No icon

குடந்தை ஞானி

ஸ்டான் சுவாமிக்கு ‘மார்ட்டின் என்னல்ஸ்’ விருது

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள மார்ட்டின் என்னல்ஸ் என்கிற அறக்கட்டளை நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை ஆர்வலர்களை சிறப்பிக்கும் வண்ணமாக, நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும், ‘மார்ட்டின் என்னல்ஸ்என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் பழங்குடி மக்களின் உரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த அருள்தந்தை ஸ்டான் சுவாமியின் பெயரானது இடம் பெற்றிருப்பதில் ஒட்டுமொத்த இந்தியக் கத்தோலிக்க திரு அவையும் மகிழ்கின்றது. "2021-ல் அருள்தந்தை ஸ்டான் உயிரோடு இருக்கும்போதே இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், அது அவரை அடைவதற்கு முன்பே அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்" என்று விருது வழங்கும் நடுவர் குழுவின் தலைவர் ஹான்ஸ் தூலன் கூறினார். சமூக ஆர்வலரும், மறைந்த அருள்தந்தை ஸ்டான் சுவாமியின் சக ஊழியருமான, அருள்தந்தை சேவியர் சோரெங், ஜூன் 2 ஆம் தேதி, ஜெனீவாவில் இந்த விருதை அவர் சார்பாக பெற்றுக்கொண்டார்.

"இந்து சார்பு பாரதிய ஜனதா கட்சியானது, நிலக்கரிச் சுரங்கத் திட்டங்களுக்காகவும், கனிமவளங்களை சுரண்டுவதற்காகவும் அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்களை, அவர்களின் வாழ்விடத்திலிருந்து துரத்துவதற்கு முனைந்தன. இதற்காக இழப்பீட்டுத் தொகை கூட எதுவும் அம்மக்களுக்கு நிர்ணயிக்கப்படவில்லை. இந்த அநியாய செயலைக் கண்டித்து, அம்மக்களின் உரிமைக்காக அருள்தந்தை ஸ்டான் எழுப்பிய குரல் இந்து சார்பு பாரதிய ஜனதா கட்சிக்கு தடைக்கல்லாய் அமைந்தது. இதனால் அவரை இடதுசாரி மாவோயிஸ்ட், தேசவிரோதி என்று வீண் குற்றம் சுமத்தி சிறையில் அடைத்து, அவரது உயிரைப் பறித்தார்கள்" என்று அருள்தந்தை சேவியர் சோரெங் கூறினார். மிக உயரிய விருதை இறந்த பிறகு பெற்று தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ள தந்தை ஸ்டான் சுவாமிகளைக் குறித்துநம் வாழ்வுபெருமையடைகிறது.

Comment