No icon

குடந்தை ஞானி

தற்கொலை வழக்கில் இந்திய அருள்பணியாளர் கைது

வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில், தங்கும் விடுதியின் உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாகக் கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். குவஹாத்தியைச் சேர்ந்த ஜார்ஜ் போர்டோலோய் என்பவர், ஜார்ஜியின் ரிட்ரீட் ஈகோ கேம்ப் எனும் பெயர் கொண்ட தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வந்தார். இவ்விடுதிக்கு அருகே டான் போஸ்கோ பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இவ்விரண்டிற்கும் இடையே ஒரு காலிமனை உண்டு. இந்த காலி இடத்திற்காக தங்கும் விடுதியின் உரிமையாளருக்கும், பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில், டான் போஸ்கோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அருள்தந்தை ஸ்டீபன் மாவேலி, தன்னை தற்கொலைக்கு தூண்டினார் என்று விடுதியின் உரிமையாளர், தனது தற்கொலைக் குறிப்பில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

"இப்பல்கலைக்கழகம் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகத்திற்கும் அருகிலுள்ள நிலத்தின் உரிமையாளருக்கும் இடையில் நிலத் தகராறு ஏற்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பாக அருள்தந்தை மாவேலியிடமிருந்தோ, பல்கலைக்கழகத்திடமிருந்தோ எவ்விதமான அழுத்தமோ அல்லது துன்புறுத்தலோ தரப்படவில்லை. இந்த வழக்கில் இரு தரப்பினருமே தீர்ப்புக்காக காத்திருந்த நிலையில் இவரின் தற்கொலைக்கும், அருள்தந்தை ஸ்டீபன் மாவேலிக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கவுகாத்தி பேராயர் ஜான் மூலாச்சிரா மே 26 அன்று UCA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். தற்கொலை செய்து கொண்டவரின் மகனான பேட்ரிக் போர்டோலோய், அருள்தந்தை மாவேலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தார். 72 வயதான அருள்தந்தை மாவேலி, மே 24 ஆம் தேதி தண்டனைச் சட்டத்தின் 306 வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்திருக்கும் நிலையில், பல்கலைக்கழக அதிகாரிகள் துணைவேந்தருக்கு எதிரான இதுபோன்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தற்கொலைக் குறிப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Comment