No icon

ஓர் இணை

இணையாக, துணையாக, தூணாக...

 நம் கத்தோலிக்கத் தாய்த் திரு அவை மார்ச் 19, 2021 முதல் ஜூன் 22 ஆம் தேதி, 2022 வரை உரோமையில் பத்தாவது உலகக் குடும்பங்கள் ஆண்டைக் கொண்டாடி மகிழ்ந்தது. (பார்க்க: எதிர்பக்க பெட்டிச் செய்தி)

26.12.2021 இல் திருமண தம்பதியருக்கு ‘அன்பின் மகிழ்ச்சி’ (Amoris Laetitia) (தேடல் வெளியீடு, திருச்சி) மடலை திருத்தந்தை வெளியிட்டு, திருமண வாழ்வில் இன்பத்தும், துன்பத்தும் கடவுள் என்றும் உடனிருக்கிறார் என்று ஊக்குவித்துள்ளார்.

தனி நபராயினும் சரி, குடும்பமாய் வாழ் தம்பதியரும் எச்சூழல்களில் வாழ்கின்றனரோ, அந்த சூழ்நிலை மத்தியில் தாழ்ச்சி, பாசம், பிற மற்ற திறந்த மனதுடன் (மன்னிப்பு, விட்டுகொடுத்தல், பாராட்டு, நற்சொல் - செயல்- பிற) வாழவேண்டிய திருத்தந்தை தனது திறந்த மனதுடன் பயணிக்க விரும்புவதாக அம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம் பாசப்பறவைகளின் சரணாலயம்.

“உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன

  மடந்தையொடு  எம்மிடை நட்பு”

என்ற திருக்குறளின் படி, கணவர் மனைவி உறவு உடலுக்கும், உயிர்க்கும் உள்ள உறவு. அதுமட்டுமல்ல; தாய், தந்தை/ அண்ணன், தம்பி, சகோதரி, பாட்டன், பாட்டி, பூட்டி ... என்ற அனைத்தும் சங்கமிக்கும் இடம் தான் குடும்பம்.

இன்று கூட்டுக்குடும்பங்களைக் காண்பது வானில் வால் நட்சத்திரம் பார்ப்பது போன்று அரிதாகிவிட்டது. நான்கைந்து வருடங்கள் வாழ்ந்த தம்பதியர்க்கு ‘பத்ம பூசன்’ விருது வழங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

சஷ்டிபூர்த்தி கல்யாணம் (அறுபதாம் ஆண்டு) நாளும் நிகழ்ந்த நம் இந்திய மண்ணில், ஒரு கையில் தாலி, மறு கையில் விவாகரத்து மனு என்ற காலத்தில் வாழ்கிறோம்.

ஆகவே, குடும்பம் ஒரு ‘குட்டித் திரு அவை’ என்பது வாய்ச்சொல்லில் மட்டும்தான். திருக்குடும்பம், சிறுகுடும்ப நெறிக்கு வந்து, தெருக்குடும்பம் - தெரிபட்டு நிற்கிறது. நம் கிறித்துவ சமுதாயத்தில் இன்று இச்சவாலைச் சந்திக்கும் நேரம் இது. இக்குடும்ப ஆண்டில் - மண் வாசனையுடன் கூடிய குடும்ப வாழ்வு பற்றிய அறநெறிகள் நமக்கு தேவைப்படுன்றன.

குடும்ப ஆண்டினைக் கொண்டாடும் நாம், திருமணம் பற்றி பேசும் கடவுள் தொடக்கநூலில் 2:18-20லும், சீராக் 36:24லும் காண்கின்ற முக்கியமான சொற்களைப்பற்றி தெளிவு கொள்வோம்.

அவை:

இணை, துணை, தூண்.

அ. இணை

இணை என்பதற்கு இரட்டை, இரண்டு, உவமை, இசைவு, இச்சை, சேர்க்கை, துணை என்றும் பொருள் சுட்டப்படுகிறது.

இணைத்து: - சேர்த்து,

இணையல், இணைதல்.

இணைவு:- ஒளிதீட்டி, கலப்புணர்ச்சி.

இணையம்:- அருத்தல், இணைதல், வருத்துதல், இரங்குதல் என வருகின்றன.

“காதல் தோணியில் இணைந்தோம் நம் கவலை நாம் மறந்தோம்” என்பது திரைப்பாடல்.

துணைவி:- இல்வாழ்க்கையில் நற்குணச் செயலும் வருவாய்க்கேற்ற செலவிடும் பெண்ஆன இல் வாழ்வாள். வாழ்க்கை துணைவி (குறள் 51)

ஆ. துணை:

ஒருவர்க்கு துன்பம் வருங்காலத்து அதனை நீக்க, நமது நெஞ்சம் துணையாக வராவிடில், வேறு துணை செய்பவர் யார்? (குறள் 1299 மற்றும் 41,42)

துணைவன்: உதவிக்கரம் நீட்டுபவன், கடவுள், தலைவன், தோழன், மந்திரி

துணைவி: சகோதரி, தோழி, மனைவி

துணைவர்:- உற்றார், சகோதரர், தோழா, துணை என்று கூறும்போது ஆண், பெண் (கணவர், மனைவி) ஒருவர்க்கொருவர் அடிமை அல்ல என்பது ஆகும்.

இ. தூண்:

(ஸ்) தம்பம், கம்பம், பற்றுக்கோடு, எழு, கால் தூண், அளவு ஆதரவு, ஆயுதமுனை, இணை உதவி, ஒப்பு, சகாயம், சல்லியம், சோடு.

குடும்பத்தின் மகிழ்வுக்கு மந்திரக்கோல் மனைவி என்பவரா? கணவன் என்பவரா? என்ற பட்டிமன்ற விவாதப்பொருளாக உள்ளது போல் தோன்றுகிறது. ஆனால், நற்செய்தியின்படி பார்த்தால், “மனிதன் தனிமையாக இருப்பது நன்றன்று. அவனுக்கு ஏற்ற துணையை உருவாக்குவேன்” என்று, கடவுள் கூறினார்.

ஏன் தெரியுமா? கடவுள் தமக்கு முன் படைத்த பறவை, விலங்கு, உயிரினம் யாவும் ஜோடியாக இணைந்து, கூடிக் குலாவி, வாழ்கிறதைப் பார்த்தார். கடவுள் அஃதினை உணர்ந்துதான் மனிதனுக்கும் ஓர் இணை தேவை என்பதை அவனிலிருந்தே இணையைத் தந்து மகிழக்கண்டார் (தொநூ 2:18,19,20).

தாய் தந்தையை விட்டு தன் மனைவியோடு ஒன்றித்திருப்பார். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். (தொநூ 2:23,24).

“நல்ல மனைவி” என்ற தலைப்பில் “உறுதியான அடிகளின்மேல் அமைந்த அவனுடைய அழகான கால்கள் வெள்ளித்தலத்தின்மேல் நிற்கும் பொன் தூண்களைப் போன்றவர்” (சீஞா 26:18).

‘நல்ல மனைவியை தேர்ந்துகொள்ளல்’ என்ற தலைப்பில் “நல்ல மனைவியை அடைகிறவன் உயர்ந்த உடைமையைப்பெறுகிறான்; தனக்கு ஏற்ற துணையையும் ஆதரவு தரும் துணையையும் அடைகிறான்” (சீஞா 36:24,25) என்று திருவிவிலியம் சுட்டுகிறது.

ஆண்டவனின் படைப்பையும் விருட்சங்களையும் ஆய்ந்து பார்த்தால் எதுவும் தனித்து விடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை”(எசா 34:16)

கற்புடைய மனைவியோடு இல்லின் கண் இருந்து செய்யும் அறம் இல்லறம்” - சிலம்பு.

இல்லறமல்லது நல்லறமல்ல”-ஒளவை.

குடும்பம் கோவில் ஆவதும், குப்பை ஆவதும் பெண்கையில்”-பாவேந்தர்.

இல்லறம் என்பது ஆணும், பெண்ணும் ஒவ்வொருவர்க்கும் ஏற்ற துணைக்காகவும், அதனைத் தாங்கிப் பிடிக்கும் ஸ்தம்பமாக (தூண்) இருக்கவே ஏங்கித் தவிக்கிறான் என்பதை தன்முன் வாழும் உயிரினங்களில் வாழ்வியல் காட்டுகிறது.

கடவுளின் பேரன்பின் வெளிப்பாடு தன் சாயல் - மனித இனம்! தம் இரு துணைகள் ஒவ்வொருவரையும் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக இருவரும் இருக்க வேண்டும். என்று கருதி, அதன் ஒன்றிணைப்பே திருமணம் என்று இறைவன் உண்டாக்கினார்.

காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்!, கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்” -பாரதி.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு  (குறள் 1103. )

இஃது போன்று எண்ணிலா கருத்தியல்கள் எட்டுத்தொகையில் உள்ளன. படியுங்கள்.

“ஒரே இணை, வாழ்நாள் முழுக்கத்துணை”

 வடக்கு, மத்திய இந்தியாவில் “சாரஸ் கிரேன்” (sarus crane) எனப்படும் “சரசப் பெருங்கொக்கு” உண்டு. இதுவே உலகில் உயரமான பறவை. உயரமாகவும் பறக்கும். ஆண்,பெண் ஒரே மாதிரியாகவே தோற்றம் கொண்டவை.

ஜூலை-அக்டோபரில் இணை சேரும் காலம். நான்கைந்து முட்டைகளை குளம், குட்டை, நீர் நிலையில் இடும். அதில் இரு மூன்று மட்டுமே குஞ்சுபொறிக்கும். பேணுவதில் சமபங்குண்டு. இணை சேரும் காலத்தில் நடனம், அவை கொடுக்கும் அழைப்பு (Signal) அலாதி.

ஆண், பெண் ஒருமுறை இணைந்து விட்டால், வாழ்நாள் முழுதும் ஒன்றினார் வாழ்க்கைதான். ஏரிகள், குளங்கள், வயல் “ரியல் எஸ்டேட்” ஆனதால் இவ்வினம் அருகி உள்ளது. நம்மூரில் வாழும் சமய நல்லிணக்கப்புறாவின் வாழ்வும், அன்றில் பறவையும், ஏன் யானையின் வாழ்வும் ஒரே இணை ஒரே துணை தான்.

நம் மனிதம் ச்சீ...!!!

இலியானஸ் என்ற ஒருவகை கிளி துணை இழந்து பலநாள் தவித்து பின் மறுதுணை தேடும். விட்டியலில் என்ற பறவை தன் துணை இறப்பின் மரணம் தழுவும் (உடன்கட்டை). தன் துணை தவிர்த்து பிறதுணை தேடாது, முகம்கூட சீண்டாத புறா பறவையும், அன்றிலைப் பார்த்து திருந்தவே குடும்ப ஆண்டு அழைப்பு விடுக்கிறது.

வாழ்வின் இறுதிவரை வருகிற உறவு துணை, இறைவன் அனுமதிக்கும்வரை வாழ்க்கைத்துணைவர், வாழ்க்கை துணைவி மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

கணவன், மனைவி சேர்ந்து இருந்தால், ஆண் துணையின்றி பெண்ணும், பெண் துணையின்றி ஆணும் வாழ்வது இயற்கைக்கு முரண். ஒன்றுமட்டும் போதும் என்றால் ஏன் இரண்டு? இரண்டின் இணைப்பில் தான் ஒன்று உருவாகும்.

பழம்பெரும் கோவிலுக்குள் போகிறோம். பிரம்மாண்டத் தூண்களைப் பார்க்கிறோம். இத்தூணில் சாய்ந்து, அருகில் நின்று, முழங்காலிட்டு நம் முன்னோர், பாட்டி, பாட்டன் இறைவேண்டல் செய்தனர் என்ற நினைவு எழவேண்டும். தூண்களை, அதன் மேல் விதானத்தைப் பாருங்கள்!. இடைவெளிவிட்டே இருக்கும். மேலே அவைகளை மேல் விதானம் கூரைவளைவு இணைந்து இருக்கும்.

இசைக்கருவி, வீணை, பிடில்களைப் பாருங்கள். அதன் நரம்புகள் விலகி, ஒன்றுடன் ஒன்று விலகி இருக்கும். இரண்டும் பின்னிவிட்டால் இசை வராது. வண்டியோட சக்கரம் இணையாக இருக்க வேண்டும். இணைவு மாறின் வண்டி நகராது. நம் ஊர் உழவு மாடும், வண்டியும் சொல்லும் பாடம். இணைந்திருங்கள் உங்கள் இணைப்பில் சற்றே இடைவெளி இருக்கட்டும் என்கிறார் உருது கவி கலில்ஜிப்ரான்

"Stand together yet not too near together, for the pillars of the temple stand apart; Even as the strings of a lute are alone though they quiver with the same music"  (Kahlil Gibran)

குழந்தைகள் உங்கள் மூலம் வந்தவர்கள். உங்களில் இருந்து வந்தவர் அல்லர் - கலில்ஜிப்ரான் தரும் சிந்தனை.

குடும்ப உறவுகள் பற்றி தமிழ் இலக்கியங்களில் பல நூறு காணக் கிடக்கிறது. நம் முன்னோர்களின் வாழ்வியல் அறங்களே சங்க நூற்கள்.

நம் குடும்பங்களில் பல துணைகளுக்கு இரவு உறவு உண்டு. ஆனால், இதய உறவு அறவே இல்லை.

வாகனத்தை, வீட்டை மாற்றுவதுபோல் இணையை மாற்ற வேண்டாம்.

சுவருக்குள் இருக்கும் கற்கள் ஒன்றுக்கொன்று அனுசரணையாக இருப்பதுபோல் மனித உறவும் இருக்க வேண்டும். ஒருகல் முரண்பட்டாலும் சுவரில் விரிசல் தோன்றும். மனித உறவு அப்படிப்பட்டது” - நபிகள்.

5.5.1994 அமெரிக்கா உலக குடும்ப தினம் ஆண்டுதோறும் மே 15 இல் கொண்டாடத் துவங்கியது. குடும்பம், காதலர், அன்னையர், தந்தையர் மற்றும் நாள்தோறும் தினங்கள் கொண்டாடுதல் நல்லதா? இதனால் சாதித்தது என்ன? சிந்திப்பீர்.

மலர் விட்டுத்தாவும் வண்டுகளும், வேலி தாண்டும் வெள்ளாடுகளும் பெருகிவிட்ட இந்நாளில் நாம் நம்மிருவரும் இணையாக, துணையாக, தூணாக இருப்போம்.

சிறகு முளைத்தவுடன் குழந்தைகள் பறந்து விடும். உறவுகள் முறிந்து விடும்.

கணவன், மனைவி இருவரும் கடவுள் குறித்த நாள்வரை தூணாக இருக்கப் பழக வேண்டும். முதியோரான தாயும், தந்தையும் மட்டும்தான் தூணாக, துணையாக இருக்க முடியும்.

எந்தப் பறவையும் இரு கூடுகள் கட்டுவதே இல்லை. ஒருகூடுதான் கட்டும். ஆனால், மனிதன் மட்டுமே தெருவுக்கு, ஊருக்கு, நகரத்துக்கு என 4,5 வீடுகள் கட்டுகிறான். காரணம் தம் மக்களைப்பற்றி, வாரிசு பற்றி நம்பிக்கை குறைவு. இதை உணர்வோம்.

இணையர்களே, தூண்களே, துணைவர்களே! வயிற்றையும், கர்ப்பப்பையையும் நிரப்புவது தாம்பத்தியம் அல்ல; மனசுகள் (மனைவி-கணவர்) நேசிப்பது மட்டும் போதாது.

மனைவி-கணவர் உணர்கிற மாதிரி வெளிப்படுத்துங்கள். காதலன் முத்தம் பயம் கலந்தது, கணவன் முத்தம் அன்பு கலந்தது.

குடும்பம் என்பது, கூட்டணி அரசு - எதிர் கட்சியால் கவிழாது. உடன் பங்குதாரர்களால்தான் கவிழும். அவரவர் எல்லையை உணர்ந்து நடந்தால் நல்லது. இந்த தேசம் தந்த அறம் அன்பு. ஆகையால் சமூகத்தை ஆதரிப்பது தான் துறவு.

கணவன், மனைவியின் பேச்சுக்கள் தான் தாம்பத்தியத்துக்கு தேவை. அம்மாபோன பின், தனக்கென்று இருப்பவள் மனைவி என்ற சிந்தனை வந்தாலே இல்வாழ்க்கை இனிது - ஒருவரை ஒருவர் பாராட்டி வாழுங்கள். குடும்பம் குதுகூலமாகும்.

ஒருதடவை நடிகர் நடிகைகளின் கேள்விகளுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பதில் தந்தார்.

கேள்வி: ஒரு மனிதன் ஒரு காலகட்டத்தில் தன் தாய், தந்தை துணையுடன் வளர்க்கப்படுகிறான். பள்ளி, கல்லூரி, தொழில் சம்மந்தப்பட்ட நண்பர்கள் துணையுடன் வாழ்கிறான். இல்லற வாழ்க்கையில் தன் மனைவி துணையுடன் உயர்கிறான். தான் பெற்ற குழந்தைகட்கு தூண் போன்று துணையாக இருக்கிறான். கடைசியில் பல்லோர் துணையுடன் சென்றடைகிறான். இதில் யாருடைய துணை சிறந்த துணையென்று கருதுகிறீர்கள்? அதற்கு கலைஞர் பதில்:

துணையின்றி வந்தவர் துணையில்லாமல்தான் போகிறார்”-

 சிந்திக்க...

சொந்த வீடு என்பதன் பொருள் என்ன தெரியுமா? நாம் பணம் கொடுத்து வாங்கிய வீடோ, கட்டிய வீடோ - பத்திரப் பதிவு பெற்ற வீடோ அல்ல. - சொந்தங்களான உறவுகள் வந்து போகும் வீடுதான் சொந்த(ம்) வீடு என்பதை நாம் உணர்வோம்.

திருமணத் தம்பதியர்க்காக திருத்தந்தை பிரான்சிஸ் சொல்கிறார்: “திருமண வாழ்வின் இன்ப, துன்பங்களில் கடவுள் எப்போதும் உடனிருக்கிறார்”.

இயேசு, அன்றாட வாழ்வில் பிரசன்னமாய் வாழ்கிறார். குடும்ப அன்பு குறித்து திருத்தந்தை வழங்கிய “அன்பின் மகிழ்ச்சி” எனும் திருத்தூதுவில், திருமணத்து குடும்பம் தோற்றம், திருமணம் அருள் அடையாளம், திரு அவை முன்னிலையில் கணவர், மனைவியர் தற்கையளிப்பும் திரு அவையுடன் ஒப்பிடுதலும் (திருமணம் எனும் அருள் அடையாளம் 71,72,73) குடும்பத்தை பேணுவதில் இருவரின் உரையாடலும், கவனமுடன் செவிமடுத்தல், பொறுமை, வார்த்தைகளை விழுங்குதல், புரிதல் போன்ற நற்குணமும், அடுத்தவர்க்கு உண்மையாக முக்கியம் தருதல் திறந்த மனதும், பிறரைக் காயப்படுத்தாமையும், தன் துணைவர்க்கும், பிறர்க்கும் அன்பு, அக்கறைக் காட்டுவதும், துணைவர்களுக்கு இடையே பேச்சு உரையாடல் (திருமணம் எனும் அருள் அடையாளம் எண் 136-141) இவையாவும் கடவுளுக்குரிய குடும்பத்துக்கு மிகமிக தேவை என்று கூறப்பட்டுள்ளது.

துணைவர்கட்கு இடையே உரையாடல் கனிந்த குலாவிய பேச்சு காதலிலும் செய்கின்ற திருமண பந்த நாளின் முதல் 3,4 மாதங்களில் தான் இருக்கும் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்! தெரியாமலா நம் முன்னோர் சொல்லிவைத்தனர்.

துணைவர்களே! முதுமையில் தொடுதல் ஸ்பரிச  உணர்ச்சிதான் குடும்ப உறவை வளர்த்தெடுக்கும் - திருக் குடும்பமாக வாழலாம். தெருக்குடும்பம் வேண்டாம். அருங்குடும்பமாக இருப்போம்!அறுக்கும் குடும்பம் வேண்டாம்.

ஒன்றனகூறு உடுப்பவராயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” (கலி)

“செம்புலப் பெயல்நீர்போல் அன்புடைய நெஞ்சம் கலந்தனவே” செம்மண்ணில் மழைநீர் பட்டதும் செந்நீர் ஒன்றிணைவது போல் நாம் கூடினோம்” என்று, பொருள் பாட்டு மட்டுமல்ல; நூணுகிப்பார்த்தால், நீயும் நானும் ஒருமனப்பட்டால் மக்கட் பேறு வாய்க்கும். குடும்பம் என்ற வேர் உருவாகும் என்றும் தொனயீக்கிறது (குறுந்தொகை).

கணவனைக் கைப்பிடி நாயகன் என்பார் பட்டினத்தார்.

“கைவிடும் நாயகன் - நாயகியாக இல்லாது வாழ்வோம். இல்வாழ்க்கையின் மங்கலம் - நல்ல மக்களைப்பெறுதல் தான் (வளர்ப்பிலும்) நல்ல அணிகலம்.

 செயலாக்குவோம்.

அன்பு இல்லா வாழ்க்கை ஒரு பட்டமரம்.

குடும்பம் ஒரு குட்டித்திரு அவை! மனதில் கொள்வோமா?!!

Comment