No icon

குடந்தை ஞானி

கட்டாய மதமாற்றம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் கேள்விகள்

அஸ்வினி குமார் உபாத்யாய், இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், டெல்லி பிரிவின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் "பல வெளிநாட்டு நிதியுதவி பெறும் தனிநபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஏழை எளிய குடிமக்களை மிரட்டி, பரிசுகள் மற்றும் பணம் மூலம் ஏமாற்றி அல்லது சூனியம் மற்றும் மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி வெளிநாட்டு மதங்களுக்கு, வெகுஜன மதமாற்றம் செய்வதைத் தடை செய்ய மத்திய மற்றும் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

ஜூன் 3 ஆம் தேதி, நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய குழுவானது இவ்வழக்கை விசாரித்தது. அவ்வாறு விசாரிக்கும்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள், சிறுபான்மை மக்களுக்கு ஆறுதல் தருவதாக இருந்தன. "ஒவ்வொரு குடிமகனும் தனக்கு விருப்பமான மதத்தைப் பிரசங்கிக்கவும், நடைமுறைப்படுத்தவும், பிரச்சாரம் செய்யவும் உரிமையும் சுதந்திரமும் பெற்றிருக்கிறார்கள். அதுதான் நமது அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம்" என்ற சட்டத்தை மேற்கோள் காட்டி, இந்தியாவில் மதமாற்றம் தடை செய்யப்படவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாய்விடம், நீதிபதிகள்நடந்தது கட்டாய மதமாற்றமா அல்லது மதமாற்றமா? உங்கள் மனுவின் உண்மையான பொருள் என்ன? இதற்கான ஆவணங்கள் ஏதேனும் உண்டா? புள்ளி விவரங்கள் ஏதேனும் உண்டா? எத்தனை மதமாற்றங்கள் நடந்தன? யார் மதமாற்றம் செய்தது? யார் மதம் மாறியது? வெகுஜன மதமாற்றம் நடக்கிறது என்றீர்களே, எண்ணிக்கை எங்கே?” என்று கேள்வி கேட்டனர்.

கட்டாய மதமாற்றம் குறித்து, தான் கூறியதை மெய்ப்பிக்க, சமூக ஊடகம் மற்றும் செய்தித்தாள் தகவல்கள் தன்னிடம் இருப்பதாக மனுதாரர் கூறியபோது, "செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை உண்மைகள் அல்ல என்பது சட்டத்தில் தீர்க்கப்பட்ட நிலைப்பாடு. சமூக ஊடகங்கள் தரவு அல்ல. அதை மார்பிங் செய்ய முடியும். 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டவை நேற்று செய்யப்பட்டவையாக காட்டப்படுகின்றன" என்று நீதிபதிகள் கூறினர். நீதிமன்றம், இந்த மனுவை ஜூலை 25 ஆம் தேதி மறுவிசாரணை செய்யவிருக்கின்றது.

Comment