No icon

குடந்தை ஞானி

மதமாற்ற தடைச்சட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்

இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவரும் வேளையில், அரசியல்வாதிகள், மீண்டும், மீண்டும், மதமாற்றத்தைப் பற்றிப் பேசி, மக்களின் வன்முறை உணர்வுகளைத் தூண்டிவருவது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று, பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்

கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை, கர்நாடகா மாநில அவை வருகிற வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவிருக்கும் சூழலில், இந்தச் சட்டம், அரசியல்வாதிகளின் கற்பனையில் உருவான கதையிலிருந்து தோன்றியது என்றும், இது, இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு  முயற்சி என்றும், பேராயர் மச்சாடோ அவர்கள் கூறினார்.

மாநில அவையில் நடைபெறவிருக்கும் இந்த விவாதத்தை கண்டனம் செய்து, அனைத்து கர்நாடக கிறிஸ்தவ ஒருங்கிணைப்பின் உறுப்பினர்கள், பெங்களூருவின் புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்திற்கு முன், அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதசார்பற்ற கொள்கைகளை முன்னிறுத்தும் இந்திய அரசியல் சட்டங்களுக்கு இழிவைத் தேடித்தரும் இத்தகைய ஆபத்தான சட்டத் திருத்தங்களை எதிர்த்து, அனைத்து நல்மனம் கொண்டோரும் குரல் எழுப்பவேண்டும் என்று, பெங்களூரு பேராயர், இந்தப் போராட்டத்தின்போது அழைப்பு விடுத்தார்.

அண்மைய ஆண்டுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்துவரும் வன்முறைகளை, இத்தகைய சட்டத் திருத்தங்கள் மேலும் அதிகரித்துவிடும் வாய்ப்புக்கள் உண்டு என்று, பேராயர் மச்சாடோ அவர்கள் கவலை தெரிவித்தார். கர்நாடகா மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 15,000 முதல் 20,000 வரை கூடியுள்ளதாக, அரசியல்வாதிகள் தரும் விவரங்களுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை என்று கூறிய பேராயர் மச்சாடோ அவர்கள், மத மாற்றங்கள் நடைபெறுவது உண்மையானால், 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1.91 விழுக்காடாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டு 1.87 விழுக்காடாக குறைந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

Comment