No icon

குடந்தை ஞானி

இந்தியக் கிறிஸ்தவர்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டுகோள்

2022 ஆம் ஆண்டு தொடங்கிய நாளிலிருந்து இதுவரை ஏறக்குறைய 45 நாட்களுக்குள் 53 க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் இந்தியக் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீது தொடுக்கப்பட்டு இருப்பதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. 2022 பிப்ரவரி 15 ஆம் தேதி, ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பானது தனது அறிக்கையில் இவ்வருட துவக்க நாளிலிருந்து இன்று வரை சட்டீஸ்கரில் 12 பேரும், தமிழ்நாட்டில் 10 பேரும், மத்திய பிரதேசத்தில் 8 பேரும் மற்றும் உத்தரபிரதேசத்தில் 7 பேரும் என்று இந்தியக் கிறிஸ்தவர்கள் மீது வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று கூறுகிறது.

இதுபோன்ற சம்பவங்களை நாட்டின் பிரதம மந்திரியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பானது தயார்படுத்தி வருகிறது. ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பின் செய்தி தொடர்பாளர் திரு. A.C. மைக்கேல் அவர்கள்,“ஒவ்வொரு வருடமும், கிறிஸ்தவர்களின் மீதான வன்முறையானது அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர, குறைவதில்லை. 2020 இல் 279 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021 இல் 89 சதவீதமாக உயர்ந்து, ஏறக்குறைய 505 வன்முறைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது இந்த ஆண்டின் துவக்கத்திலேயே, 53 வன்முறை சம்பவங்களும் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்டிருக்கின்றன என்று கூறினார்.

ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பானது 2015 ஜனவரி மாதம், 1800-208-4545 என்ற இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியது. மத அடிப்படைவாதிகளால் துன்புறுத்தப்படுகின்ற, வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்ற சிறுபான்மை கிறிஸ்தவர்களைக் காப்பாற்றுவதற்காக ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பானது, இந்த இலவச தொலைபேசி சேவையை உருவாக்கியுள்ளது. ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பானது இந்திய நாட்டின் நடுவண் அரசானது சிறுபான்மை கிறிஸ்தவர்களின் மீது நடத்தப்படுகிற வன்முறைகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்டங்களை பிறப்பிக்க வேண்டும் என்றும், பிற மத அடிப்படைவாதிகளால் காயப்படுத்தப்படுகின்ற அல்லது வீடுகளை இழக்கின்ற சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கம் இழப்பீடு தர முன்வரவேண்டும் என்ற, பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது என்று திரு. A.C. மைக்கேல் அவர்கள் UCA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Comment