
குடந்தை ஞானி
மும்பையில் உலகின் முதல் ஸ்டுடியோ சிற்றாலயம்
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 22 Feb, 2022
ஜனவரி திங்கள் 28 ஆம் தேதி, மாலை 6.15 மணியளவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையவழி நற்கருணை ஆராதனை பக்தர்கள் மற்றும் புனித பவுலடியார் சபை குருக்கள் முன்னிலையில், மும்பை உயர் மறைமாவட்ட துணை ஆயர் மேதகு ஜான் ராட்ரீக்ஸ் அவர்கள் உலகின் முதல் ஸ்டுடியோ சிற்றாலயத்தை (Studio Chapel) சிறப்பான முறையில் ஆசீர்வதித்து, இறைமக்களுக்கு அர்ப்பணித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் 1 ஆம் தேதி, புனித பவுல் சபை நிறுவுனர் அருள்நிலையாளர் ஜேம்ஸ் அல்பேரியோனின் 50 ஆவது நினைவு நாளன்று, உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்க, மும்பையிலுள்ள புனித பவுலடியார் சபையின் சிற்றாலயத்தில் அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையும், அமைதியும், மன உறுதியும் வழங்கும்படி, இணையத்தில் 30 மணித்துளி நேரலை நற்கருணை ஆராதனை YouTube வாயிலாக உயிர் பெற்றது. இணையத்தில் வெறும் 10 விசுவாசிகளைக் கொண்டு அன்று தொடங்கிய இவ்வழிபாடு, இன்று உலகளாவிய நேரலை ஆராதனை வழிபாடாக, ஆயிரக்கணக்கானோரின் ஆன்மீகத் தாகத்தைத் தணிக்க உதவுகிறது.
இந்த ஸ்டுடியோ சிற்றாலயம் முழுக்க முழுக்க இணைய விசுவாசிகளின் நன்கொடைகளால், ரூ.20 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் ஒளிப்பதிவு வசதி கொண்ட பல சிற்றாலயங்கள் இருப்பினும், இதுவே நேரலை நற்கருணை ஆராதனைக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஸ்டுடியோ சிற்றாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Youtube Channel : St Pauls Multimedia-ல் தினமும் யூடியூபில் மாலை 8.30 மணிமுதல் 9 மணிவரை நேரலையாக ஒளிபரப்பப்படும் “முப்பது புனித மணித்துளிகள்” (Thirty Holy minutes) நற்கருணை ஆராதனையில் பங்கேற்று ஆசீர் பெற்றிடுங்கள்.
Comment