கு அத்தகைய உரிமைகளை வழங்குவதை ஒப்புக்கொள்ள முடியாது" என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. சீசர் தாமஸ், "இந்துக்கள் தவிர்த்து சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்கள் SC  இட ஒதுக்கீடு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும்போது கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்கு மறுக்கப்படுவதேன்? அதே நேரத்தில் அரசாங்கம் உண்மையாகவே இப்புதிய திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறதா? அல்லது வருகின்ற மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு தரப்படுகின்ற தேர்தல் வாக்குறுதியா?" என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியாவின்  1.2  பில்லியன் மக்களுள் 201 மில்லியன் மக்கள் இந்த பின்தங்கிய  சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவின் 25 மில்லியன் கிறிஸ்தவர்களில் சுமார்  60  சதவீதம் பேர் தலித் மற்றும் பழங்குடியின  சமூகங்களைச்  சார்ந்தவர்கள்  என்றும்  அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comment