No icon

ஊடகச்  சுதந்திர தினம்- மே 03 - 02.05.2021

ஊடகச்  சுதந்திர தினம்- மே 03
அருள்சகோதரர்
பிரவின் குமார்,  சே.ச
JPLI கஸ்தம்பாடி.

 

மெய்யியலாளர் பிளேட்டோ, மனிதச் சுதந்திரத்தைப் பற்றி விளக்க குகை உவமையைக் கூறுவார். ஓர் இருண்ட குகையில் சில மனிதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு அடிமைகளாக கட்டிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பின்புறம் அணையா நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவர்களால் எந்தப் பக்கமும் திரும்ப இயலாது. அந்த நெருப்புக்கும் இந்த மனிதர்களுக்கும் இடையே சில மனிதர்கள், மற்றும் மிருகங்கள் என பல நடந்து செல்கின்றன. அப்படி கடந்து செல்பவர்களின் நிழல் இந்த சிறைப்பட்ட மனிதர்களுக்கு முன்பு உள்ள சுவரில் படுகின்றது. அந்த நிழலைப் பார்க்கும் இந்த சிறைப்பட்ட அடிமைகள், அந்த நிழல்தான் உண்மை என நம்புகின்றனர். வெளியில் இருந்து யாராவது வந்து நீங்கள் காண்பது உண்மையல்ல என கூறினாலும் அந்த அடிமைகள் அதை நம்பத் தயாரில்லை. மாறாக உண்மையை எடுத்துக் கூறியவரை எள்ளி நகையாடுகிறார்கள்.
ஊடகச் சுதந்திரத்திற்கும் இந்த உவமைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? இந்த உவமையில் வரும், அடிமைகளுக்கு ஞானம் புகட்ட விரும்பும் அறிவாளிகள் போல, ஊடகம் உண்மையை அறியாமல் இருக்கும் மக்களுக்கு உண்மையைக் கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால், இன்றைய ஊடகங்கள் அந்தப் பணியைச் செய்கின்றனவா? அதைச் செய்வதற்கானப் போதிய சுதந்திரம் இன்றைய ஊடகங்களுக்கு இருக்கின்றனவா? எனும் வினாக்களுக்கு இந்தக் கட்டுரையில் விடைத் தேட முயற்சி செய்வோம்.
புத்தகம், செய்தித்தாள், மாத இதழ்கள் முதலியன அச்சு ஊடகங்கள் (Print Media) என அறியப்படுகின்றன. இவையே ஊடகங்களுக்கு முன்னோடி. உ.ம். ‘நம் வாழ்வு’ பின்னர் வானொலி, தொலைக்காட்சி, கணினி, இணையம் என அதன் சிறகுகள் விரிந்து கொண்டே இருக்கின்றன. இணையத்தின் அபரிவித, அதீத வளர்ச்சியால் விளைந்தவை, முகநூல் (Facebook), புலனகம் (WhatsApp) உள்ளிட்ட சமூக ஊடகங்கள். பொதுவாக ஊடகங்களில் எழுதுபவர்களும் அதன் வழி மக்களுக்கு செய்திகளைப் பகிர்பவர்களும் "ஊடகவியலாளர்கள்" என அறியப்படுகிறார்கள். ஊடகங்கள் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இது. இப்ப வாங்க இந்த ஊடகம் இன்னைக்கு என்ன நிலையில இருக்குன்னுப் பாப்போம்.
ஒரு காலத்தில் மறுநாள் காலையில் செய்தித்தாள் வந்தா தான், மொதநாள் உலகத்துல என்ன நடந்ததுன்னு நமக்குத் தெரியும். கொஞ்சம் தொழில் நுட்பம் வளர்ந்தபின், அன்றன்று மாலையே செய்திகள் தெரிந்துகொள்ள முடிந்தது. பின்னர் தொலைக்காட்சிகளின் வரவால் ஒரு குறிப்பிட்ட நேரங்களில் செய்திகளை காணொளியா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சோம். ஏறக்குறைய இந்த நாட்கள் வரையில் இந்த ஊடகங்கள் சொல்வதுதான் உண்மை. ஆனா, இணையம் எப்ப அதீத வளர்ச்சி அடைந்ததோ அப்ப, எல்லாமே மாறிப் போச்சு. இணைய வளர்ச்சி நல்லதுதான். கட்சிக்கு ஒரு தொலைக்காட்சி, மதத்துக்கு ஒரு தொலைக்காட்சின்னு அவங்க விருப்பப்பட்டத உண்மையினு இந்த உலகத்துக்கு சொல்ல ஆரம்பிச்சாங்க.
இந்த இக்கட்டான சூழல்லதான், இணையத்தின் பயன் சாமானியனையும் வந்தடஞ்சது. அதோட இந்த திறன் பேசிகள் (Smart Phones) ஒருவரமா அமைஞ்சு, ஒவ்வொரு மனிதனும் ஊடகமா மாறுனான். ஊடகங்கள் கூறுவதில் உள்ளவற்றின் உண்மை தன்மையை உடனுக்குடன் மனிதனால பரிசோதித்துப் பாக்க முடிந்தது. எது உண்மையினுத் தெரிஞ்சுக்க முடிந்தது. இதோட முடிஞ்சதா? அதான் இல்லை. எப்ப எல்லாரும் ஊடகமா மாறுனோமோ அப்பவே பொய்த் தகவல்கள் பலவும் பரவ தொடங்கிடுச்சு. உயிரோட இருக்கிற ஒருதலைவரின் இறப்பு செய்தி முதல், சாத்தியமே இல்லாத இலவச பரிசுகள் பற்றிய கவர்ச்சியானத் தகவல் வரை எல்லாமே ரொம்ப பிரபலம் ஆகத் தொடங்கியது.
சரி, இந்த ஊடக வரலாறுக்கும் ஊடகச் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்? பின்புலம் இல்லாம எந்த ஒன்னையும் தெரிஞ்சுக்க முடியாது இல்லையா! அதுக்குதான். நமது பக்கத்துல கேட்ட இரண்டு கேள்விகள்ல முதல் கேள்வி என்ன? (அப்படியே இரண்டாவது பத்திவரைப் போய் நினைவூட்டிட்டுவாங்க) ஊடகம் அதனோட வேலைய சரியா செய்திருந்தால் மக்களுக்கு ஊடகத்தைத் தாண்டிய வேறொன்றின் தேவை வந்திருக்காது. மக்களும் தாங்களே ஊடகமா மாறி இருக்கமாட்டாங்க. சரி, ஊடகம் தன் பணியை, உண்மையை உண்மையாய் கொடுக்க முடியாததுக்கு காரணம் என்ன?
இந்த கேள்விக்கு பதில் தான் ஊடகச் சுதந்திரம். இன்று மட்டுமல்ல பல நூற்றாண்டுகளாகவே ஊடகத்தின் குரல் வளை நெரிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறது. ஆதிக்கவர்க்கமும், ஆளும் வர்க்கமும் தங்களுக்கு சாதகமாக கருத்துகளை வெளியிடும் ஊடகங்களை ஆதரிப்பதும், இவர்களின் தவறுகளைக் கேள்விக்குள்ளாக்கும் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பதும் ஊடகங்கள் மீதான அன்றைய அடக்குமுறை. ஊடகங்களை விலைக் கொடுத்து வாங்கி தனக்கு ஆதரவாக மட்டுமே கருத்துத் தெரிவிக்க வைப்பது இன்றைய அடக்குமுறை. அப்படியில்லாத சூழலில் அந்த ஊடக நிறுவனமோ, ஊடகவியலாளரோ இல்லாம ஆக்கப்படுவார்கள். கர்நாடகாவைச் சார்ந்த ஊடகவியலாளர் கௌரிலங்கேஷ் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. எது எப்படியோ, நமக்கு சுதந்திரம் இருக்கோ இல்லையோ, ஊடகத்தின் சுதந்திரம் பறிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஆயிடுச்சு. இந்த சுதந்திரம் திரும்பக் கிடைக்குமா? இதற்கு பதில் யாருக்கும் தெரியாது. அப்ப, உண்மைத் தகவலை எப்படி தெரிஞ்சிக் கொள்வது? அதற்கு இரண்டே வழி தான் இருக்கு.
1. நாம் எங்க எதை வாசித்தாலும் சரி, யார் மூலம் எதைக் கேட்டாலும் சரி முதல்ல அந்த தகவல் எவ்வளவு உண்மை என ஆராய்ந்து, சந்தேகம் வரும் பட்சத்தில கூட இரண்டு கேள்விக்கேட்டு உண்மையை அறிய முற்படலாம். அதவிடுத்து அங்க படிச்சேன், அவுங்க சொன்னாங்கன்னு எல்லாத்தையும் நம்ப ஆரம்பிச்சோம்னா, ஒருநாளும் உண்மைத் தகவல நாம் தெரிஞ்சுக்கவே மாட்டோம்.
2. இந்த இரண்டாவது முதலாவதைவிட ரொம்ப முக்கியம்.  நம் தலைமுறை தகவல்கள் உருவாக்குவதைவிட, தகவல்கள கடத்துவதுல (Forward) கைத்தேர்ந்தவர்கள். நம் அலைபேசியில் பெற்ற தகவல்களோட உண்மைத் தன்மையை கேள்விக்கு உட்படுத்தி, உண்மைத் தகவல்களை மட்டும் பகிரத் தொடங்கினால் பல பொய் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கலாம்.
"ஊடகச் சுதந்திர தினம்" யாரோ எங்கயோ அமர்ந்து எழுதும், படைக்கும் ஊடகவியலாளர்களுக்கு மட்டும் உரியது அல்ல. நம் ஒவ்வொருவருக்குகே உரியது. எப்ப திறன்பேசிகளை பயன்படுத்தத் துவங்குகிறோமோ அப்போதே நாமும் ஊடகவியலாளர்கள் தான். எனவே, உண்மை தகவல்கள பகிர்வதும், ஊடகச் சுதந்திரமாண்பைக் காப்பதும் நம் கடமை. பொறுப்பாய், சுதந்திரமாய் செயல்பட வேண்டியது எங்கோ இருக்கும் வரையறுக்கபட்ட ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல, வரையறுக்கப்படாத தினசரி ஊடகவியலாளர்களான நாமும் தான்.

Comment