No icon

தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழு

அருள்திரு.Sஅருள்சாமி அவர்களின் மரணத்திற்கு தமிழக ஆயர் பேரவை -திருவழிபாட்டுப் பணிக்குழுவின் ஆழ்ந்த இரங்கல்

தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழுவின் சார்பாக வணக்கம்.

தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழுவின் முன்னாள் பொதுச் செயலாளரும் புனித பேதுரு பாப்பிறை குருமடத்தின் திருவழிபாடு பேராசியருமான அருள்பணி.எஸ்.அருள்சாமி அவர்களின் மரணச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். அவரது மரணம் தமிழகத் திருஅவைக்கு பேரிழப்பாகும்.  அகில இந்தியத் திருஅவை அளவில் திருவழிபாட்டிற்கும் இறையியலுக்கும் அவர்தம் பங்களிப்பை மறக்க இயலாது. திருஅவையின் கற்பிதங்கள் சார்ந்து திருவழிபாடு சம்பந்தமான முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில்களைத் தந்தார்.  அவர் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் திருவழிபாட்டில் புலமைப் பெற்ற அறிஞராக அவர் அறியப்பட்டார்.  ஆங்கிலம் மற்றும் தமிழில் திருவழிபாட்டுக் கல்வியைக் கற்பிப்பதிலும் கருத்தரங்கங்கள் நடத்துவதிலும், அறிவியல்ரீதியான ஆய்வுக்கட்டுரைளை வழங்குவதிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார்.  புனித பேதுரு பாப்பிறை குருமடம், கருமாத்தூர் கிறிஸ்ட்ஹால் குருமடத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், அகில இந்திய ஆயர் பேரவையின் (CCBI) துணைச் செயலாளராகவும் திண்டிவனத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குமுவின் பொதுச் செயலாளராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.

இறையியல் சம்பந்தமாகவும் திருவழிபாடு சம்பந்தமாகவும் பல்வேறு கட்டுரைகளையும் நூல்களையும் இவர் படைத்துள்ளார். 1988 முதல் 1991 வரை தமிழக ஆயர்பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழுவின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய காலத்தில்,, தமிழில் மிகவும் புகழ் பெற்ற நூலான ‘திருப்பலி:கிறிஸ்தவ வாழ்வின் ஊற்று’  (1988) என்னும் நூலை படைத்தார். திருப்பலி பற்றிய மிகச் சிறந்த வழிகாட்டி கையேடாக இது இன்று வரை அறியப்படுகிறது.  தமிழ் மொழியில் திருப்பலி நூல் மற்றும் வாசக நூல்களின் மொழிபெயர்ப்புக்கு அண்ணாரது பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது.

தோழன் மாதப் பத்திரிகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இவர் கட்டுரைகளைப் படைத்திருக்கிறார். நம்  வாழ்வு வார இதழில் கடந்த ஆண்டு டிசம்பர் வரை கட்டுரைகளைப் படைத்திருக்கிறார். திருவழிபாடு சம்பந்தமாக ‘பலி வாழ்வாக வாழ்வு பலியாக’  என்னும் நூலும் புனித கன்னி மரியாவின் விழாக்கள் என்னும் நூலும் குருக்கள், துறவறத்தார் மற்றும் குருமாணவர்கள் மற்றும் நவத்துறவியருக்குப் பாடநூலாக உள்ளது இங்கே பாராட்டத்தக்கது.  தம்மால் நூல்களை வாசிக்கவும் எழுதவும் முடிந்தவரை இறையியல் மற்றும் திருவழிபாட்டிற்கு இவர் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இந்தியத் திருஅவைக்கு, குறிப்பாக தமிழகத் திருஅவைக்கு இவர்தம் மரணம் மிகப்பெரிய பேரிழப்பாகும். சிறப்பாக கும்பகோணம் மறைமாவட்டத்திற்கு பேரிழப்பாகும். கும்பகோண மறைமாவட்ட ஆயர் மேதகு F.அந்தோனிசாமி அவர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் அருள்தந்தையின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எம்முடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். உயிர்த்த ஆண்டவர் அவருக்கு முடிவில்லா வாழ்வை அளிப்பாராக.

மேதகு பேராயர் அந்தோனி ஆனந்தராயர்

தலைவர். திருவழிபாட்டுப் பணிக்குழு

அருள்முனைவர் எஸ்.அற்புதராஜ்

பொதுச்செயலாளர். திருவழிபாட்டுப் பணிக்குழு

தமிழக ஆயர் பேரவை

(வாழ்க்கைக் குறிப்பு : அருள்பணி.எஸ்.அருள்சாமி அவர்கள் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள விழப்பள்ளம் என்னும் ஊரில் மார்ச் 31, 1938 அன்று பிறந்தார். ஏப்ரல் 22.1965 அன்று குருவாக குடந்தை மறைமாவட்டத்திற்காக திருநிலைப்படுத்தப்பட்டார்.  திருவாலந்துறை, காட்டூர் இராமநாதபுரம், ஆலம்பாக்கம், அய்யம்பேட்டை, கபிரியேல்புரம் ஆகிய பங்குகளில் பங்குத்தந்தையாகப் பணியாற்றியுள்ளார். புனித பேதுரு பாப்பிறை குருமடத்தில் இறையியல் பேராசிரியராகவும், கருமாத்தூர் கிறைஸ்ட் ஹால் குருமடத்தில் மெய்யியல் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அகில இந்திய ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது அடக்கச் சடங்கு மே 04, இன்று மதியம் மூன்று மணிக்கு அவர்தம் சொந்த ஊரான விழப்பள்ளத்தில் நடைபெறுகிறது).

Comment